PulseNews
லைஃப் ஸ்டைல்

நேபாளம் கைலாஷ் யாத்திரைக்கு சென்ற அம்மா: தஞ்சையில் கண்ணீருடன் காத்திருக்கும் மகன்

கும்பகோணம் நாகேஸ்வரன் வீதியில் செயல்பட்டு வரும் சூப்பர் யாத்ரா ஏஜென்ஸி மூலம் கடந்த 23ஆம் தேதி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 57 பேர் நேபாளத்திற்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டனர். தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், சிதம்பரம், மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 16 பேர் கைலாஷ் யாத்திரைக்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாத்திரிகர்கள் மூன்று மினி பேருந்துகளில் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில், நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் பெய்த கனமழையால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது முன்னதாக சென்ற ஒரு மினி பேருந்து பாதுகாப்பாக தப்பியதாகவும், பின்னால் வந்த மற்றொரு பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கும்பகோணம் சுற்றுலா ஏஜென்ஸி சார்பில் நியமிக்கப்பட்ட இன்ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, மூன்றாவதாக சென்ற மினி பேருந்தின் நிலை குறித்தும் இதுவரை தெளிவான தகவல் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த இரண்டு பேருந்துகளில் பயணம் செய்ததாகக் கூறப்படும் 37 பேரின் தற்போதைய நிலை என்ன என்பது தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியிலும் கவலையிலும் உள்ளனர். தங்களது உறவினர்கள் பாதுகாப்பாக உள்ளார்களா, அவர்கள் எந்தப் பகுதியில் சிக்கியுள்ளனர் என்பது குறித்த தகவலுக்காக குடும்பத்தினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழக யாத்திரிகர்களை விரைந்து கண்டறிந்து பாதுகாப்பாக மீட்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாத்திரிகர்களின் தற்போதைய இருப்பிடம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காகவும் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். இதனிடையே, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் யாத்திரைக்கு சென்றவர்களின் குடும்பத்தினரை ஒருங்கிணைத்து தனி வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர் ரேவதி தலைமையிலான நிர்வாகம் மூலம் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, அங்குள்ள மீட்பு நடவடிக்கைகள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து கிடைக்கும் தகவல்கள் குறித்து குடும்பத்தினருக்கு உடனுக்குடன் பகிரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ்அப் குழு மூலம் நேபாளத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளின் நிலவரத்தை குடும்பத்தினர் தொடர்ந்து அறிந்து வருகின்றனர். உறவினர்கள் மத்தியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பகிர்ந்து வருவது தங்களுக்கு ஓரளவு ஆறுதலாக இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த இளவரசி என்பவரும் சூப்பர் யாத்ரா ஏஜென்ஸி மூலம் கைலாஷ் யாத்திரைக்கு சென்றுள்ளார். ஆனால், நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பின்னர் அவரிடம் இருந்து எந்தத் தகவலும் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர். இதுகுறித்து இளவரசியின் மகன் முரளி கூறுகையில், “எனது அம்மாவுக்கு கைலாஷ் யாத்திரை செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அதற்காக அவரே பணம் சேமித்து வைத்து இந்தப் பயணத்தை மேற்கொண்டார். நேற்றுமுன்தினம் காலை எங்களிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது கடைசியாக எடுத்த புகைப்படத்தையும் எங்களுக்கு அனுப்பினார். மிகவும் மகிழ்ச்சியாகவும், பயணம் நன்றாகச் சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார். “அதன்பிறகு நடந்த சம்பவங்கள் எங்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அம்மாவை தொடர்புகொள்ள முடியாததால் குடும்பமே பதற்றத்தில் இருக்கிறது. இப்படியான சூழலில் அரசு தரப்பில் எங்களுக்கு ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் ரேவதி மேடம் மூலம் கிடைக்கும் தகவல்கள் உடனுக்குடன் எங்களிடம் பகிரப்படுவது ஓரளவு ஆறுதலாக உள்ளது. “அம்மா உள்ளிட்ட யாத்திரிகர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு விரைவில் வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்” என்றார். நேபாள வெள்ளத்தில் சிக்கியதாகக் கூறப்படும் தமிழகத்தைச் சேர்ந்த 37 பேரின் நிலை குறித்து உறுதியான தகவல் கிடைக்காததால், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அவர்களது குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். யாத்திரிகர்களின் இருப்பிடத்தை விரைந்து கண்டறிந்து, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, தேவையான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் மற்றும் நேபாள அதிகாரிகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தற்போது குடும்பத்தினரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. செய்தி: க.சண்முகவடிவேல்

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நேபாளம் கைலாஷ் யாத்திரைக்கு சென்ற அம்மா: தஞ்சையில் கண்ணீருடன் காத்திருக்கும் மகன்
PulseNews சுருக்கம்

கும்பகோணம் நாகேஸ்வரன் வீதியில் உள்ள சூப்பர் யாத்ரா ஏஜென்ஸி மூலம், கடந்த 23-ஆம் தேதி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 57 பேர் நேபாளத்திற்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டனர். தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், சிதம்பரம், மயிலாடுதுறை மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 16 பேர் கைலாஷ் யாத்திரைக்காகச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாத்ரீகர்கள் மூன்று மினி பேருந்துகளில் தங்களது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle