PulseNews
அரசியல்

நயினார் நாகேந்திரனை தொடர்ந்து டெல்லி செல்லும் வானதி சீனிவாசன்: தமிழக பாஜகவில் அடுத்தகட்ட மாற்றமா?

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவசரமாக டெல்லி சென்றுள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசனும் இன்று மாலை டெல்லி செல்ல உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக பாஜக வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவில் தேசிய அளவில் பல்வேறு நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அடுத்ததாக நடைபெற உள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை மையமாக வைத்து கட்சியின் அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதேவேளையில், தமிழகத்தில் தேர்தல் தோல்விக்குப் பிறகு பாஜக அமைப்பு ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று காலை திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று சென்னை வந்திருந்த நிலையில், அடுத்த நாளே நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நேற்று தமிழக பாஜக மூத்த நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கோவளத்தில் இருந்து நேரடியாக சென்னை விமான நிலையத்துக்குச் சென்று டெல்லி புறப்பட்டார். இதனால் தமிழக பாஜக நிர்வாகிகள் மீது மேலிடம் அதிருப்தியில் இருக்கிறதா என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன. இதற்கிடையே, பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசனும் இன்று மாலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜகவின் இரண்டு முக்கிய தலைவர்களும் ஒரே நேரத்தில் டெல்லி மேலிடத்தால் அழைக்கப்பட்டிருப்பது கட்சிக்குள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சமீபத்தில் பாஜக தேசிய மகளிரணி செயலாளர் பொறுப்பில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கப்பட்டார். இதனால் அவருக்கு தேசிய அளவில் வேறு முக்கிய பொறுப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரம், தமிழக பாஜக தலைவர் பதவியை வானதி சீனிவாசன் நீண்டகாலமாக விரும்பி வருவதாகவும் கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. மறுபுறம், மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்தச் சூழலில் நயினார் நாகேந்திரனுக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சும் பாஜக வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. இதற்காகவே பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் அவரை டெல்லிக்கு அழைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நயினார் நாகேந்திரன் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றால், தமிழக பாஜக தலைவர் பதவி காலியாகும். அந்தப் பதவிக்கு வானதி சீனிவாசனை நியமிக்க மேலிடம் ஆலோசித்து வருகிறதா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இதனால் நயினார் நாகேந்திரனின் டெல்லி பயணமும், அவரைத் தொடர்ந்து வானதி சீனிவாசன் மேற்கொள்ள உள்ள டெல்லி பயணமும் தமிழக பாஜகவில் அடுத்தகட்ட அரசியல் மாற்றங்களுக்கான முன்னோட்டமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலிட ஆலோசனைகளுக்குப் பிறகே இதற்கான தெளிவான விடை கிடைக்கும்.

Seithipunal15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நயினார் நாகேந்திரனை தொடர்ந்து டெல்லி செல்லும் வானதி சீனிவாசன்: தமிழக பாஜகவில் அடுத்தகட்ட மாற்றமா?
PulseNews சுருக்கம்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவசரமாக டெல்லி சென்றதைத் தொடர்ந்து, மூத்த தலைவர் வானதி சீனிவாசனும் இன்று மாலை டெல்லி செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக பாஜக வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் தேசிய அளவிலான நிர்வாக மாற்றங்கள் மற்றும் உத்தரப் பிரதேச தேர்தலை முன்னிட்டு கட்சி அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தேர்தல் தோல்விக்கு பிறகு, பாஜகவில் அடுத்தகட்ட மாற்றங்கள் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics