ஊர் ஊராக கம்யூனிஸ்ட் கட்சியினர் முகவரிகளை சேகரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு? மார்க்சிஸ்ட் ஷாக்
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் (சி.பி.ஐ) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.எம்) கட்சி உறுப்பினர்களின் பெயர் மற்றும் முகவரிகளைச் சேகரித்து உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு வருவாய் ஆய்வாளர்களுக்குக் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி பிறப்பித்துள்ள சுற்றறிக்கை பெரும் சர்ச்சையையும் மார்க்சிஸ்ட் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தவறவிடும் கிராம உதவியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி, வருவாய் ஆய்வாளர்கள், துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் கட்சியில் உள்ள நபர்களின் பெயர், முகவரி, ஆகியவற்றை சேகரித்து வருவாய் ஆய்வாளர்கள் வட்டாட்சியரிடம் 18.08.2026 இன்று மாலைக்குள் நேரடியாக சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. அனைத்து கிராம உதவியாளர்களும் வருவாய் ஆய்வாளர்களுக்கு உதவிட இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. அறிக்கை அளிக்க தவறும் கிராம உதவியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை குறித்துத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள திண்டுக்கல் சி.பி.எம் எம்.பி ஆர். சச்சிதானந்தம், "கைரேகைச் சட்டம் அமலில் இருந்த காலத்திலோ அல்லது அரசியல் இயக்கங்கள் தடை செய்யப்பட்ட காலத்திலோ கூட இதுபோன்ற சுற்றறிக்கையை வட்டாட்சியர்கள் பிறப்பித்ததில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு தேசிய அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் பற்றிய விவரங்களைச் சேகரிக்க உத்தரவிட வட்டாட்சியருக்கு யார் வானளாவிய அதிகாரம் கொடுத்தது என்றும், மணல் கடத்துவோர் அல்லது குற்றவாளிகளின் பட்டியலை இதுபோன்று சேகரித்துள்ளாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பொதுமக்கள் தங்களைச் சந்திப்பதற்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்து அச்சுறுத்தும் வட்டாட்சியர் அய்யாசாமியை வருவாய்த்துறை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோரின் சமூக வலைத்தளப் பக்கங்களை டேக் செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த திண்டுக்கல் எம்.பி ஆர்.சச்சிதானந்தம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “கைரேகைச் சட்டம் அமலில் இருந்த காலத்திலும், அரசியல் இயக்கங்கள் தடை செய்யப்பட்ட காலத்திலும் கூட இதுபோன்ற சுற்றறிக்கையை வட்டாட்சியர்கள் பிறப்பித்ததில்லை. ஒரு தேசிய அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் பற்றிய விவரம் சேகரிக்க சொல்லி பகிரங்க சுற்றறிக்கை அனுப்பும் வானளாவிய அதிகாரம் குஜிலியம்பாறை வட்டாட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளதா? மணல் கடத்துவோர் பட்டியலையோ, ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலையோ, குற்றவாளிகள் பட்டியலையோ இதுபோன்று சுற்றறிக்கை போட்டு சேகரித்து வைத்துள்ளாரா? பொதுமக்கள் வட்டாட்சியரை சந்திப்பதற்கு வாரத்தில் நான்கு நாட்கள் பகல் 12 to 1 மணி வரை மட்டுமே எனவும் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது எனவும் அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்தும் அய்யாசாமி என்ற வட்டாட்சியரை வருவாய்த்துறை திரும்பப் பெற்றுக் கொண்டு மக்களுக்கு உதவ வேண்டுகிறோம்!” என்று ஆர்.சச்சிதானந்தம் எம்.பி முதலமைச்சர் விஜய், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் முகநூல் பக்கத்தை டேக் செய்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி, தங்கள் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகளைச் சேகரித்து உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று வருவாய் ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு குறித்து கிராம உதவியாளர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், பணியைத் தவறவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றறிக்கை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், மார்க்சிஸ்ட் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.