வீட்டுல இருக்கும் கிளாஸ் கிளீனர் போதும்னு நினைக்கிறீங்களா? டிவிக்கு அது ஆபத்து; ஏன் தெரியுமா?
வீட்டில் தினமும் பயன்படுத்தப்படும் மின்னணு சாதனங்களில் தொலைக்காட்சியும் முக்கியமான ஒன்று. குறிப்பாக எல்இடி, எல்சிடி, ஓஎல்இடி போன்ற நவீன தொலைக்காட்சிகளின் திரைகளில் தூசி, கைரேகைகள், எண்ணெய் பிசுக்கு மற்றும் சிறிய கறைகள் படிவது வழக்கமான விஷயம். திரையில் கறைகள் அதிகமாக இருந்தால் படம் தெளிவாகத் தெரியாமல் போவதுடன், தொலைக்காட்சி பார்க்கும்போது கவனச்சிதறலும் ஏற்படலாம். இதனால் பலரும் வீட்டில் இருக்கும் கண்ணாடி சுத்தம் செய்யும் திரவத்தைப் பயன்படுத்தி டிவி திரையைத் துடைப்பார்கள். ஆனால், இது டிவி திரைக்கு நல்லதல்ல என்று உற்பத்தியாளர்கள் எச்சரிக்கின்றனர். கண்ணாடி கிளீனரை ஏன் பயன்படுத்தக்கூடாது? நவீன பிளாட் ஸ்க்ரீன் தொலைக்காட்சிகளின் திரை, சாதாரண ஜன்னல் கண்ணாடியைப் போல இருப்பதில்லை. திரையின் மேற்பரப்பில் பிரதிபலிப்பைக் குறைப்பதற்கும், படத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கும் பிரத்யேக பூச்சுகள் இருக்கலாம். கண்ணாடி சுத்தம் செய்யும் திரவங்களில் உள்ள ஆல்கஹால், அமோனியா, பென்சீன் மற்றும் பிற கடுமையான ரசாயனங்கள் இந்தப் பாதுகாப்புப் பூச்சுகளைப் பாதிக்கக்கூடும். இதனால் ஒருமுறை துடைத்தவுடன் உடனடியாகப் பெரிய சேதம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தொடர்ந்து இதுபோன்ற ரசாயனங்களைப் பயன்படுத்தினால் திரையின் மேற்பரப்பில் நிறமாற்றம், கோடுகள், புள்ளிகள் அல்லது சீரற்ற பகுதிகள் தோன்றும் வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில் இந்தச் சேதத்தை மீண்டும் சரிசெய்வதும் கடினமாகிவிடும். குறிப்பாக விண்டெக்ஸ் போன்ற ஜன்னல் கண்ணாடி சுத்தம் செய்யும் திரவங்கள், டிவி திரைக்காக தயாரிக்கப்பட்டவை அல்ல. எனவே அவற்றை டிவி திரையில் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது. வினிகர், ஆல்கஹாலும் வேண்டாம்! டிவி திரையை சுத்தம் செய்ய தண்ணீரில் வினிகர் கலந்து பயன்படுத்தலாம் என்று சில இடங்களில் கூறப்படுவதைப் பார்க்கலாம். அதேபோல் ரப்பிங் ஆல்கஹால் அல்லது மெத்திலேட்டட் ஸ்பிரிட்ஸ் போன்றவற்றையும் சிலர் பயன்படுத்துகின்றனர். ஆனால் டிவி உற்பத்தியாளர் குறிப்பிட்ட வழிமுறைகள் இல்லாத நிலையில் இதுபோன்ற வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. திரையின் மேற்பரப்பில் இருக்கும் சிறப்பு பூச்சுகள் ரசாயனங்களுக்கு உணர்திறன் கொண்டதாக இருக்கக்கூடும். எனவே “இயற்கையானது” அல்லது “வீட்டிலேயே இருக்கும் பொருள்” என்பதால் அது டிவி திரைக்கு பாதுகாப்பானது என்று நினைக்கக் கூடாது. டிவி திரையை சுத்தம் செய்ய எது பாதுகாப்பானது? டிவி திரையில் படிந்திருக்கும் தூசியை அகற்றுவதற்கு முதலில் மென்மையான, சுத்தமான மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்தலாம். துணி காய்ந்த நிலையில் இருக்க வேண்டும். திரையின் மீது அதிக அழுத்தம் கொடுக்காமல் மெதுவாகத் துடைக்க வேண்டும். தூசி மட்டும் இருந்தால் பெரும்பாலான நேரங்களில் உலர்ந்த மைக்ரோஃபைபர் துணியே போதுமானது. திரையில் கைரேகைகள் அல்லது ஒட்டிய கறைகள் இருந்தால், மற்றொரு சுத்தமான மைக்ரோஃபைபர் துணியை சிறிதளவு தண்ணீரில் ஈரப்படுத்தி, நன்றாகப் பிழிந்த பிறகு பயன்படுத்தலாம். இங்கே முக்கியமான விஷயம், துணி ஈரமாக இருக்கக்கூடாது. லேசாக ஈரமாக மட்டுமே இருக்க வேண்டும். துணியில் இருந்து தண்ணீர் சொட்டும் அளவுக்கு ஈரம் இருந்தால் அதை பயன்படுத்தக்கூடாது. திரையின் மீது நேரடியாக தண்ணீர் தெளிக்காதீர்கள்! டிவியை சுத்தம் செய்யும்போது பலரும் செய்யும் முக்கியமான தவறு, தண்ணீர் அல்லது கிளீனரை நேரடியாகத் திரையின் மீது தெளிப்பது. இதைத் தவிர்க்க வேண்டும். திரவம் திரையின் விளிம்புகளுக்குள் சென்று மின்னணு பாகங்களைப் பாதிக்கும் அபாயம் உள்ளது. தேவைப்பட்டால் துணியில் மட்டும் சிறிதளவு தண்ணீரைத் தெளித்து அல்லது ஈரப்படுத்தி, பின்னர் திரையை மெதுவாகத் துடைக்க வேண்டும். சுத்தம் செய்த பிறகு மற்றொரு உலர்ந்த மைக்ரோஃபைபர் துணியால் ஈரப்பதம் இல்லாமல் துடைக்கலாம். டிவியை அணைத்த பிறகே சுத்தம் செய்யுங்கள் டிவி இயங்கிக் கொண்டிருக்கும்போது திரையை சுத்தம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. முதலில் தொலைக்காட்சியை அணைத்து, மின்சார இணைப்பையும் துண்டித்துவிட்டு, திரை குளிர்ந்த பிறகு சுத்தம் செய்யலாம். திரை அணைந்த நிலையில் கறைகள் மற்றும் கைரேகைகளும் தெளிவாகத் தெரியும் என்பதால் சுத்தம் செய்வதும் எளிதாக இருக்கும். அதிக அழுத்தம் கொடுத்து தேய்க்காதீர்கள் திரையில் உள்ள கறை போகவில்லை என்பதற்காக விரல்களால் அழுத்தித் தேய்ப்பது அல்லது கடினமான துணியைப் பயன்படுத்துவது ஆபத்தானது. மென்மையான மைக்ரோஃபைபர் துணியால் மெதுவாகத் துடைப்பதே சிறந்தது. காகிதத் துண்டுகள், டிஷ்யூ, பழைய சட்டைத் துணி போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது. இவை திரையில் சிறிய கீறல்கள் ஏற்படுத்தலாம் அல்லது நார் துகள்களை விட்டுச் செல்லலாம். கீறல் ஏற்படுத்தும் பொருட்களை தவிர்க்கவும் ஸ்க்ரப்பர், கடினமான ஸ்பாஞ்ச், டிஷ் வாஷ் ஸ்பாஞ்ச், டிஷ்யூ பேப்பர் போன்றவற்றை டிவி திரையில் பயன்படுத்தக் கூடாது. திரை மிகவும் நுட்பமான மேற்பரப்பைக் கொண்டிருப்பதால், சிறிய கீறல்கள் கூட வெளிச்சத்தில் தெளிவாகத் தெரியக்கூடும். “ஸ்கிரீன் கிளீனர்” என்றாலே பாதுகாப்பானது இல்லை கடைகளில் “ஸ்கிரீன் கிளீனர்” என்று பெயரிடப்பட்ட பல பொருட்கள் கிடைக்கின்றன. ஆனால் பெயரை மட்டும் பார்த்து எந்தப் பொருளையும் டிவி திரையில் பயன்படுத்தக்கூடாது. உங்கள் தொலைக்காட்சி உற்பத்தியாளர் வழங்கிய பராமரிப்பு வழிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களையே பயன்படுத்துவது பாதுகாப்பானது. சில தொலைக்காட்சிகளுக்கு குறிப்பிட்ட திரவங்களைப் பயன்படுத்த அனுமதி இருக்கலாம்; சிலவற்றுக்கு தண்ணீர் மட்டுமே பரிந்துரைக்கப்படலாம். எனவே உங்கள் டிவியின் பயன்பாட்டு கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள சுத்தம் செய்யும் வழிமுறைகளைப் பார்ப்பது மிகவும் முக்கியம். எவ்வளவு அடிக்கடி டிவி திரையை சுத்தம் செய்ய வேண்டும்? டிவி திரையை தினமும் கிளீனிங் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தூசி அதிகமாகப் படிந்தால் உலர்ந்த மைக்ரோஃபைபர் துணியால் மெதுவாகத் துடைக்கலாம். கைரேகைகள் அல்லது கறைகள் தெரிந்தால் மட்டும் லேசாக ஈரப்படுத்தப்பட்ட துணியைப் பயன்படுத்தலாம். மேலும், டிவி திரையைச் சுற்றியுள்ள பகுதியை சுத்தம் செய்யும்போது தூசி நேரடியாக திரையில் படாதவாறு கவனமாக இருப்பதும் நல்லது. குழந்தைகள் திரையைத் தொடுவது, உணவு சாப்பிடும்போது திரையைத் தொடுவது போன்றவற்றைத் தவிர்த்தால் கைரேகைகள் மற்றும் எண்ணெய் பிசுக்கு படிவதையும் குறைக்கலாம். நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் டிவி திரையை சுத்தம் செய்யும்போது, கண்ணாடி கிளீனர், அமோனியா, ஆல்கஹால், வினிகர், சோப்பு, சுத்தம் செய்யும் பொடி மற்றும் அனைத்துப் பயன்பாட்டு கிளீனர்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. முதலில் உலர்ந்த மைக்ரோஃபைபர் துணியால் தூசியை அகற்ற வேண்டும். கறைகள் இருந்தால், உற்பத்தியாளர் பரிந்துரைத்த முறையைப் பின்பற்றி லேசாக ஈரப்படுத்தப்பட்ட மென்மையான துணியைப் பயன்படுத்தலாம். முக்கியமாக, எந்த திரவத்தையும் டிவி திரையின் மீது நேரடியாகத் தெளிக்கக் கூடாது. திரையை அழுத்தித் தேய்க்காமலும், கடினமான பொருட்களைப் பயன்படுத்தாமலும் இருப்பது அவசியம். சில நிமிடங்கள் கூடுதல் கவனம் செலுத்தி சுத்தம் செய்வது, பல ஆண்டுகள் பயன்படுத்த வேண்டிய டிவி திரையை தேவையற்ற சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும்.

வீடுகளில் உள்ள எல்இடி, எல்சிடி மற்றும் ஓஎல்இடி போன்ற நவீன தொலைக்காட்சித் திரைகளில் தூசி, கறைகள் மற்றும் கைரேகைகள் படிவது இயல்பான ஒன்று. திரையில் உள்ள இத்தகைய அழுக்குகள் தெளிவான பார்வையை மறைத்து, கவனச்சிதறலையும் ஏற்படுத்தக்கூடும்.
இதனை சுத்தம் செய்யப் பலரும் வீடுகளில் பயன்படுத்தப்படும் கண்ணாடி சுத்தம் செய்யும் திரவங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இவ்வாறு செய்வது தொலைக்காட்சித் திரைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அச்செயலைத் தவிர்க்க வேண்டும்.