யானம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு ரூ. 10 லட்சத்தில் பண அலங்காரம்: தனலட்சுமி அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்
புதுச்சேரி பிராந்தியத்தின் பிரசித்தி பெற்ற ஏனாம் (யானம்) பகுதியில் அமைந்துள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், ஷ்ரவண மாதத்தின் (ஆவணி மாதம்) 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றன. ஆண்டுதோறும் இந்த நன்னாளில் அம்பாளுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களின் பங்களிப்போடு விசேஷ அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் ஆரிய வைசிய சங்கம் மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அம்பாளுக்கு அபூர்வ அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் மற்றும் நிர்வாகத்தின் பங்களிப்பில் பெறப்பட்ட புதிய 500, 100, 50, 20 மற்றும் 10 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு, மொத்தம் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பணத்தால் அழகிய மாலைகள் மற்றும் தோரணங்கள் தொடுக்கப்பட்டன. வண்ணமயமான ரூபாய் நோட்டுகளால் தொடுக்கப்பட்ட மாலைகளைக் கொண்டு வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, ஸ்ரீ தனலட்சுமி அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்குக் காட்சிளித்தார். புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆவணி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ரூ.10 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு சிறப்பு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. #Puducherry pic.twitter.com/WNXbkNzsAL — Indian Express Tamil (@IeTamil) August 28, 2026 இது குறித்து ஏனாம் ஆரிய வைசிய சங்கத்தின் உறுப்பினர் வி. நரேந்திரா கூறுகையில், "வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த சிறப்பு அலங்காரத்திற்காகச் சுமார் ரூ. 10 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன," என்று தெரிவித்தார். ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில பண்பாட்டு பாரம்பரியத்தைப் பின்பற்றி, லட்சுமி தேவியின் அருள் பெற அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும், குறிப்பாக ஆவணி மாத வெள்ளிக்கிழமைகளில் 'வரலட்சுமி விரதம்' கோலாகலமாகக் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமியாக அலங்கரிக்கப்பட்ட அம்பாளைக் காணக் காலை முதலே திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து தரிசனம் செய்து அம்பாளின் அருளைப் பெற்றுச் சென்றனர். செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி.

புதுச்சேரி பிராந்தியத்தின் ஏனாம் பகுதியில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், ஷ்ரவண மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றன. இதையொட்டி, பக்தர்களின் பங்களிப்புடன் ரூ. 10 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளைக் கொண்டு அம்மனுக்குத் தனலட்சுமி அவதாரத்தில் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது.
ஆரிய வைசிய சங்கம் மற்றும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் இந்த அபூர்வ அலங்காரம் சிறப்பாகச் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனைத் தரிசித்து வழிபட்டனர்.