‘அமைச்சர்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தாததால் ஆட்சியை இழந்தோம்’ - திமுக கடைநிலை தொண்டனின் குமுறல்!
திமுகவில் நீண்டகாலமாக கட்சிக்காக உழைத்து வரும் அடிமட்டத் தொண்டர்களுக்கும், கிளை மற்றும் ஒன்றிய நிர்வாகிகளுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கி, கழகத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் முத்து பெருமாள் திமுக தலைமைக்கு வேண்டுகோள் விடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்த தகவல் வைரலாகி வருகிறது அவர் வெளியிட்ட அந்த பதிவில், “கடந்த பத்தாண்டுகளாக தெருவில் நின்று போராடி, மக்களிடம் நன்மதிப்பை பெற்று 2021ஆம் ஆண்டு ஆட்சியைப் பெற்ற திமுக, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியது. ஆனால், ஆட்சியில் தங்களுடன் இருந்த சில அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை உரிய முறையில் கட்டுப்படுத்தாமல் விட்டதன் காரணமாக, அவர்களின் அளவுக்கு மீறிய செயல்பாடுகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிரான மனநிலையை உருவாக்கியது. இதன் விளைவாக 2026ஆம் ஆண்டு மக்கள் மாற்றத்தை நாடி நடிகரைத் தேர்ந்தெடுத்த நிலை ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் கழகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் ஜமீன்தார், மிட்டா மிராசு, பண்ணையார் போன்று மனப்பான்மை கொண்ட நிர்வாகிகளை மாற்றி, அடிமட்டத்தில் கட்சிக்காக உழைத்து வரும் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். 45, 50, 60 என வயது வரம்புகளை நிர்ணயிப்பதை விட, கழகத்திற்காக பல ஆண்டுகளாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைத்து வரும் உண்மையான தொண்டர்களின் பணியை கருத்தில் கொண்டு பொறுப்புகள் வழங்க வேண்டும். கழகத்தின் ஆணிவேராக செயல்படும் கிளைக் கழக செயலாளர்களை புறக்கணிக்கக் கூடாது. மக்களுடன் நேரடி தொடர்பு இல்லாமல், தலைமைக்கு நெருக்கம் என்ற அடிப்படையில் மட்டுமே அரசியலில் முன்னிலைப்படுத்தப்படுபவர்களுக்கு பதிலாக, அடிமட்டத் தொண்டர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஒரு குடும்பத்தாருக்கே வம்சா வழி போல் ஒரு சாராருக்கே அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கும் என்ற நிலையை மாற்றி, உண்மையாக உழைக்கும் அனைத்து சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தொண்டனுக்கும் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட கட்சியின் உரிய அங்கீகாரமும் பொறுப்பும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், பல ஆண்டுகளாக கழகத்திற்காக உழைத்து வரும் உண்மையான உழைப்பாளிகள் கழகத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். எனவே, அடிமட்டத் தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, நல்ல முடிவுகளை எடுத்து கழகத்தை காத்திட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளாக தெருக்களில் நின்று போராடி மக்களிடம் நன்மதிப்பைப் பெற்று, 2021-ல் திமுக ஆட்சியைப் பிடித்தது. ஆனால், அமைச்சர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தத் தவறியதாலேயே ஆட்சியை இழந்ததாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் முத்து பெருமாள் வேதனை தெரிவித்துள்ளார்.
கட்சிக்காக நீண்டகாலமாக உழைக்கும் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி, கழகத்தை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என அவர் திமுக தலைமைக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இவரது இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.