எஃப்சிஆர்ஏ மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு; ஒன்றிய அரசு அதிரடி முடிவு!
வெளிநாடுகளில் இருந்து அனைத்து மதங்களைச் சார்ந்த தொண்டு நிறுவனங்கள் இந்திய தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் நன்கொடைக்கு கட்டுப்பாடு விதிக்கும் விதமாக வரன்முறைப்படுத்த வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை (எஃப்சிஆர்ஏ) திருத்த மசோதாவை கடந்த மார்ச் மாதம் மக்களவையில் ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்தது. ஆனால் இந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிராக இருப்பதாக திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து கிறிஸ்துவத் தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நன்கொடைக்கு இந்த மசோதா எதிராக இருக்கிறது என்று கூறி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், ஆளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த சில கட்சிகளும் இந்த மசோதா குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. இதற்கிடையில் கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், எஃப்சிஆர்ஏ திருத்த மசோதாவை நிறைவேற்ற ஒன்றிய பா.ஜ.க அரசு முனைப்பு காட்டி வந்தது. ஆனால், இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், எஃப்சிஆர்ஏ சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப ஒன்றிய பா.ஜ.க அரசு முடிவு செய்துள்ளது. மக்களவை சபாநாயகரால் நியமிக்கப்படவுள்ள 21 மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை தலைவரால் நியமிக்கப்படவுள்ள 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெறுவார்கள். இந்த குழு இந்த மசோதாவை நிறைவேற்றலாமா? வேண்டமா? என்பதை ஆய்வு செய்து 2026ஆம் ஆண்டின் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளுக்குள் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து இந்திய தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நன்கொடைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை (எஃப்சிஆர்ஏ) சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவை ஒன்றிய அரசு கடந்த மார்ச் மாதம் மக்களவையில் தாக்கல் செய்தது. அனைத்து மதத்தைச் சார்ந்த தொண்டு நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என்று அரசு அறிவித்தது.
இருப்பினும், இந்த மசோதா சிறுபான்மையினருக்கு, குறிப்பாக கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த விவகாரத்தில் எழுந்துள்ள எதிர்ப்புகளைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு அதிரடியான முடிவை மேற்கொண்டுள்ளது.