PulseNews
லைஃப் ஸ்டைல்

சிக்கன் பிரியர்களே உஷார்! கெட்டுப்போன இறைச்சியை கண்டுபிடிக்க இதை பாருங்க; சிம்பிள் ஐடியாஸ் இருக்கு

காய்கறிகளைப் பார்த்துப் பார்த்து தரமானதாக வாங்கும் பலருக்கும், இறைச்சி வகைகளைத் தேர்வு செய்வதில் சற்று குழப்பம் இருக்கலாம். குறிப்பாக, அதிகம் நுகரப்படும் கோழி இறைச்சியை வாங்கும்போது அதன் தரத்தைச் சரியாகக் கண்டறிவது மிகவும் அவசியம். வெளியில் பார்ப்பதற்கு நன்றாகத் தெரிந்தாலும், முறையாகச் சேமிக்கப்படாத அல்லது நீண்ட நேரம் வைக்கப்பட்ட சிக்கனில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் வளர வாய்ப்புள்ளது. இதனால் உணவு நச்சுத்தன்மை, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, சிக்கன் வாங்கும்போதும், வீட்டில் சேமிக்கும்போதும் சில முக்கிய விஷயங்களை கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும். 1. சிக்கனின் நிறத்தை முதலில் பாருங்கள் புதிய கோழி இறைச்சி பொதுவாக இளஞ்சிவப்பு நிறத்திலும், கொழுப்புப் பகுதிகள் வெண்மை அல்லது கிரீம் நிறத்திலும் காணப்படும். இறைச்சியின் நிறம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், இயல்பற்ற மாற்றங்கள் தென்பட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக, சிக்கன் சாம்பல், பச்சை அல்லது மஞ்சள் நிறமாக மாறியிருப்பது, மேற்பரப்பில் இயல்பற்ற நிறமாற்றம் ஏற்பட்டிருப்பது போன்றவை தரம் குறைந்திருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். மேலும், வெள்ளை, பச்சை அல்லது கருப்பு நிறத்தில் பஞ்சு போன்ற பூஞ்சை தென்பட்டால் அந்த இறைச்சியை வாங்கவே கூடாது. பூஞ்சை பாதிக்கப்பட்ட இறைச்சியின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி எடுத்துவிட்டு மீதியை சமைப்பதும் பாதுகாப்பான வழி அல்ல. 2. வாசனை மூலம் கண்டுபிடிக்கலாம் சிக்கனை வாங்கும்போது அதன் வாசனையையும் கவனிப்பது மிகவும் முக்கியம். புதிய சிக்கனில் கடுமையான துர்நாற்றம் இருக்காது. ஆனால், கெட்டுப்போகத் தொடங்கிய இறைச்சியில் அழுகிய முட்டையைப் போன்ற கந்தக வாசனை, கடுமையான புளிப்பு வாசனை அல்லது சகிக்க முடியாத துர்நாற்றம் வீசலாம். பாக்கெட்டைத் திறந்தவுடன் மிகவும் மோசமான வாசனை வந்தால், அதை சமைத்து சாப்பிடலாம் என்று நினைக்க வேண்டாம். சமைப்பதால் கெட்டுப்போன இறைச்சி பாதுகாப்பானதாக மாறிவிடாது. சந்தேகத்திற்கிடமான வாசனை இருந்தால் வாங்காமல் இருப்பதே சிறந்தது. 3. தொட்டுப் பார்க்கும்போது வழுவழுப்பாக இருக்கிறதா? புதிய சிக்கன் இயல்பாகவே ஈரப்பதமாக இருக்கும். ஆனால், அதைத் தொடும்போது அதிகப்படியான பிசுபிசுப்பு அல்லது வழுவழுப்பான படலம் இருப்பது கவனிக்க வேண்டிய அறிகுறியாகும். குறிப்பாக, இறைச்சியின் மேற்பரப்பில் ஒட்டும் தன்மை அதிகமாக இருந்து, தண்ணீரில் கழுவிய பிறகும் அது மாறாமல் இருந்தால் அந்த சிக்கனைத் தவிர்ப்பது நல்லது. இருப்பினும், பச்சை சிக்கனை கடையில் வெறும் கைகளால் தொட்டுப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். பாக்கெட் அல்லது பேக்கேஜிங் வழியாக அதன் தோற்றத்தைப் பார்த்து மதிப்பிடுவது பாதுகாப்பானது. 4. பேக்கிங் மற்றும் காலாவதி விவரங்களைப் பாருங்கள் சிக்கனின் நிறம், வாசனை மட்டுமல்லாமல், அது எப்படி பேக் செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். பாக்கெட் கிழிந்திருந்தாலோ, வீங்கியிருந்தாலோ அல்லது அதிலிருந்து திரவம் கசிந்திருந்தாலோ வாங்குவதைத் தவிர்க்கலாம். லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள பேக்கிங் தேதி, பயன்படுத்த வேண்டிய காலவரம்பு மற்றும் சேமிப்பு வழிமுறைகளைப் பார்க்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்க வேண்டிய சிக்கன் நீண்ட நேரம் வெளியில் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிந்தால், அதன் தரம் குறித்து சந்தேகம் இருந்தால் வாங்காமல் இருப்பது நல்லது. 5. கடையில் சிக்கன் எப்படி வைக்கப்பட்டுள்ளது என்பதையும் கவனியுங்கள் தரமான சிக்கனைத் தேர்வு செய்வதில் விற்பனை செய்யப்படும் இடத்தின் சுகாதாரமும் முக்கியமானது. சிக்கன் மற்ற உணவுப் பொருட்களுடன் கலந்து வைக்கப்பட்டிருக்கிறதா, போதுமான குளிரூட்டலில் வைக்கப்பட்டுள்ளதா, இறைச்சியை கையாளும் பணியாளர்கள் சுத்தமாக இருக்கிறார்களா என்பதையும் கவனிக்கலாம். அறை வெப்பநிலையில் நீண்ட நேரம் வைக்கப்பட்டிருக்கும் சிக்கனை வாங்குவது பாதுகாப்பானது அல்ல. சமைத்த இறைச்சி மற்றும் பச்சை இறைச்சியை ஒன்றாக வைத்திருக்கும் கடைகளிலும் கூடுதல் கவனம் தேவை. 6. சிக்கனை வீட்டுக்கு கொண்டு வந்ததும் தாமதிக்காதீர்கள் நல்ல சிக்கனைத் தேர்வு செய்துவிட்டால் மட்டும் போதாது. வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு அதை சரியான முறையில் சேமிப்பதும் அவசியம். குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டிய பச்சை சிக்கனை அறை வெப்பநிலையில் நீண்ட நேரம் வைக்கக் கூடாது. பொதுவாக, அழுகக்கூடிய உணவுகளை அறை வெப்பநிலையில் 2 மணி நேரத்துக்கு மேல் வைக்காமல் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது பாதுகாப்பான நடைமுறையாகும். வெளிப்புற வெப்பநிலை அதிகமாக இருக்கும் சூழலில், குறிப்பாக சுமார் 32°C-க்கு மேல் இருந்தால், இந்த நேரம் சுமார் 1 மணி நேரமாகக் குறைகிறது. 7. ஃப்ரிட்ஜில் வைத்தாலும் அதிக நாட்கள் சேமிக்க வேண்டாம் பச்சை சிக்கனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தாலும், நீண்ட நாட்களுக்கு அப்படியே வைக்கக்கூடாது. பொதுவாக, பச்சை கோழி இறைச்சியை ஃப்ரிட்ஜில் 1 முதல் 2 நாட்களுக்குள் பயன்படுத்துவது நல்லது. அதற்குள் சமைக்க முடியாது என்றால், நீண்ட கால சேமிப்புக்காக ஃப்ரீசரில் வைக்கலாம். சிக்கனை வாங்கியவுடன் சிறிய அளவுகளாகப் பிரித்து, தேவையான அளவுக்கு மட்டும் தனித்தனி பாக்கெட்டுகளில் உறைய வைப்பது பின்னர் பயன்படுத்துவதற்கும் வசதியாக இருக்கும். 8. பச்சை சிக்கனையும் மற்ற உணவுகளையும் தனியாக வையுங்கள் பச்சை சிக்கனில் இருக்கும் நுண்ணுயிரிகள் மற்ற உணவுகளுக்குப் பரவாமல் இருப்பது மிகவும் முக்கியம். எனவே, சிக்கனை காய்கறிகள், பழங்கள், சமைத்த உணவுகள் போன்றவற்றுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளாத வகையில் தனியாக மூடி வைக்க வேண்டும். ஃப்ரிட்ஜில் வைக்கும்போது சிக்கன் பாக்கெட்டிலிருந்து சாறு கசிந்தால், அது மற்ற உணவுகளின் மீது படாதவாறு கீழ்தட்டில் வைப்பது உதவும். 9. பச்சை சிக்கனை கழுவுவது அவசியமில்லை பலரும் சிக்கனை சமைப்பதற்கு முன்பு தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், பச்சை கோழி இறைச்சியை கழுவும்போது அதில் இருக்கும் நுண்ணுயிரிகள் தண்ணீர் துளிகள் மூலம் சிங்க், சமையல் மேடை மற்றும் அருகிலுள்ள பாத்திரங்களுக்கு பரவக்கூடும். எனவே, சிக்கனை கழுவுவதற்குப் பதிலாக முறையாகச் சமைப்பதே முக்கியம். சிக்கனை கையாள்ந்த பிறகு கைகள், கத்தி, வெட்டும் பலகை மற்றும் சமையல் மேற்பரப்புகளை நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். 10. சமைத்த சிக்கனுக்கும் சேமிப்பு காலம் உண்டு சிக்கனை சமைத்துவிட்டால் அது எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைக்கக்கூடாது. மீதமுள்ள சமைத்த சிக்கனை காற்றுப் புகாத மூடியுள்ள பாத்திரத்தில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். பொதுவாக, சமைத்த சிக்கனை ஃப்ரிட்ஜில் 3 முதல் 4 நாட்களுக்குள் பயன்படுத்துவது நல்லது. அதற்கு மேல் வைத்திருந்தால் அதன் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து சந்தேகம் ஏற்படலாம். 11. சமைக்கும்போதும் கவனம் தேவை சிக்கனை வெளிப்புறம் மட்டும் வெந்திருக்கும்படி சமைப்பது போதாது. அதன் உட்பகுதியும் நன்றாக வெந்திருக்க வேண்டும். குறிப்பாக, எலும்புக்கு அருகிலுள்ள பகுதிகளிலும் இறைச்சி முழுமையாக வேகவைத்திருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். உணவுப் பாதுகாப்புக்காக கோழி இறைச்சியின் உட்புற வெப்பநிலை 74°C (165°F) அளவை எட்டும் வகையில் சமைப்பது பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. வெப்பநிலையை அளக்கும் உணவு வெப்பமானி இருந்தால், தடிமனான பகுதியில் அளவிடுவது மிகவும் நம்பகமான முறையாகும். 12. சந்தேகம் இருந்தால் சுவைத்துப் பார்க்காதீர்கள்! சிக்கன் கெட்டுப்போயிருக்குமா என்ற சிறிய சந்தேகம் ஏற்பட்டாலும், அதைச் சுவைத்துப் பார்த்து சரிபார்க்க முயற்சிக்கக்கூடாது. குறிப்பாக துர்நாற்றம், இயல்பற்ற நிறமாற்றம், அதிகப்படியான பிசுபிசுப்பு அல்லது பூஞ்சை போன்ற அறிகுறிகள் இருந்தால் அதைத் தவிர்ப்பதே பாதுகாப்பான முடிவு. “சமைத்தால் சரியாகிவிடும்” என்று நினைத்து ஆபத்தை எடுத்துக்கொள்ள வேண்டாம். சிக்கனை வாங்குவது முதல் வீட்டில் சேமித்து சமைப்பது வரை ஒவ்வொரு கட்டத்திலும் உணவுப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றினால், தேவையற்ற உணவு நச்சுத்தன்மை அபாயத்தை குறைக்க முடியும்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சிக்கன் பிரியர்களே உஷார்! கெட்டுப்போன இறைச்சியை கண்டுபிடிக்க இதை பாருங்க; சிம்பிள் ஐடியாஸ் இருக்கு
PulseNews சுருக்கம்

காய்கறிகளைத் தேர்ந்தெடுப்பதில் காட்டும் கவனத்தை, கோழி இறைச்சியை வாங்கும்போதும் நாம் செலுத்த வேண்டியது அவசியம். வெளியில் பார்ப்பதற்குப் புத்துணர்ச்சியாகத் தெரிந்தாலும், முறையாகச் சேமிக்கப்படாத இறைச்சியில் பாக்டீரியாக்கள் எளிதில் உருவாகிவிடும்.

நீண்ட நேரம் வைக்கப்பட்ட அல்லது தரமற்ற இறைச்சியை உட்கொள்வது உணவு நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், சிக்கனை வாங்கும் போது அதன் தரத்தை உறுதி செய்வது மிக முக்கியம்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle