PulseNews
அரசியல்

"ஒரே நாடு, ஒரே நேரம்": இந்தியாவை ஒரே கடிகாரத்தின் கீழ் கொண்டுவர முயற்சி; புதிய 'ஐ.எஸ்.டி ' விதிகள் கூறுவது என்ன?

எழுதியவர்: அனகா ஜெயகுமார் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் 27 அன்று 'சட்ட அளவியல் (இந்திய திட்ட நேரம்) விதிகள் 2026' (Indian Standard Time) என்ற புதிய விதிகளை அறிவித்தது. இதன் மூலம் நாடு முழுவதும் நிர்வாக, சட்ட, வணிக மற்றும் பிற அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்கான ஒரே நேரக் குறிப்பாக 'இந்திய திட்ட நேரம்' (ஐ.எஸ்.டி - IST) அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் படிக்க: இந்த விதிகள் அரசிதழில் வெளியிடப்பட்ட 180 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வரும். இந்த இடைப்பட்ட காலத்தில் அரசுத் துறைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற முக்கிய அமைப்புகள் தங்கள் கணிப்பொறி மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளை இந்த நேரத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும். இந்தியாவில் ஏற்கனவே ஐ.எஸ்.டி நடைமுறையில் உள்ளது. அப்படியிருக்க, இந்த புதிய விதிகள் இயந்திரங்கள் மற்றும் முக்கியக் கட்டமைப்புகளில் என்ன மாறுதல்களைக் கோருகின்றன? துல்லியமான நேர ஒத்திசைவு ஏன் அவ்வளவு முக்கியம்? இந்திய திட்ட நேரம் (ஐ.எஸ்.டி) எவ்வாறு கணக்கிடப்படுகிறது? சி.எஸ்.ஐ.ஆர் - தேசிய இயற்பியல் ஆய்வகம் (என்.பி.எல்) தான் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நேரத்தின் பாதுகாவலராக இயங்குகிறது. இது உலகளாவிய ஒருங்கிணைக்கப்பட்ட நேரத்தின் (யு.டி.சி - UTC) இந்திய வடிவமான யு.டி.சி (NPLI) ஐப் பராமரிக்கிறது. இந்த யு.டி.சி (NPLI) நேரத்துடன் 5 மணி நேரமும் 30 நிமிடங்களும் கூட்டுவதே நமது இந்திய திட்ட நேரமாகும் (IST = UTC + 5:30). புதிய விதிகள் கோருவது என்ன? அரசு மற்றும் முக்கியத் துறைகளில் உள்ள நேரத்தைச் சார்ந்த இயங்கும் தொழில்நுட்ப அமைப்புகள், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஐ.எஸ்.டி நேரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதே இதன் முக்கிய நிபந்தனையாகும். இதை நடைமுறைப்படுத்த 180 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 2025-இல் இந்தியா அறிவித்த "ஒரே நாடு, ஒரே நேரம்" என்ற இலக்கை நோக்கிய அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்த புதிய விதிகள் அமைகின்றன. பெங்களூருவில் உள்ள மண்டலக் குறிப்புத் தரநிலை ஆய்வகத்திற்கும் (ஆர்.ஆர்.எஸ்.எல் - RRSL), சென்னையில் உள்ள தேசிய பங்குச் சந்தைக்கும் (என்.எஸ்.இ - NSE) இடையே ஐ.எஸ்.டி நேரப் பகிர்வு வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜூலை 2026-இல் பெங்களூரு ஆர்.ஆர்.எஸ்.எல்-ல் 'ஒயிட் ரேபிட் டெக்னாலஜி' (White Rabbit Technology) அடிப்படையிலான ஐ.எஸ்.எடி நேரப் பகிர்வுத் தொழில்நுட்பத்தை நுகர்வோர் விவகார அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. இந்தத் தொழில்நுட்பம் நுகர்வோர் விவகாரத் துறை, சி.எஸ்.ஐ.ஆர் - என்.பி.எல் (CSIR-NPL) மற்றும் இஸ்ரோ ஆகியவற்றால் கூட்டாக உருவாக்கப்பட்டது. கணினிகளை ஒரே நேரத்தில் இயங்க வைக்கும் 'ஒயிட் ரேபிட்' (White Rabbit)! 'ஒயிட் ரேபிட்' என்பது ஃபைபர்-ஆப்டிக் நெட்வொர்க் வழியாகக் கணினிகளின் கடிகாரங்களைத் துல்லியமாக ஒத்திசைக்கப் பயன்படும் ஒரு திறந்த மூல (Open-source) நெட்வொர்க்கிங் தொழில்நுட்பமாகும். எளிமையாகச் சொன்னால், இது ஃபைபர்-ஆப்டிக் கேபிள் வழியாக ஒரு நேரச் சமிக்ஞையை அனுப்பி, அது மற்றொரு கணினியை அடைய எவ்வளவு நேரம் ஆகிறது என்பதைக் கணக்கிடுகிறது. தரவுப் பயணத்தின் போது ஏற்படும் சிறு தாமதங்களை அளவிட்டு, அதைத் தானாகவே சரிசெய்து வேறு வேறு இடங்களில் உள்ள கடிகாரங்களை ஒரே நேரத்தில் துல்லியமாக இயங்க வைக்கிறது. அதாவது, நேரச் சமிக்ஞையை அனுப்பிவிட்டு அது சரியான நேரத்திற்குச் சென்று சேர்ந்துவிடும் என்று இது வெறும் யூகம் செய்வதில்லை; மாறாக, தாமதத்தைக் துல்லியமாகக் கணக்கிட்டுச் சரிசெய்கிறது. ஆயிரக்கணக்கான கணினிகளையும் சாதனங்களையும் மில்லிசெகண்ட் பிழையின்றி ஒரே நேரத்தில் இயக்க வேண்டிய அறிவியல் சோதனைகளுக்காக, அணு ஆராய்ச்சி்க்கான ஐரோப்பிய அமைப்பால் (சி.இ.ஆர்.என்) இத்தொழில்நுட்பம் முதலில் உருவாக்கப்பட்டது. சாதாரண இணைய நெட்வொர்க்குகள் மூலமும் கடிகாரங்களை ஒத்திசைக்க முடியும் என்றாலும், தரவு பயணிக்கும் நேரம் மாறக்கூடும். ஆனால் ஒயிட் ரேபிட் இத்தாமதங்களை ஈடுசெய்து மிகத் துல்லியமான நேரத்தைத் தருகிறது. மேலும், ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க்குகள் செயற்கைக்கோள் சமிக்ஞைகளைச் சார்ந்து இருக்க வேண்டிய அவசியத்தைக் குறைக்கின்றன. செயற்கைக்கோள் சமிக்ஞைகள் 'ஜேமிங்' அல்லது 'ஸ்பூஃபிங்' (Spoofing - போலி சமிக்ஞை அனுப்புதல்) மூலம் முடக்கப்பட வாய்ப்புள்ளது. கேபிள் வழியிலான ஃபைபர் இணைப்புக்கு இந்த ஆபத்து இல்லை. சி.எஸ்.ஐ.ஆர் - என்.பி.எல் (CSIR-NPL) தேசிய நேரத்தைப் பராமரிக்க, அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் தங்கள் கணினிகளை இந்த நெட்வொர்க்குடன் இணைத்துக் கொள்ளும். இதன் மூலம் கணினிகள் தங்களைத் தாமே தொடர்ச்சியாகச் சரிபார்த்து நேரத்தை திருத்திக் கொள்ளும். துல்லியமான நேர ஒத்திசைவு ஏன் அவசியம்? வங்கிகள், தொலைத்தொடர்பு, மின்சார விநியோகக் கட்டமைப்புகள் மற்றும் பாதுகாப்புத் துறை எனப் பல அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியுள்ளது. ஒரு ஒருங்கிணைந்த நேர மூலமானது, நிகழ்வுகளின் வரிசையைக் கண்டறியவும், வெவ்வேறு இடங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும், தொழில்நுட்பக் கோளாறுகள், பணப் பரிவர்த்தனைகள் அல்லது இணையத் தாக்குதல்கள் (Cyber incidents) குறித்த விசாரணைகளைத் துல்லியமாக மேற்கொள்ளவும் உதவுகிறது. தொலைத்தொடர்பு பொறியியல் மையத்தின் கூற்றுப்படி, பிணையங்களில் (Networks) கடிகார நேரம் மாறுபட்டால், சர்வர் பதிவுகளை ஒப்பிட்டுப் பார்ப்பது கடினமாகிவிடும். இதன் காரணமாக, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்த சந்தாதாரர் குறிப்பிட்ட ஐ.பி (IP) முகவரியைப் பயன்படுத்தினார் என்பதைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்படும். நிதிச் சந்தைகள் ஏற்கனவே துல்லியமான நேர அமைப்பில் இயங்கி வருகின்றன. 2013 முதல், பங்குச் சந்தைகள் தங்களின் கணினி கடிகாரங்களை சந்தை தொடங்குவதற்கு முன்பே அணுக்கடிகாரங்களுடன் (Atomic clocks) ஒத்திசைக்க வேண்டும் என செபி (SEBI) உத்தரவிட்டுள்ளது. இது குறைந்தபட்சம் 1 மைக்ரோசெகண்ட் துல்லியத்தையும், +/-1 மில்லிசெகண்ட் நேர்த்தியையும் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், நிதி அமைப்புகள் ஒரு வினாடியின் சிறு பகுதியில் பல்லாயிரம் பரிவர்த்தனைகளைச் செய்கின்றன. ஏதேனும் முறைகேடுகள் அல்லது தகராறுகள் குறித்துக் கண்காணிப்பாளர்கள் விசாரிக்கும் போது, வர்த்தகம் நடந்த துல்லியமான நேர வரிசை மிகவும் அவசியமாகிறது. இந்தியாஉள்நாட்டு நேரக் கட்டமைப்பை ஊக்குவிப்பது ஏன்? வெளிநாட்டுச் செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்புகள் (Satellite navigation) மற்றும் அவற்றின் நேரச் சமிக்ஞைகளைச் சார்ந்திருப்பதைக்குறைக்கும் இந்தியாவின் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த IST சீரமைப்பு பார்க்கப்படுகிறது. இஸ்ரோ உருவாக்கிய 'நேவிக்' (NavIC) செயற்கைக்கோள் அமைப்பு, இருப்பிடம் மற்றும் நேரத்தைக் கணக்கிடும் இந்தியாவின் சொந்தத் தொழில்நுட்பமாக உள்ளது. இதனுடன், தரைவழி அமைப்பான 'ஒயிட் ரேபிட்' ஃபைபர் நெட்வொர்க் மூலம் IST நேரத்தைப் பரப்ப முடியும். இவை இரண்டும் இணைந்து, முக்கியக் கட்டமைப்புகளுக்குப் பாதுகாப்புடன் நேரத்தை வழங்க இந்தியாவிற்கு இரு வழிகளைத் தருகின்றன. செயற்கைக்கோள் ஜேமிங் அல்லது ஸ்பூஃபிங் மூலம் ஒரு நேரச் சமிக்ஞை பாதிக்கப்பட்டாலும், மற்றொன்று தடையின்றி இயங்கும் வகையில் நாட்டின் முக்கியக் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
"ஒரே நாடு, ஒரே நேரம்": இந்தியாவை ஒரே கடிகாரத்தின் கீழ் கொண்டுவர முயற்சி; புதிய 'ஐ.எஸ்.டி ' விதிகள் கூறுவது என்ன?
PulseNews சுருக்கம்

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் 27 அன்று 'சட்ட அளவியல் (இந்திய திட்ட நேரம்) விதிகள் 2026' என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம் நிர்வாகம், சட்டம் மற்றும் வணிகம் போன்ற அனைத்து அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்கும் இந்திய திட்ட நேரமே (IST) நாடு தழுவிய ஒரே நேரக் குறிப்பாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிகள், அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 180 நாட்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் ஒரே சீரான நேரக் கட்டமைப்பு அமல்படுத்தப்படவுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics