மெரினா பேனா நினைவுச் சின்னம்: தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? பசுமைத் தீர்ப்பாயம் காலக்கெடு
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நினைவாகப் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை, தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி புஷ்பா சத…

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நினைவாகப் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை, தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தலைமையிலான அமர்வு விசாரித்தது. நாம் தமிழர் கட்சியின் வெண்ணிலா தாயுமானவன், மீனவர் பாரதி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர், இத்திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கிய சுற்றுச்சூழல் ஒப்புதலை எதிர்த்து இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டே இந்த விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டும், தமிழக அரசு கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக அவகாசம் மட்டுமே கோரி வருவதாகத் தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்தது. மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், இத்திட்டம் குறித்த தற்போதைய அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவுபடுத்துமாறு அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 29-ஆம் தேதிக்குள் இத்திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குத் தீர்ப்பாயம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள தீர்ப்பாயம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்துள்ளது.