PulseNews
லைஃப் ஸ்டைல்

கெட்டியான தயிர் வேண்டுமா? பால் காய்ச்சுறதுல இருந்து இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

அன்றாட உணவில் தயிர் சேர்த்துக் கொள்வது வெறும் சுவைக்காக மட்டுமல்ல; உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களை வழங்கும் உணவாகவும் தயிர் இருக்கிறது. தயிரில் காணப்படும் புரோபயாடிக்குகள் எனப்படும் நன்மை தரும் பாக்டீரியாக்கள் குடல் ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன. மேலும், இதில் கால்சியம், புரதம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்களும் உள்ளன. அதனால் பலரும் வீட்டிலேயே தயிர் தயாரித்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆனால், வீட்டில் தயிர் உறைய வைத்தால் சில நேரங்களில் அது கடைகளில் கிடைக்கும் தயிரைப் போல கெட்டியாக இல்லாமல் நீர்த்துப் போய்விடும். சில சமயங்களில் தயிரின் மேல் தண்ணீர் பிரிந்து நிற்பதையும் பார்க்கலாம். இதனால் கடையில் வாங்கும் தயிர் போல கெட்டியான, மென்மையான தயிரை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். உண்மையில், சில எளிய விஷயங்களில் கவனம் செலுத்தினாலே வீட்டுத் தயிரையும் நல்ல பதத்தில் தயாரிக்க முடியும். சரியான பாலைத் தேர்வு செய்யுங்கள் தயிரின் கெட்டித்தன்மையை தீர்மானிப்பதில் பயன்படுத்தும் பால் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிக கொழுப்புச் சத்து கொண்ட முழு கொழுப்பு பாலைப் பயன்படுத்தினால், தயிர் இயல்பாகவே கெட்டியாகவும் கிரீமியாகவும் கிடைக்கும். குறைந்த கொழுப்புள்ள பாலைப் பயன்படுத்தும்போது தயிர் சற்று இலகுவான பதத்தில் இருக்கலாம். முடிந்தவரை புதிய, நல்ல தரமான முழு கொழுப்பு பாலைப் பயன்படுத்துவது சிறந்தது. பால் எவ்வளவு தரமானதாக இருக்கிறதோ, அதைப் பொறுத்தே இறுதியில் கிடைக்கும் தயிரின் பதமும் இருக்கும். பால் பவுடர் சேர்க்கலாம் வீட்டில் அதிக கொழுப்புள்ள பால் கிடைக்கவில்லை என்றால், பால் பவுடர் ஒரு எளிய வழியாக இருக்கலாம். வெதுவெதுப்பான பாலில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி பால் பவுடரைச் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலக்கலாம். பால் பவுடர் சேர்ப்பதால் பாலில் உள்ள திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும். இதனால் தயிர் உறைந்த பிறகு சற்று கெட்டியான பதத்தைப் பெற உதவும். ஆனால் அதிக அளவு பால் பவுடர் சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது; இல்லையெனில் தயிரின் இயல்பான சுவையும் பதமும் மாறக்கூடும். பாலை நன்றாகக் கொதிக்க வைப்பது அவசியம் தயிர் தயாரிக்கும்போது பாலை வெறுமனே சூடாக்குவது மட்டும் போதாது. பாலை நன்றாகக் கொதிக்க வைத்து, சில நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்த பின்னர் அடுப்பை அணைக்கலாம். இதனால் பாலில் உள்ள தண்ணீரின் ஒரு பகுதி ஆவியாகி, பாலின் திடப்பொருட்கள் அதிகரிக்க உதவும். இதுவும் தயிர் கெட்டியாக உறைவதற்கு உதவும் ஒரு காரணமாகும். ஆனால் பாலை நீண்ட நேரம் கொதிக்க வைத்து அடிப்பிடிக்கச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தயிர் சேர்க்கும் வெப்பநிலைதான் முக்கியம் பாலை கொதிக்க வைத்தவுடன் அதில் தயிரைச் சேர்க்கக் கூடாது. மிகவும் சூடான பாலில் தயிர் சேர்த்தால், அதில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்கள் பாதிக்கப்படலாம். இதனால் தயிர் சரியாக உறையாமல் போகும் வாய்ப்பு உள்ளது. அதேபோல், பால் முழுமையாகக் குளிர்ந்துவிட்டாலும் தயிர் உறைவதற்கு அதிக நேரம் ஆகலாம். எனவே, பால் வெதுவெதுப்பான நிலையில் இருக்கும்போது உரைக்கு தயிரைச் சேர்ப்பது சிறந்தது. பால் சரியான வெப்பநிலையில் உள்ளதா என்பதை சுத்தமான விரலால் தொட்டு ஓரளவுக்குச் சோதிக்கலாம். விரலைச் சுடாத அளவுக்கு வெதுவெதுப்பாக இருந்தால் பொதுவாக தயிர் சேர்க்க ஏற்ற நிலையில் இருக்கும். நல்ல தரமான பழைய தயிரை உரைக்கு பயன்படுத்துங்கள் தயிர் நன்றாக உறைய வேண்டும் என்றால், உரைக்கு பயன்படுத்தும் தயிரும் முக்கியம். மிகவும் புளித்த தயிரை விட, புதியதாகவும் நல்ல பதத்தில் உறைந்ததாகவும் இருக்கும் தயிரைப் பயன்படுத்துவது சிறந்தது. ஒரு லிட்டர் பாலுக்கு பொதுவாக ஒரு முதல் இரண்டு தேக்கரண்டி தயிர் போதுமானது. அதிகமாக தயிர் சேர்த்தால், தயிர் விரைவாக உறையும் என்று நினைக்க வேண்டியதில்லை. மாறாக, சில நேரங்களில் அதிக புளிப்புடன் கூடிய தயிராக மாறலாம். தயிரை நன்றாகக் கலந்து விடுங்கள் உரைக்கு தேவையான தயிரை நேரடியாகப் பாலில் போட்டு விட்டால் மட்டும் போதாது. முதலில் சிறிதளவு வெதுவெதுப்பான பாலுடன் தயிரை நன்றாகக் கலந்து, பின்னர் அந்தக் கலவையை முழுப் பாலிலும் சேர்த்துக் கலக்கலாம். இதனால் தயிர் பாலில் சீராகப் பரவும். கலந்த பிறகு பாத்திரத்தை அதிகமாக அசைக்காமல் அப்படியே வைத்திருப்பது முக்கியம். பாத்திரத்தை மூடி சூடான இடத்தில் வையுங்கள் தயிர் உறைவதற்கு வெப்பநிலையும் முக்கியம். தயிர் கலந்த பாலை மூடி, சமையலறையில் வெப்பம் இருக்கும் இடத்தில் வைக்கலாம். குறிப்பாக குளிரான காலநிலையில், பாத்திரத்தை ஒரு தடிமனான துணி அல்லது டவலால் சுற்றி வைப்பது வெப்பத்தைத் தக்கவைக்க உதவும். வானிலை மற்றும் வீட்டின் வெப்பநிலையைப் பொறுத்து, தயிர் உறைய 6 முதல் 8 மணி நேரம் வரை ஆகலாம். குளிரான சூழலில் இன்னும் சில மணி நேரம் தேவைப்படலாம். தயிர் உறையும் வரை அடிக்கடி திறந்து பார்க்காதீர்கள் தயிர் கலந்த பாத்திரத்தை மீண்டும் மீண்டும் திறந்து பார்ப்பது அல்லது நகர்த்துவது தயிர் சரியாக உறைவதைப் பாதிக்கலாம். எனவே, ஒருமுறை உரை சேர்த்த பிறகு அதைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுவது நல்லது. குறிப்பாக தயிர் இன்னும் முழுமையாக உறையாத நிலையில் பாத்திரத்தை அசைப்பதைத் தவிர்க்க வேண்டும். மண்பானையில் உறைய வைத்தால் இன்னும் நல்ல பதம் கிடைக்கும் வீட்டில் மண்பானை இருந்தால் அதில் தயிரை உறைய வைக்கலாம். மண்பானை அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சுவதால், தயிர் சற்று கெட்டியான பதத்தில் கிடைக்க உதவும். அதுமட்டுமின்றி, மண்பானையில் உறைந்த தயிருக்கு தனித்துவமான மணமும் சுவையும் கிடைக்கும். ஆனால் மண்பானையைப் பயன்படுத்துவதற்கு முன்பு அது நன்றாக சுத்தமாகவும், தயிர் தயாரிப்பதற்கு ஏற்றதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தயிர் உறைந்ததும் உடனே கலக்க வேண்டாம் தயிர் உறைந்த பிறகு அதை உடனடியாகக் கிளறுவது அதன் அமைப்பை தளர்த்தக்கூடும். எனவே, தயிர் முழுமையாக உறைந்ததும் அதை மெதுவாகக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம். குறைந்தது ஒன்று முதல் இரண்டு மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பிறகு சாப்பிட்டால், தயிர் மேலும் கெட்டியான மற்றும் மென்மையான பதத்தைப் பெறும். தண்ணீர் பிரிவதைத் தவிர்க்க என்ன செய்யலாம்? தயிரில் தண்ணீர் பிரிவது முற்றிலும் தவறானது என்று சொல்ல முடியாது. தயிரில் இருந்து சிறிதளவு நீர் அல்லது மோர் பிரிவது இயல்பானது. ஆனால் அதிகமாக தண்ணீர் பிரிந்தால், அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பாலை போதுமான அளவு கொதிக்க வைக்காதது, சரியான வெப்பநிலை இல்லாதபோது உரை சேர்ப்பது, அதிக நேரம் வெப்பமான இடத்தில் வைப்பது, தயிரை மீண்டும் மீண்டும் கிளறுவது போன்றவை காரணமாக இருக்கலாம். எனவே, பால் கொதிக்க வைப்பது முதல் தயிரை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது வரை ஒவ்வொரு கட்டத்திலும் கவனம் செலுத்த வேண்டும். தயிரை அதிக நேரம் வெளியே வைக்க வேண்டாம் தயிர் நன்றாக உறைந்ததும், குறிப்பாக வெப்பமான காலநிலையில், அதை நீண்ட நேரம் அறை வெப்பநிலையில் வைக்காமல் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது நல்லது. இதனால் தயிரின் சுவை மற்றும் பதத்தைச் சிறப்பாகப் பாதுகாக்க முடியும். மேலும், தயிரை எடுக்கும் ஒவ்வொரு முறையும் சுத்தமான, உலர்ந்த கரண்டியைப் பயன்படுத்துவது நல்ல பழக்கமாகும். இந்த சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துங்கள் வீட்டில் கடை தயிர் போல கெட்டியான, கிரீமியான தயிர் வேண்டுமென்றால், அதிக கொழுப்புள்ள பாலைத் தேர்வு செய்வது, பாலை நன்றாகக் கொதிக்க வைப்பது, சரியான வெப்பநிலையில் உரை சேர்ப்பது, நல்ல தரமான தயிரைப் பயன்படுத்துவது, தயிரை சூடான இடத்தில் அசைக்காமல் வைப்பது ஆகியவை முக்கியம். இதனுடன், தயிர் உறைந்த பிறகு அதை சில மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் அதன் பதம் மேலும் மேம்படும். இந்த எளிய முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், அடிக்கடி கடையில் தயிர் வாங்க வேண்டிய அவசியமின்றி, வீட்டிலேயே கெட்டியான, மென்மையான மற்றும் கிரீமியான தயிரைத் தயாரித்து சுவைக்கலாம்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கெட்டியான தயிர் வேண்டுமா? பால் காய்ச்சுறதுல இருந்து இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
PulseNews சுருக்கம்

உணவில் தயிரைச் சேர்த்துக் கொள்வது சுவைக்காக மட்டுமல்லாமல், அதில் உள்ள புரோபயாடிக்குகள், கால்சியம், புரதம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களுக்காகவும் முக்கியமானது. குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் தயிரை பலர் தங்கள் வீடுகளிலேயே தயாரித்து உண்ணும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

இருப்பினும், கடைகளில் கிடைப்பதைப் போல கெட்டியான தயிரை வீட்டில் தயாரிப்பதில் பலருக்கும் சிரமம் உள்ளது. பால் காய்ச்சும் முறையிலிருந்து சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், வீட்டிலேயே கெட்டியான தயிரைத் தயாரிக்க முடியும்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle