PulseNews
அரசியல்

இந்தியாவின் புதிய அணுசக்தி விதிகள் ரஷ்யாவுக்கு சாதகமா?

பிரத்யூஷ் தீப் , அனில் சசி இந்தியாவின் அணுசக்தித் துறையில் ரஷ்யாவுக்கு புதிய முன்னிலை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சிறிய அணு உலைகள் (Small Modular Reactors - SMRs) துறையில் இந்த தாக்கம் அதிகமாக இருக்கலாம். அணுசக்தித் துறைக்கான புதிய ஷாந்தி (SHANTI) சட்டத்தின் வரைவு விதிகள் இதற்கு காரணமாக அமைந்துள்ளன. அணுசக்தித் துறை வெளியிட்டுள்ள வரைவு விதிகளின்படி, இந்தியாவில் அணுமின் நிலையம் அல்லது அணு உலையில் பயன்படுத்தப்படும் வெளிநாட்டு அணுசக்தித் தொழில்நுட்பம், அந்த தொழில்நுட்பம் உருவான நாட்டின் அணுசக்தி ஒழுங்குமுறை அமைப்பால் கட்டாயம் சான்றளிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், அந்தத் தொழில்நுட்பம் அதன் சொந்த நாட்டிலோ அல்லது வேறு ஏதேனும் வெளிநாட்டிலோ ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் வாசிக்க இந்த நிபந்தனைதான் ரஷ்யாவுக்கு சாதகமாக அமையக்கூடும். ஏனெனில், ரஷ்யாவின் சிறிய அணு உலை தொழில்நுட்பம் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது. அதே நேரத்தில், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் சிறிய அணு உலை (SMR) திட்டங்கள் இன்னும் வடிவமைப்பு அல்லது ஒழுங்குமுறை அங்கீகார நிலையிலேயே உள்ளன. ரஷ்யாவுக்கு ஏன் முன்னிலை? மாஸ்கோவைச் சேர்ந்த அரசு நிறுவனமான ரோசாட்டம் (Rosatom State Corporation), இந்தியாவில் குறிப்பிட்ட தேவைகளுக்காக சிறிய அணு உலைகளை அமைக்க வலுவாக முன்வந்துள்ளது. அதே நேரத்தில், பெரிய அளவிலான புதிய தலைமுறை அணு உலைகளை இந்தியாவில் அமைப்பதையும் இரு நாடுகளின் அணுசக்தி ஒத்துழைப்பின் முக்கிய அம்சமாக மாற்ற ரஷ்யா முயற்சி செய்து வருகிறது. சிறிய அணு உலைகள் (SMRs) பாரம்பரிய அணு உலைகளுடன் ஒப்பிடும்போது குறைந்த மின் உற்பத்தித் திறன் கொண்டவை. ஆனால், குறைந்த கார்பன் வெளியீட்டுடன் (Low-carbon) அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யும் நவீன தொழில்நுட்பமாக அவை கருதப்படுகின்றன. உலக அளவில் தற்போது இரண்டு சிறிய அணு உலை திட்டங்கள் மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளன. அதில் ஒன்று ரஷ்யாவின் ‘அகடெமிக் லோமோனோசோவ்’ (Akademik Lomonosov) என்ற மிதக்கும் அணுமின் நிலையம். இதில் தலா 35 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் உள்ளன. இது 2020 மே மாதம் வணிக ரீதியான மின் உற்பத்தியைத் தொடங்கியது. கப்பல் போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அணுமின் நிலையம் ஆர்க்டிக் பகுதியில் உள்ள பெவெக் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு மின்சாரத்தையும் வெப்ப ஆற்றலையும் வழங்கி வருகிறது. உலகின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அணுமின் நிலையம் என்ற பெருமையும் இதற்கு உள்ளது. மற்றொரு செயல்பாட்டில் உள்ள SMR சீனாவின் HTR-PM ஆகும். இது 2021 டிசம்பரில் மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது. 2023 டிசம்பரில் வணிக செயல்பாட்டைத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நிறுவனங்களுக்கு சிக்கல் சிறிய அணு உலை (SMR) துறையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த பல நிறுவனங்களும் போட்டியில் உள்ளன. ஹோல்டெக் இன்டர்நேஷனல் (Holtec International), ரோல்ஸ் ராய்ஸ் எஸ்.எம்.ஆர். (Rolls-Royce SMR), நியூஸ்கேல் (NuScale) நிறுவனத்தின் வொய்கர் எஸ்.எம்.ஆர். (VOYGR SMR0, வெஸ்டிங்ஹவுஸ் (Westinghouse) நிறுவனத்தின் AP300 மற்றும் ஜி ஹிட்டாசி (GE-Hitachi) நிறுவனத்தின் BWRX-300 ஆகியவை இதில் அடங்கும். ஆனால், இவற்றில் பெரும்பாலான சிறிய அணு உலை தொழில்நுட்பங்கள் இன்னும் வடிவமைப்பு சான்றிதழ் (Design Certification) பெறும் நிலையில் உள்ளன. அவற்றின் சொந்த நாடுகளின் ஒழுங்குமுறை அமைப்புகளிடம் இருந்து முழுமையான அனுமதியும் கிடைக்கவில்லை. இதனால், இந்தியாவின் புதிய விதிகளில் உள்ள ‘ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்க வேண்டும்’ என்ற நிபந்தனை, இந்த நிறுவனங்களுக்கு இந்திய சந்தையில் நுழைவதில் தடையாக இருக்கலாம். ரஷ்யா - இந்தியா அணுசக்தி உறவு இந்தியாவுடன் ரஷ்யா ஏற்கெனவே நீண்டகால அணுசக்தி ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுமின் நிலையம் இரு நாடுகளின் அணுசக்தி ஒத்துழைப்பின் முக்கிய திட்டமாக உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமாகும். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் மற்றும் இரண்டாவது அணு உலைகளில் ரஷ்யாவின் VVER-1000 வகை ஒளி நீர் அணு உலைகள் (Light Water Reactors - LWRs) பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை முறையே 2013 மற்றும் 2016-ல் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டன. கூடங்குளம் திட்டத்தில் மொத்தம் ஆறு அணு உலைகள் அமைக்கப்படுகின்றன. இதன் மொத்த மின் உற்பத்தித் திறன் 6,000 மெகாவாட் (MWe) ஆகும். மேலும், புதிய தலைமுறை VVER-1200 அணு உலைகளை இந்தியாவில் அமைப்பது குறித்தும் ரஷ்யா முன்மொழிந்து வருகிறது. இதனுடன் சிறிய அணு உலை திட்டங்களையும் இந்தியாவில் செயல்படுத்த ரஷ்யா முயற்சி செய்து வருகிறது. மிதக்கும் அணுமின் நிலையத்தில் ரஷ்யாவுக்கு தனி அனுபவம் ரஷ்ய வடிவமைப்பிலான சிறிய அணு உலைகளை இந்தியாவில் அமைப்பது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே ஆலோசனை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. 2024 ஏப்ரலில், ரோசாட்டம் (Rosatom) நிறுவனம் இந்திய கூட்டாளிகளிடம் தனது மிதக்கும் அணுமின் நிலையத் தொழில்நுட்பம் (Floating Nuclear Power Solutions) குறித்த தகவல்களை வழங்கியது. மிதக்கும் அணுமின் நிலையத் தொழில்நுட்பத்தில் உலகிலேயே ரஷ்யாவுக்கு தனித்துவமான அனுபவம் உள்ளது. சிறிய அணு உலை தொழில்நுட்பம், மின் கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ள தொலைதூரப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கவும், தனிப்பட்ட தொழிற்சாலைகளின் மின் தேவையைப் பூர்த்தி செய்யவும் பயன்படுத்தப்படலாம். இந்தியாவும் அதிக மின்சாரம் தேவைப்படும் தரவு மையங்கள் (Data Centres) போன்ற இடங்களில் சிறிய அணு உலைகளைப் பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தி வருகிறது. மேலும், அடிப்படை மின் தேவையை (Baseload Power) விரைவாக அதிகரிக்கவும் இந்த தொழில்நுட்பம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடங்குளத்துக்கு ரஷ்ய அணு எரிபொருள் ரோசாட்டத்தின் அணு எரிபொருள் நிறுவனமான டி.வி.இ.எல் (TVEL), இந்தியாவுக்கு ஏற்கெனவே TVC-2M அணு எரிபொருளை (Nuclear Fuel) வழங்கி வருகிறது. இந்த எரிபொருள் மூலம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 18 மாதங்களுக்கு ஒருமுறை எரிபொருள் மாற்றும் முறையைப் பயன்படுத்த முடியும். வழக்கமாக 12 மாதங்களுக்கு ஒருமுறை எரிபொருள் மாற்ற வேண்டிய நிலையில், இது அணுமின் நிலையத்தின் செயல்திறனையும் பொருளாதார பலனையும் அதிகரிக்க உதவும். அணு உலை செலவிலும் ரஷ்யாவுக்கு சாதகமா? சிறிய அணு உலைகள் மட்டுமல்லாமல், அழுத்த நீர் அணு உலைகள் (Pressurised Water Reactors - PWRs) அல்லது ஒளி நீர் அணு உலைகள் (Light Water Reactors - LWRs) துறையிலும் ரஷ்ய நிறுவனங்களுக்கு விலை அடிப்படையில் முன்னிலை கிடைக்கலாம். தொழில்துறை வட்டாரங்களின் தகவல்படி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் வழங்கும் ஒளி நீர் அணு உலைகளின் விலை (LWR), இந்தியாவின் உள்நாட்டு அழுத்த கன நீர் அணு (Pressurised Heavy Water Reactors - PHWRs) உலைகளைவிட அதிகமாக உள்ளது. ரஷ்ய அணு உலைகளின் விலை இந்திய அணு உலைகளைவிட சற்று அதிகமாக இருந்தாலும், மேற்கத்திய நாடுகளின் ஒளி நீர் அணு உலைகளுடன் (LWR) ஒப்பிடும்போது குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. சில மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் தயாரிக்கப்படும் அணு உலைகளின் செலவு ஒரு மெகாவாட் மின்சார உற்பத்தித் திறனுக்கு சுமார் ரூ.18 கோடியாக இருக்கலாம். ரஷ்ய அணு உலைகளின் செலவு சுமார் ரூ.34 கோடியாக மதிப்பிடப்படுகிறது. அணுமின் உற்பத்தியில் எரிபொருள் செலவு ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ஆரம்ப முதலீட்டு செலவு மிகப்பெரிய சவாலாக உள்ளது. உலக அணுசக்தி சங்கத்தின் (World Nuclear Association) தகவல்படி, அணுமின் நிலையத்தின் மொத்த மின்சார உற்பத்திச் செலவில் கட்டுமானத்துக்கான மூலதனச் செலவு (Capital Cost) குறைந்தது 60 சதவீதம் வரை இருக்கலாம். இதனால், திட்டத்துக்கு தேவைப்படும் நிதி செலவு, அணுமின் நிலையம் கட்டி முடிக்க ஆகும் காலம் மற்றும் ஆரம்ப கட்ட முதலீடு ஆகியவை அணுமின் உற்பத்தியின் இறுதி செலவை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மொத்தத்தில் ரஷ்யாவுக்கு சாதகமான சூழல் இந்தியாவின் புதிய ஷாந்தி (SHANTI) விதிகள் நடைமுறைக்கு வந்தால், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள சிறிய அணு உலை (SMR) தொழில்நுட்பம், இந்தியாவுடனான நீண்டகால அணுசக்தி ஒத்துழைப்பு மற்றும் அணு உலைகளின் செலவு உள்ளிட்ட காரணங்களால் ரஷ்யாவுக்கு இந்திய அணுசக்தித் துறையில் கூடுதல் முன்னிலை கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, இந்தியா சிறிய அணு உலை தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தத் தயாராகி வரும் நிலையில், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள ரஷ்ய எஸ்.எம்.ஆர் தொழில்நுட்பம் மற்ற போட்டியாளர்களைவிட மாஸ்கோவுக்கு முக்கியமான சாதகத்தை வழங்கக்கூடும்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இந்தியாவின் புதிய அணுசக்தி விதிகள் ரஷ்யாவுக்கு சாதகமா?
PulseNews சுருக்கம்

இந்தியாவின் அணுசக்தித் துறையில் ரஷ்யா முன்னிலை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, சிறிய அணு உலைகள் (SMRs) பிரிவில் இந்த தாக்கம் அதிகமாக இருக்கும் என்று பிரத்யூஷ் தீப் மற்றும் அனில் சசி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அணுசக்தித் துறை வெளியிட்டுள்ள புதிய 'ஷாந்தி' (SHANTI) சட்டத்தின் வரைவு விதிகள் இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இந்த விதிகளின்படி, இந்தியாவில் பயன்படுத்தப்படும் வெளிநாட்டு அணுசக்தி தொழில்நுட்பம், அந்த தொழில்நுட்பம் உருவான நாட்டிற்கு உட்பட்டதாகவே இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics