PulseNews
லைஃப் ஸ்டைல்

காணிக்கை நகையால் வந்த வினை...! காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் பூசாரி மீது அதிரடி நடவடிக்கை...!

நெல்லை மாவட்டம் காரையாறு பகுதியில் பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவிலில், பக்தர் காணிக்கையாக வழங்கிய ஐம்பொன் நகையை பூசாரி ஒருவர் கழுத்தில் அணிந்து கொண்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பூசாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு திண்டுக்கல் பகுதியை சேர்ந்த தாமோதரன் என்ற பக்தர் கடந்த மே மாதம் சுமார் ரூ.26 ஆயிரம் மதிப்புள்ள ஐம்பொன் நகையை காணிக்கையாக வழங்கியுள்ளார். அந்த நகையில் சொரிமுத்து அய்யனார் மற்றும் பூரண புஷ்பக்கல் அம்பிகை உருவம் கொண்ட பதக்கம் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. சுவாமிக்கு நகையை அணிவித்திருந்தபோது அதில் லேசான சேதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து நகையை பழுதுநீக்கி சரிசெய்வதற்காக, கோவில் பூசாரியான பிச்சையா அதனை மற்றொரு பூசாரியான செந்திலிடம் ஒப்படைத்துள்ளார்.இந்த நிலையில், கடந்த 12-ந்தேதி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது, பக்தர் காணிக்கையாக வழங்கிய அதே ஐம்பொன் நகையை பூசாரி செந்தில் தனது கழுத்தில் அணிந்தபடி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கியதாக கூறப்படுகிறது.இதனை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். சிறிது நேரத்திலேயே அந்த காட்சிகள் வேகமாக பரவி கவனம் பெற்றன.தான் காணிக்கையாக வழங்கிய நகையை பூசாரி ஒருவர் அணிந்திருப்பதை பார்த்த தாமோதரன் அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதளம் வாயிலாக தனது அதிருப்தியையும் குற்றச்சாட்டையும் பதிவு செய்தார். இந்த தகவல் கோவில் நிர்வாக அலுவலர் இளங்குமரனின் கவனத்துக்கு சென்றதை தொடர்ந்து, சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.விசாரணையில், பக்தர் காணிக்கையாக வழங்கிய ஐம்பொன் நகையை பூசாரி செந்தில் தனது கழுத்தில் அணிந்திருந்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, நெல்லை மண்டல இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினியின் உத்தரவின்பேரில் பூசாரி செந்திலை பணியிடை நீக்கம் செய்து கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், பக்தரிடம் இருந்து பெறப்பட்ட நகை குறித்து கோவில் நிர்வாகத்துக்கு முறையான தகவல் தெரிவிக்காமல், அதில் சேதம் ஏற்பட்டதாக கூறி பழுதுநீக்குவதற்காக மற்றொரு நபரிடம் ஒப்படைத்தது தொடர்பாகவும் தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த விவகாரம் குறித்து பூசாரி பிச்சையாவிடம் உரிய விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், சம்பந்தப்பட்ட ஐம்பொன் நகை தற்போது கோவில் நிர்வாகத்திடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.சம்பவத்தின் பின்னணி மற்றும் நகை கையாளப்பட்ட விதம் குறித்து உதவி ஆணையரும் தக்காருமான சுப்புலட்சுமி, சரக ஆய்வாளர் கோமதி மற்றும் செயல் அலுவலர் இளங்குமரன் ஆகியோர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Seithipunal14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
காணிக்கை நகையால் வந்த வினை...! காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் பூசாரி மீது அதிரடி நடவடிக்கை...!
PulseNews சுருக்கம்

நெல்லை மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில், பக்தர் காணிக்கையாக வழங்கிய ஐம்பொன் நகையை பூசாரி ஒருவர் தனது கழுத்தில் அணிந்து கொண்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தாமோதரன் என்ற பக்தர் இந்த நகையை காணிக்கையாக வழங்கியிருந்தார்.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோவிலில், காணிக்கை நகையைத் தவறாகப் பயன்படுத்திய பூசாரியின் செயல் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பூசாரியை கோவில் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle