PulseNews
லைஃப் ஸ்டைல்

ஆடி அமாவாசை தரிசனம்: திருச்செந்தூரில் அலைமோதிய கூட்டம்; கைக்குழந்தைகளுடன் பெண் பக்தர்கள் அவதி

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து, சாமி தரிசனம் செய்தனர். ஆடி அமாவாசையான இன்று அதிகாலையிலிருந்தே சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்தனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள், கடற்கரையில் அந்தணர்கள் மூலமாக எள், தண்ணீர் மற்றும் பிண்டம் வைத்துத் தங்களது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். சிறப்பு நிகழ்வாக கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. காலை 5:30 மணி விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9:00 மணி சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்த போதிலும், அத்தியாவசியத் தேவைகள் சரிவரப் பூர்த்தி செய்யப்படாதது பக்தர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியது. குறிப்பாக, கோவிலைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராமல் வெறும் காற்று மட்டுமே வந்ததாகப் பக்தர்கள் குற்றம் சாட்டினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்த பக்தர்கள், குறிப்பாகக் கைக்குழந்தைகளுடன் வந்தவர்கள் முருகனை தரிசிக்க கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அறநிலையத்துறை சார்பில் கோவில்களில் கைக்குழந்தைகளுடன் வருபவர்களுக்கு சிறப்புத் தரிசனம் செய்ய எளிய வழிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இருப்பினும், அதனைப் பயன்படுத்த முடியாத சூழலே இங்கு நிலவியதாகப் பக்தர்கள் தெரிவித்தனர். அறநிலையத்துறை சார்பில் பாதுகாப்பு மற்றும் பல்வேறு தகவல்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதுபோல, குழந்தைகளுடன் வருபவர்களுக்கான சிறப்புத் தரிசன வழிமுறைகள் குறித்து அவ்வப்போது அறிவிப்பு வெளியிட்டாலோ அல்லது அறிவிப்புப் பலகை அமைத்திருந்தாலோ, தாய்மார்கள் பல மணி நேரம் காத்திருந்து மயக்கமடையும் நிலை தவிர்க்கப்பட்டிருக்கும் எனப் பக்தர்கள் ஆதங்கப்பட்டனர். எனவே, வரும் காலங்களில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் கைக்குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்யத் தேவையான சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்த பக்தர்கள், இத்தகவலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளதாகத் தெரிவித்துச் சென்றனர். செய்தி: க.சண்முகவடிவேல்

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஆடி அமாவாசை தரிசனம்: திருச்செந்தூரில் அலைமோதிய கூட்டம்; கைக்குழந்தைகளுடன் பெண் பக்தர்கள் அவதி
PulseNews சுருக்கம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள், கடலில் புனித நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த கூட்ட நெரிசலில் கைக்குழந்தைகளுடன் வந்த பெண் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கடற்கரையில் அந்தணர்களின் உதவியுடன் பக்தர்கள் எள், தண்ணீர் மற்றும் பிண்டம் வைத்துத் தங்களது முன்னோருக்கு வழிபாடுகளை மேற்கொண்டனர்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle