PulseNews
லைஃப் ஸ்டைல்

கடையில் வாங்கிய புதினா தண்டை தூக்கி போடாதீங்க... இப்படி பண்ணி பாருங்க; வீட்டிலேயே புதினா செடி ரெடி

சமையலில் மணமும் சுவையும் சேர்க்கும் புதினா இலைகளை கடையில் வாங்கி பயன்படுத்திய பிறகு, மீதமுள்ள தண்டுகளை பெரும்பாலும் குப்பையில் போட்டு விடுகிறோம். ஆனால், அந்த புதினா தண்டுகளைக் கொண்டே வீட்டில் புதிய புதினா செடியை வளர்க்க முடியும். அதுவும் விதைகள் வாங்கவோ, பெரிய தோட்டம் அமைக்கவோ தேவையில்லை. சிறிய கண்ணாடி பாட்டில், கொஞ்சம் தண்ணீர், பின்னர் மண் நிரப்பிய ஒரு தொட்டி இருந்தாலே போதும். புதினா வேகமாக வளரும் தன்மை கொண்டது என்பதால், சமையலறை ஜன்னல் ஓரம், பால்கனி அல்லது நல்ல வெளிச்சம் கிடைக்கும் வீட்டின் ஒரு பகுதியில் கூட இதை வளர்க்கலாம். கடையில் வாங்கும் புதினாவிலேயே செடி வளர்க்கலாம்! கடையில் வாங்கி வரும் புதினா கட்டிலில் இருந்து புதியதாகவும், பச்சையாகவும் இருக்கும் தடிமனான தண்டுகளைத் தேர்வு செய்ய வேண்டும். மிகவும் வாடிய அல்லது அழுகத் தொடங்கிய தண்டுகளைத் தவிர்ப்பது நல்லது. தண்டின் கீழ்ப்பகுதியில் இருக்கும் இலைகளை மெதுவாக அகற்றி, மேல்பகுதியில் சில இலைகளை மட்டும் விட்டுவைக்கலாம். தண்டில் கணுக்கள் என்று அழைக்கப்படும் சிறிய முடிச்சுப் பகுதிகள் இருக்கும். இங்கிருந்துதான் புதிய வேர்கள் உருவாகும் என்பதால், கணுக்கள் உள்ள தண்டுகளைத் தேர்வு செய்வது முக்கியம். முதலில் தண்ணீரில் வேர் வளர்க்கலாம் தேர்வு செய்த புதினா தண்டுகளை உடனடியாக மண்ணில் நடுவதற்குப் பதிலாக, முதலில் தண்ணீரில் வைத்து வேர் வரவழைக்கலாம். இதற்காக சிறிய கண்ணாடி கிளாஸ் அல்லது வெளிப்படையான பாட்டிலில் சுத்தமான தண்ணீரை நிரப்பி, தண்டின் கீழ்ப்பகுதி மட்டும் தண்ணீரில் மூழ்கும் வகையில் வைக்க வேண்டும். மேலே இருக்கும் இலைகள் தண்ணீருக்குள் மூழ்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த பாட்டிலை நேரடியாக கடுமையான வெயில் படும் இடத்தில் வைக்காமல், வெளிச்சம் கிடைக்கும் இடத்தில் வைக்கலாம். தண்ணீர் நீண்ட நாட்கள் மாற்றாமல் இருந்தால் பாசி பிடிப்பதுடன், தண்டுகளும் அழுகத் தொடங்கலாம். எனவே, தண்ணீரை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது நல்லது. பொதுவாக சில நாட்களில் கணுப் பகுதிகளில் இருந்து சிறிய வெள்ளை வேர்கள் தோன்றத் தொடங்கும். வேர்கள் வந்ததும் மண்ணுக்கு மாற்றுங்கள் வேர்கள் ஓரளவுக்கு வளர்ந்ததும் புதினா தண்டுகளை மண்ணில் நடலாம். மிகவும் சிறிய தொட்டியைத் தேர்வு செய்வதைவிட, அகலமான தொட்டியைத் தேர்வு செய்வது நல்லது. புதினா செடி மேல்நோக்கி மட்டுமல்லாமல் பக்கவாட்டிலும் வேகமாகப் படரும் தன்மை கொண்டது. எனவே, செடி வளர இடவசதி கிடைக்கும் வகையில் அகலமான தொட்டி அல்லது குரோ பேக்கைப் பயன்படுத்தலாம். மண் மிகவும் இறுக்கமாக இல்லாமல், தண்ணீர் தேங்காமல் வெளியேறும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். செம்மண், தேங்காய் நார் கழிவு மற்றும் மண்புழு உரம் போன்றவற்றை சரியான அளவில் கலந்து பயன்படுத்தலாம். வேர்களுடன் கூடிய தண்டுகளை மண்ணில் மெதுவாக நட்டு, சுற்றிலும் மண்ணை லேசாக அழுத்தி, தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். புதினாவுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை? புதினா செடிக்கு ஈரப்பதமான மண் பிடிக்கும் என்றாலும், எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கும் அளவுக்கு நீர் ஊற்றக் கூடாது. அதிகப்படியான நீர் தேங்கினால் வேர்கள் அழுகும் வாய்ப்பு உள்ளது. மண்ணின் மேற்பரப்பு காயத் தொடங்கும்போது தண்ணீர் ஊற்றுவது நல்லது. தொட்டியின் அடிப்பகுதியில் தண்ணீர் வெளியேறுவதற்கான துளைகள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். வீட்டின் வெப்பநிலை, காற்றோட்டம் மற்றும் தொட்டியின் அளவைப் பொறுத்து தண்ணீர் தேவை மாறுபடும். எனவே, குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை என்ற முறையைவிட, மண்ணின் ஈரப்பதத்தைப் பார்த்து தண்ணீர் ஊற்றுவது சிறந்தது. ஜன்னல் ஓரம் வைத்தால் போதுமா? வீட்டிற்குள் புதினா வளர்க்கும்போது வெளிச்சம் கிடைக்கும் இடத்தைத் தேர்வு செய்வது முக்கியம். காலை நேர இளவெயில் கிடைக்கும் சமையலறை ஜன்னல் ஓரம் அல்லது பால்கனி இதற்கு ஏற்ற இடமாக இருக்கலாம். ஆனால், குறிப்பாக வெப்பமான காலங்களில் கடுமையான மதிய வெயிலில் நீண்ட நேரம் வைத்தால் இலைகள் வாடக்கூடும். செடிக்கு போதுமான வெளிச்சம் கிடைக்காதபோது, தண்டுகள் நீண்டு மெலிந்து வளர்வதுடன், இலைகளின் அடர்த்தியும் குறையலாம். எனவே, இயற்கையான வெளிச்சம் கிடைக்கும் இடத்தைத் தேர்வு செய்வது நல்லது. செடி அடர்த்தியாக வளர இந்த ஒரு விஷயத்தை செய்யுங்கள் ! புதினா செடி உயரமாக மட்டும் வளராமல், பக்கவாட்டில் நிறைய கிளைகளுடன் அடர்த்தியாக வளர வேண்டும் என்றால் அதன் நுனிகளை அவ்வப்போது கிள்ளி எடுக்கலாம். இதை ‘பின்ச்சிங்’ என்று அழைக்கிறார்கள். நுனிப் பகுதியை மட்டும் தொடர்ந்து வளர விடாமல் அவ்வப்போது அறுவடை செய்வதால், பக்கவாட்டில் புதிய கிளைகள் உருவாகி செடி அதிகமாகப் படரத் தொடங்கும். மேலும், தேவைக்கு அதிகமாக ஒரே நேரத்தில் செடியை வெட்டிவிடாமல், சிறிது சிறிதாக அறுவடை செய்வது நல்லது. ஆரோக்கியமான இலைகளையும் மென்மையான தண்டுகளையும் சமையலுக்குப் பயன்படுத்தலாம். உரம் போட வேண்டுமா? புதினா வேகமாக வளரும் செடி என்பதால், நல்ல மண் கலவை இருந்தால் ஆரம்பத்தில் அதிக அளவு உரம் தேவைப்படாது. செடி வளர்ச்சி குறைவாக இருப்பது தெரிந்தால், இயற்கை உரங்களை அளவோடு பயன்படுத்தலாம். மண்புழு உரம் போன்ற கரிம உரங்களை அவ்வப்போது சேர்ப்பது மண்ணின் வளத்தை மேம்படுத்த உதவும். அரிசி கழுவிய நீர் அல்லது வீட்டில் தயாரிக்கும் இயற்கை உரக் கரைசல்களை பயன்படுத்துபவர்கள் அவற்றை அளவோடு மட்டுமே பயன்படுத்த வேண்டும். எந்த வகையான கரைசலையும் அடிக்கடி அதிகமாக ஊற்றுவது மண்ணில் தேவையற்ற ஈரப்பதம் அல்லது பூச்சி பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். பூச்சிகள் வந்தால் என்ன செய்வது? வீட்டிற்குள் வளர்க்கப்படும் புதினா செடிகளிலும் சில நேரங்களில் சிறிய பூச்சிகள் தோன்றலாம். இலைகளின் கீழ்ப்பகுதியை அவ்வப்போது கவனித்து பார்ப்பது நல்லது. மஞ்சள் நிறமாகும் இலைகள், கரும்புள்ளிகள், இலைகளில் சிறிய துளைகள் போன்ற மாற்றங்கள் இருந்தால் அவற்றை ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டும். பூச்சிகள் அதிகமாக பாதித்த இலைகளை அகற்றி, செடிக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ளலாம். அதிகப்படியான தண்ணீர், நெருக்கமாக வைக்கப்பட்ட செடிகள் போன்றவையும் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் பராமரிப்பில் கவனம் தேவை. தொடர்ந்து புதிய புதினா கிடைக்க என்ன செய்யலாம்? ஒருமுறை வேரூன்றிய புதினா செடியை சரியாகப் பராமரித்தால் தொடர்ந்து இலைகளை அறுவடை செய்ய முடியும். ஒரே செடியிலிருந்து அதிகமாக இலைகளைப் பறித்துவிடாமல், சில கிளைகள் வளர விட்டுக்கொண்டு படிப்படியாக அறுவடை செய்வது நல்லது. மேலும், புதினா வேகமாகப் பரவும் தன்மை கொண்டதால், தொட்டி முழுவதையும் ஆக்கிரமிக்கத் தொடங்கினால் கிளைகளை வெட்டி பயன்படுத்தலாம். தேவையெனில், அந்த ஆரோக்கியமான கிளைகளில் சிலவற்றை மீண்டும் தண்ணீரில் வைத்து புதிய வேர்களை உருவாக்கி மற்றொரு தொட்டியிலும் வளர்க்கலாம். விதை வாங்காமல் வீட்டிலேயே புதினா! விதைகள் வாங்கி வளர்ப்பதைவிட, கடையில் வாங்கும் புதினா தண்டுகளில் இருந்து செடியை உருவாக்குவது ஆரம்பநிலையிலேயே முயற்சி செய்யக்கூடிய எளிய வழியாகும். சரியான தண்டுகளைத் தேர்வு செய்து, முதலில் தண்ணீரில் வேர்கள் வளர்த்து, பின்னர் மண்ணுக்கு மாற்றி, போதுமான வெளிச்சம் மற்றும் சரியான அளவு தண்ணீர் கொடுத்தால் வீட்டிலேயே பசுமையான புதினா செடியை வளர்க்கலாம். இதன் மூலம் தேவையான நேரத்தில் புதிதாகப் பறித்த புதினா இலைகளை சட்னி, பிரியாணி, புதினா சாதம், ஜூஸ் உள்ளிட்ட பல்வேறு உணவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருமுறை செடி நன்றாக வளர்ந்துவிட்டால், அதிலிருந்து கிடைக்கும் புதிய தண்டுகளைக் கொண்டே மீண்டும் புதிய செடிகளையும் உருவாக்க முடியும்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கடையில் வாங்கிய புதினா தண்டை தூக்கி போடாதீங்க... இப்படி பண்ணி பாருங்க; வீட்டிலேயே புதினா செடி ரெடி
PulseNews சுருக்கம்

சமையலுக்கு வாங்கிப் பயன்படுத்திய புதினா இலைகளுக்குப் பின் மீதமுள்ள தண்டுகளைக் குப்பையில் வீசாமல், அவற்றைக் கொண்டே வீட்டில் புதிய செடிகளை வளர்க்க முடியும். இதற்காக விதைகள் வாங்கவோ அல்லது பெரிய அளவில் தோட்டம் அமைக்கவோ வேண்டிய அவசியமில்லை.

சிறிய கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் ஊற்றி தண்டுகளை வைத்து, பின்னர் அவற்றை மண்ணில் நடுவதன் மூலம் எளிதாகப் புதினா செடியை வளர்க்கலாம். வேகமாக வளரக்கூடிய இந்தச் செடியை, வீட்டின் ஜன்னல் ஓரம் அல்லது பால்கனி போன்ற போதிய வெளிச்சம் கிடைக்கும் இடங்களில் வைத்துப் பராமரிக்கலாம்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle