PulseNews
லைஃப் ஸ்டைல்

ஏ, பி, சி, டி... சிலிண்டர்ல ஏன் இப்படி எழுதியிருக்கு? சாதாரண விஷயம் இல்லை; என்னனு தெரிஞ்சிக்கோங்க

வீட்டு சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் பாதுகாப்பான நிலையில் இருப்பது மிகவும் அவசியம். சிலிண்டரில் இருக்கும் ஒரு சிறிய எழுத்தும், இரண்டு இலக்க எண்ணும் பலருக்கும் புரியாத ஒரு குறியீடாகத் தெரிந்தாலும், அது சிலிண்டரின் அடுத்த கட்ட பாதுகாப்புச் சோதனை எப்போது செய்யப்பட வேண்டும் என்பதைக் குறிக்கும் முக்கியமான தகவலாகும். எனவே, வீட்டுக்கு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் ஒவ்வொரு முறையும், சீல் மற்றும் எடையை மட்டும் சரிபார்க்காமல், சிலிண்டரில் இருக்கும் இந்தக் குறியீட்டையும் பார்த்துத் தெரிந்துகொள்வது நல்லது. சிலிண்டருக்கு ‘காலாவதி தேதி’ இருக்கிறதா? பொதுவாக சமையல் எரிவாயு சிலிண்டரில் இருக்கும் ஏ, பி, சி, டி என்ற எழுத்துக்களையும், அவற்றுக்கு அருகில் இருக்கும் இரண்டு இலக்க எண்ணையும் பார்த்து, அது சிலிண்டரின் நேரடி ‘காலாவதி தேதி’ என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இந்தக் குறியீடு உண்மையில் சிலிண்டருக்கு சட்டப்பூர்வ சோதனை மற்றும் வண்ணப்பூச்சுப் பணிகள் எப்போது மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிடும் ‘சோதனைத் தேதி’ குறியீடாகும். சிலிண்டர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதால், இந்தக் குறியீடு நுகர்வோருக்கும் விநியோக முறையிலும் பாதுகாப்பு கண்காணிப்புக்கு உதவுகிறது. சிலிண்டரில் இந்தக் குறியீடு எங்கே இருக்கும்? சிலிண்டரின் கழுத்துப் பகுதியைச் சுற்றி மேல்புறத்தில் காணப்படும் மூன்று செங்குத்தான இரும்பு உலோகப் பட்டைகளில் ஒன்றில் இந்தக் குறியீடு முத்திரையாகப் பொறிக்கப்பட்டிருக்கும். இதில் முதலில் ஏ, பி, சி அல்லது டி என்ற ஆங்கில எழுத்தும், அதன் பின்னர் இரண்டு இலக்க எண்ணும் இருக்கும். உதாரணமாக சி-26, பி-27, டி-28 போன்ற குறியீடுகள் இருக்கலாம். ஏ, பி, சி, டி என்றால் என்ன? சிலிண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள ஆங்கில எழுத்து, அந்தச் சிலிண்டர் அடுத்ததாகச் சோதிக்கப்பட வேண்டிய ஆண்டின் எந்தக் காலாண்டைக் குறிக்கிறது என்பதைத் தெரிவிக்கிறது. ஏ – ஜனவரி முதல் மார்ச் வரை பி – ஏப்ரல் முதல் ஜூன் வரை சி – ஜூலை முதல் செப்டம்பர் வரை டி – அக்டோபர் முதல் டிசம்பர் வரை அதற்கு அருகில் இருக்கும் இரண்டு இலக்க எண், அந்தச் சோதனை நடைபெற வேண்டிய ஆண்டைக் குறிக்கும். உதாரணமாக, சி-26 என்றால் 2026-ம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தைக் குறிக்கும். பி-27 என்றால் 2027-ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தையும், டி-28 என்றால் 2028-ம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தையும் குறிக்கும். இந்தச் சோதனை ஏன் முக்கியம்? இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தகவலின்படி, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வலுவான எஃகால் தயாரிக்கப்பட்டு, குறிப்பிட்ட தரநிலைகளுக்கு ஏற்ப உருவாக்கப்படுகின்றன. அவை உரிய பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் ஆய்வு செய்யப்படுகின்றன. சிலிண்டர் நீண்ட காலம் பயன்படுத்தப்பட்டாலும், அதன் உடல் அமைப்பு, வலிமை மற்றும் பாதுகாப்பு நிலை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக குறிப்பிட்ட இடைவெளிகளில் கட்டாயச் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. பொதுவாக சிலிண்டர் பயன்பாட்டுக்கு வந்த பிறகு முதல் 10 ஆண்டுகளில் ஒருமுறை சோதனை செய்யப்படுகிறது. அதன் பின்னர் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்தச் செயல்முறையே சட்டப்பூர்வ சோதனை மற்றும் வண்ணப்பூச்சுப் பணி எனப்படுகிறது. சோதனைக்கு சென்ற பிறகு சிலிண்டருக்கு என்ன நடக்கும்? சோதனை தேதி நெருங்கியதும், சம்பந்தப்பட்ட சிலிண்டர்கள் சோதனைக்காக ஆலைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அங்கு அவை பிரித்து ஆய்வு செய்யப்படுவதுடன், சிலிண்டரின் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டுக்குத் தகுந்த நிலையையும் பரிசோதிக்கின்றனர். சோதனையில் தகுதி பெறாத சிலிண்டர்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டு மாற்றப்படுகின்றன. சோதனையில் தேர்ச்சி பெறும் சிலிண்டர்கள் தேவையான பராமரிப்பு மற்றும் வண்ணப்பூச்சுப் பணிகளுக்குப் பிறகு புதிய சோதனைத் தேதியுடன் மீண்டும் விநியோகத்துக்கு அனுப்பப்படுகின்றன. சிலிண்டர் வீட்டுக்கு வந்ததும் இதையெல்லாம் பாருங்க! சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் போது, பலரும் உடனடியாக சீல் இருக்கிறதா, எடை சரியாக இருக்கிறதா என்று மட்டுமே பார்க்கிறார்கள். இவற்றுடன் சிலிண்டரின் உடல் நிலையையும், சோதனைத் தேதி குறியீட்டையும் கவனிப்பது நல்லது. சிலிண்டரைப் பெறும்போது: சீல் சரியாக உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். சிலிண்டரின் எடை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். சிலிண்டரில் துருப்பிடித்துள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். சிலிண்டர் உடைந்த, வளைந்த அல்லது சேதமடைந்த நிலையில் உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். கழுத்துப் பகுதியில் உள்ள ஏ, பி, சி, டி குறியீட்டைச் சரிபார்க்க வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு மற்றும் ஆண்டு தற்போதைய காலத்தை விட மிகவும் பின்தங்கியுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். துருப்பிடித்த சிலிண்டர் வந்தால் என்ன செய்வது? சிலிண்டரின் வெளிப்புறத்தில் அதிகமாக துருப்பிடித்திருப்பது, ஆழமான சேதம் இருப்பது அல்லது சிலிண்டர் அசாதாரணமாகத் தோன்றுவது போன்றவை இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அத்தகைய சிலிண்டரைப் பயன்படுத்தாமல், உடனடியாக சம்பந்தப்பட்ட சமையல் எரிவாயு விநியோகஸ்தரிடம் தெரிவித்து மாற்றிக் கொள்வது பாதுகாப்பான நடைமுறையாகும். அதேபோல், சோதனைக்கான காலகட்டம் கடந்ததாகத் தெரியும் சிலிண்டர் வழங்கப்பட்டிருந்தாலும், அதை ஏற்றுக்கொள்வதற்கு முன் விநியோகஸ்தரிடம் விளக்கம் கேட்டு, தேவையானால் மாற்றிக் கொள்வது நல்லது. ஒரு சிறிய குறியீடு... பெரிய பாதுகாப்பு! சிலிண்டரில் இருக்கும் இந்த எழுத்து மற்றும் எண் குறியீடு பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக இருந்தாலும், சமையல் எரிவாயு சிலிண்டரின் கட்டாயப் பாதுகாப்புச் சோதனையைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான தகவலாகும். வீட்டில் உள்ள அனைவரும், குறிப்பாக சிலிண்டரைப் பெறும் நபர், இந்தக் குறியீட்டின் அர்த்தத்தைத் தெரிந்துகொள்வது அவசியம். எனவே, அடுத்த முறை வீட்டுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வந்தவுடன், ‘சீல் இருக்கா? எடை சரியா?’ என்பதோடு ‘சிலிண்டரின் சோதனைக் குறியீடு என்ன?’ என்பதையும் ஒரு முறை பாருங்கள். சந்தேகத்திற்கிடமான, சேதமடைந்த, அதிகமாகத் துருப்பிடித்த அல்லது சோதனை காலகட்டம் கடந்த சிலிண்டர் இருந்தால் அதை பயன்படுத்தாமல், விநியோகஸ்தரிடம் உடனடியாகத் தெரிவிப்பதே குடும்பத்தின் பாதுகாப்புக்கு சிறந்த நடவடிக்கையாகும்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஏ, பி, சி, டி... சிலிண்டர்ல ஏன் இப்படி எழுதியிருக்கு? சாதாரண விஷயம் இல்லை; என்னனு தெரிஞ்சிக்கோங்க
PulseNews சுருக்கம்

வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களில் எழுதப்பட்டிருக்கும் ஏ, பி, சி, டி போன்ற எழுத்துகளும் எண்களும் பாதுகாப்பின் அடிப்படையில் மிக முக்கியமானவை. இவை அந்த சிலிண்டர் அடுத்ததாக எப்போது பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதைக் குறிக்கும் காலாவதி தேதியின் குறியீடுகளாகும்.

எனவே, சமையல் எரிவாயு சிலிண்டரை வீட்டிற்குப் பெறும்போது, அதன் எடை மற்றும் சீல் ஆகியவற்றை மட்டும் சரிபார்க்காமல், இந்த பாதுகாப்பு குறியீடுகளையும் கவனமாகப் பார்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle