PulseNews
லைஃப் ஸ்டைல்

ரவுட்டர் மேல ஒரு நாணயம்... இன்டர்நெட் ஸ்பீடு டபுள் ஆகுமா? அது எப்படினு தெரிஞ்சுக்கோங்க

இன்றைய காலகட்டத்தில் வீடு, அலுவலகம் என பெரும்பாலான இடங்களில் இணைய பயன்பாட்டுக்கு வைஃபை ரூட்டர் முக்கிய சாதனமாக உள்ளது. இதனால் வைஃபை வேகம் குறைந்தால் அதை அதிகரிக்க பல்வேறு வழிகளை இணையத்தில் தேடுவது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில், வைஃபை ரூட்டர் மேல் ஒரு நாணயத்தை வைத்தால் இன்டர்நெட் வேகம் அதிகரிக்கும் என்ற தகவல் சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஆனால், இந்த வைரல் ‘ஹேக்’ உண்மையான அறிவியல் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்றும், இதனால் இணைய வேகம் அதிகரிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாணயம் வைத்தால் வேகம் அதிகரிக்கும் என்ற கருத்து எப்படி உருவானது? வைஃபை ரூட்டரின் மேல் உலோக நாணயத்தை வைப்பதன் மூலம், அது கூடுதல் ஆண்டெனா போல செயல்பட்டு வைஃபை சிக்னலை ஒரு குறிப்பிட்ட திசையில் அதிகரிக்கும் என்ற கருத்துதான் இந்த வைரல் ஹேக்கின் அடிப்படை. சில சமூக வலைத்தளப் பதிவுகளில், நாணயம் சிக்னலை ‘ரிஃப்ளெக்ட்’ செய்து குறிப்பிட்ட பகுதிக்கு அதிக வைஃபை கிடைக்கச் செய்யும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், சாதாரண நாணயத்தை ரூட்டர் மீது வைப்பதால் இணைய இணைப்பின் வேகம் தானாக அதிகரிக்கும் என்பதற்கு நம்பகமான அறிவியல் ஆதாரம் இல்லை. நாணயம் வைத்தால் ரவுட்டருக்கு என்ன நடக்கும்? ரூட்டர் என்பது தொடர்ந்து மின்சாரம் மற்றும் தரவு பரிமாற்றத்தில் இயங்கும் மின்னணு சாதனமாகும். அதன் செயல்பாட்டின்போது ஓரளவு வெப்பம் உருவாகும். இந்த வெப்பத்தை வெளியேற்ற ரூட்டரின் வடிவமைப்பில் காற்றோட்டத்துக்கான இடங்கள் விடப்பட்டிருக்கும். ரூட்டரின் மேல் நாணயம், பொருள் அல்லது வேறு எந்த பொருளையும் வைத்து மூடுவது காற்றோட்டத்தை ஓரளவு பாதிக்கக்கூடும். ரூட்டர் தொடர்ந்து அதிக வெப்பநிலையில் இயங்கினால் அதன் செயல்திறன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. நீண்ட காலத்திற்கு அதிக வெப்பம் நிலவுவது சாதனத்தின் உள் பாகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், ரூட்டரின் ஆயுளையும் குறைக்கக்கூடும். எனவே, வேகத்தை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் ரூட்டரின் மேல் நாணயத்தை வைப்பது தேவையற்ற ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய செயலாகும். சிக்னலை அதிகரிப்பதற்கு பதிலாக பாதிக்குமா? உலோகப் பொருட்கள் ரேடியோ அலைகளுடன் தொடர்பு கொள்ளக்கூடியவை என்பதால், ரூட்டரின் ஆண்டெனா மற்றும் சிக்னல் பரவும் திசைக்கு அருகில் அவற்றை வைப்பது சில சூழ்நிலைகளில் சிக்னல் பரவலை மாற்றக்கூடும். ஆனால், இதை இணைய வேகத்தை அதிகரிக்கும் முறையாகக் கருத முடியாது. மாறாக, நாணயம் தவறான இடத்தில் வைக்கப்பட்டால் குறிப்பிட்ட திசையில் செல்லும் சிக்னலுக்கு இடையூறு ஏற்பட்டு, சில பகுதிகளில் இணைப்பு தரம் குறையக்கூடும். மேலும், வைஃபை வேகம் என்பது ரூட்டர் மட்டும் தீர்மானிக்கும் விஷயம் அல்ல. இணைய சேவை வழங்குநரின் திட்ட வேகம், நெட்வொர்க் நெரிசல், ரூட்டரின் திறன், சாதனத்திற்கும் ரூட்டருக்கும் இடையிலான தூரம், சுவர்கள் மற்றும் பிற தடைகள், ஒரே நேரத்தில் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல காரணிகள் இணைய அனுபவத்தை பாதிக்கின்றன. ரவுட்டரை எங்கு வைக்கிறோம் என்பதும் முக்கியம்! வைஃபை வேகம் குறைவாக இருந்தால், ரூட்டரின் மேல் நாணயம் வைப்பதற்கு பதிலாக அதை சரியான இடத்தில் வைப்பது அதிக பயன் தரக்கூடியது. ரூட்டரை வீட்டின் மையப்பகுதியில், தரையில் இல்லாமல் சற்று உயரமான மற்றும் திறந்த இடத்தில் வைப்பது பொதுவாக சிறந்தது. அலமாரிக்குள், மூடிய பெட்டிக்குள் அல்லது தடிமனான சுவர்களுக்கு பின்னால் ரூட்டரை வைத்தால் சிக்னல் பரவல் பாதிக்கப்படலாம். மைக்ரோவேவ் ஓவன், பெரிய உலோகப் பொருட்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களுக்கு மிக அருகில் ரூட்டரை வைப்பதையும் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக வீட்டின் ஒரு மூலையில் ரூட்டரை வைத்துவிட்டு, மற்றொரு பகுதியில் சிக்னல் கிடைக்கவில்லை என்று கூறுவதைவிட, ரூட்டரின் இருப்பிடத்தை மாற்றிப் பார்ப்பது பல நேரங்களில் எளிய தீர்வாக இருக்கலாம். வைஃபை வேகம் குறைந்தால் என்ன செய்யலாம்? முதலில் ரூட்டர் மற்றும் இணைய இணைப்பை ஒருமுறை மறுதொடக்கம் செய்து பார்க்கலாம். ரூட்டரின் மென்பொருள் அல்லது firmware புதுப்பிப்பு தேவையா என்பதையும் சரிபார்க்கலாம். அதிக எண்ணிக்கையிலான சாதனங்கள் ஒரே நேரத்தில் இணைந்திருந்தால் தேவையில்லாத சாதனங்களைத் துண்டிப்பதும் உதவக்கூடும். வீட்டில் அதிக தூரம் அல்லது பல அறைகளுக்கு வைஃபை தேவைப்பட்டால், தரமான Wi-Fi extender அல்லது mesh Wi-Fi அமைப்பைப் பயன்படுத்துவது பொருத்தமான தீர்வாக இருக்கலாம். மேலும், இணைய சேவை வழங்குநர் வழங்கும் திட்டத்தின் வேகம் உண்மையில் போதுமானதா என்பதையும் சரிபார்க்க வேண்டும். வைரல் தகவல்களை நம்புவதற்கு முன் கவனம் தேவை சமூக வலைத்தளங்களில் ‘ஒரு நிமிட ஹேக்’, ‘ரகசிய ட்ரிக்’, ‘100 சதவீதம் வேகம் அதிகரிக்கும்’ போன்ற தலைப்புகளுடன் பல்வேறு தொழில்நுட்ப குறிப்புகள் வேகமாகப் பரவுகின்றன. அவற்றில் சில பயனுள்ளதாக இருக்கலாம்; ஆனால், அனைத்தும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டவை அல்ல. குறிப்பாக மின்னணு சாதனங்களுடன் தொடர்புடைய ஹேக்குகளை முயற்சிப்பதற்கு முன்பு, அவை சாதனத்தின் செயல்பாட்டையோ பாதுகாப்பையோ பாதிக்குமா என்பதை கவனிக்க வேண்டும். எனவே, வைஃபை ரூட்டர் மேல் நாணயம் வைத்தால் இன்டர்நெட் வேகம் அதிகரிக்கும் என்பது நம்பகமான வழி அல்ல. இணைய வேகம் குறைவாக இருந்தால் ரூட்டரின் இருப்பிடம், இணைக்கப்பட்ட சாதனங்களின் எண்ணிக்கை, நெட்வொர்க் நெரிசல், ரூட்டரின் திறன் மற்றும் இணைய சேவைத் திட்டம் போன்ற உண்மையான காரணிகளை முதலில் சரிபார்ப்பதே சிறந்தது. வைரலாகிறது என்பதற்காக ஒவ்வொரு ‘ஹேக்’கையும் வீட்டில் முயற்சிப்பதைவிட, தொழில்நுட்ப ரீதியாக சரியான தீர்வுகளைத் தேர்வு செய்வது பாதுகாப்பானதாக இருக்கும்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ரவுட்டர் மேல ஒரு நாணயம்... இன்டர்நெட் ஸ்பீடு டபுள் ஆகுமா? அது எப்படினு தெரிஞ்சுக்கோங்க
PulseNews சுருக்கம்

இன்றைய காலகட்டத்தில் வைஃபை ரூட்டர் இணையப் பயன்பாட்டிற்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இதனால் இன்டர்நெட் வேகம் குறைந்தால் அதை அதிகரிக்கப் பலரும் இணையத்தில் பல்வேறு வழிகளைத் தேடி வருகின்றனர். அந்த வகையில், வைஃபை ரூட்டரின் மேல் ஒரு நாணயத்தை வைத்தால் இணைய வேகம் அதிகரிக்கும் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இருப்பினும், இந்த இணையக் குறிப்பு எந்தவிதமான அறிவியல் ஆதாரத்தையும் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இத்தகைய முறைகளைப் பின்பற்றுவதால் இணைய வேகம் அதிகரிக்காது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle