PulseNews
அரசியல்

பள்ளிக் கட்டடங்களுக்கு 3 வண்ண ஸ்டிக்கர் பாதுகாப்பு முறை: சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு கலைக் கல்லூரிகளின் கட்டடங்களின் உறுதித் தன்மையைப் பரிசோதித்து, கட்டடங்களின் நிலைக்கேற்ப சிவப்பு, மஞ்சள், பச்சை என 3 வகையான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனப் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். மேலும், மாணவிகளுக்குப் பள்ளிகளில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாத நிலை குறித்து வெள்ளை அறிக்கை தயாரித்து முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி, திங்கள்கிழமை (24.08.2026) காலை சட்டப்பேரவை தொடங்கியது. சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பொதுப்பணித் துறை மற்று விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “பள்ளிக்கல்வித்துறையில் முக்கியமான பிரச்னை உள்ளது, அது பொது பிரச்னையும் கூட. முதல்வர் கவனத்திற்கு அவற்றைக் கொண்டு வந்திருக்கிறோம். போர்க்கால அடிப்படையில் இதைக் கவனத்தில் கொண்டு வந்து சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் மிகப்பெரிய அளவில் பிரச்னைகள் உள்ளது என்றால், அது கழிப்பறைப் பிரச்னைதான். இவற்றைச் சரிசெய்ய வேண்டியது சட்டப்பேரவை உறுப்பினர்களின் கடமை. கடந்த 30 நாட்களாகப் பள்ளிகள் பற்றிய ஒருங்கிணைந்த தகவல்களைத் தொகுத்து வருகிறோம். பொதுப்பணித் துறையின் கீழ் பள்ளிகள் மற்றும் அரசு கல்லூரிகளின் எண்ணிக்கை 6,279. உயர்நிலைப் பள்ளிகள், 177 கலைக்கல்லூரிகள் உள்ளிட்ட 6,620 கல்வி நிறுவனங்களின் கட்டடங்கள் பொதுப்பணித் துறையின் கீழ் உள்ளன. பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணி 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது. சில பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை; குறிப்பாக மகளிர் பள்ளிகளில் கழிப்பறை வசதிகளும், தண்ணீர் வசதியும் இல்லை. அரசு கல்லூரிகளில் கூட இந்தப் பிரச்னை உள்ளது. எனவே, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தங்களது தொகுதியின் கீழ் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளிகளை மூன்று வகையாகப் பிரிக்கிறோம். பள்ளிக் கட்டடத்தை உரிய துறை நிபுணர்கள் சோதித்து, அந்தக் கட்டடம் தரமாக உள்ளதா என்று உறுதி செய்வார்கள். ஒருவேளை பலவீனமாக இருந்தால், அதைச் சுற்றி சிவப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படும்; பள்ளிக்கல்வித் துறைக்கு அறிவித்துவிட்டு அங்கு பள்ளி செயல்பட அனுமதி மறுக்கப்படும். பள்ளி கட்டடங்கள் தரமாக இருந்து, ஆனால் மேம்படுத்த வேண்டும் என்றால் மஞ்சள் ஸ்டிக்கர் ஒட்டப்படும். பச்சை ஸ்டிக்கர் ஒட்டப்படும் கட்டடங்களில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது என்று அறியப்படும். இதற்கான நிதி எவ்வளவு தேவை என்பது குறித்துப் பரிசீலனை நடைபெறும். இந்த நடவடிக்கையை அடுத்த ஓராண்டுக்குள் செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தனியார் கல்வி மையங்கள் போலவே அரசு கல்வி நிலையங்களும் மாற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார். இதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், “இது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். உட்கட்டமைப்பு என்பது ஒவ்வொரு ஆட்சியிலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் கட்டப்பட்டு வந்தாலும், அதில் முக்கியத்துவம் என்ன என்று பார்க்க வேண்டும். யாருடைய வகுப்பறை அது? பெற்றோர்களுக்கா? ஆசிரியர்களுக்கா? இந்தத் துறைக்கா? அது அந்த மாணவர்களின் வருங்காலத்திற்கான வகுப்பறை. நான் முதன்முதலில் கையெழுத்திட்டதே, பூட்டப்படக்கூடிய கதவுகளுடன் கூடிய மாணவர்களுக்கான கழிப்பறை அமைக்க வேண்டும் என்பதற்குத்தான். அதுதான் இந்த நாட்டின் முக்கியமான தேவை. இங்கிருக்கும் உறுப்பினர்கள் நன்றாக யோசித்துப் பாருங்கள், வகுப்பறையே இல்லாத ஒரு கழிப்பறை இருந்தால் கூட அதற்கு ஒரு பயன் உள்ளது; அதை நீங்கள் பொதுக் கழிப்பறையாக பயன்படுத்தலாம். ஆனால் சரியான ஒரு கழிப்பறையே இல்லாத வகுப்பறையால் எந்தப் பயனும் இல்லை. ஏழு முதல் எட்டு மணி நேரம் எங்களது மாணவிகள் அவர்களது இயற்கை உபாதைகளை அடக்கிக்கொண்டு இருக்கின்றனர். இதனால், படிப்பில் அவர்களது கவனம் சிதறுகிறது; அவர்களுடைய ஆரோக்கியம் என்னவாகும்? அவர்களின் மாதவிடாய் நேரத்தை நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “பள்ளிக்கல்வித் துறை மூலம் இது குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை உருவாக்கி தமிழக முதல்வரிடம் அளிக்க வேண்டும்” என்று கூறினார்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பள்ளிக் கட்டடங்களுக்கு 3 வண்ண ஸ்டிக்கர் பாதுகாப்பு முறை: சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் கலைக் கல்லூரிகளின் கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து, அவற்றின் நிலையை உணர்த்தும் வகையில் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய மூன்று வண்ண ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் எனப் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்குத் தேவையான கழிப்பறை வசதிகள் இல்லாத நிலை குறித்த விரிவான வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டு, அது முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics