PulseNews
லைஃப் ஸ்டைல்

உப்பு டப்பா திறந்தா ஈரமா இருக்கா? மழைக்காலத்துல இந்த சிம்பிள் டிப்ஸ் போதும்; இப்படி பிரெச்சனையே வராது

மழைக்காலம் வந்துவிட்டாலே சமையலறையில் ஈரப்பதம் அதிகரிப்பது பலரும் சந்திக்கும் பிரச்சனையாகும். குறிப்பாக தினசரி சமையலில் பயன்படுத்தப்படும் உப்பு, சர்க்கரை போன்ற பொருட்கள் இந்த ஈரப்பதத்தால் எளிதில் பாதிக்கப்படுகின்றன. சில நேரங்களில் உப்பு டப்பாவுக்குள் தண்ணீர் சேர்ந்தது போல ஈரமாகி, ஜாடியில் இருந்து எடுக்கவே சிரமமாக இருக்கும். இன்னும் சில சமயங்களில் உப்பு கட்டியாகி, ஸ்பூனால் எடுக்க முடியாத நிலையும் ஏற்படும். சர்க்கரை பொதுவாக உப்பைப் போல உடனடியாக நீர்த்துப் போகாது என்றாலும், அதிக ஈரப்பதம் இருந்தால் அதன் துகள்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு கட்டியாகவும், பிசுபிசுப்பாகவும் மாறலாம். எனவே, மழைக்காலத்தில் இந்த இரு பொருட்களையும் சரியான முறையில் சேமித்து வைப்பது அவசியம். உப்பு ஏன் ஈரமாகிறது? சமையலுக்கு நாம் பயன்படுத்தும் உப்பு பெரும்பாலும் சோடியம் குளோரைடால் ஆனது. தூய சோடியம் குளோரைடு சாதாரண சூழலில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை அதிக அளவில் உறிஞ்சாது. ஆனால் கடைகளில் கிடைக்கும் சமையல் உப்பில் சிறிய அளவில் பல்வேறு கனிமங்கள் மற்றும் பிற சேர்மங்கள் இருக்கலாம். அவற்றில் சில ஈரப்பதத்தை ஈர்க்கும் தன்மை கொண்டவை. குறிப்பாக மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாகும்போது, இந்த சேர்மங்கள் காற்றில் உள்ள நீராவியை ஈர்க்கத் தொடங்குகின்றன. இதனால் உப்புத் துகள்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு, முதலில் கட்டியாகவும் பின்னர் ஈரமாகவும் மாறக்கூடும். அதனால்தான் மழைக்காலத்தில் உப்பு டப்பாவைத் திறந்தால், வழக்கம்போல உப்பு கொட்டாமல் சிக்கிக்கொள்வதைப் பார்க்க முடிகிறது. சர்க்கரை ஏன் அவ்வளவு சீக்கிரம் நீர்த்துப் போவதில்லை? சர்க்கரையும் ஈரப்பதத்தால் பாதிக்கப்படக்கூடியதே. ஆனால் அது உப்பைப் போல வேகமாக தண்ணீரை உறிஞ்சி நீர்த்துப் போவதில்லை. அதிக ஈரப்பதம் இருக்கும் போது சர்க்கரையின் மேற்பரப்பில் ஈரப்பதம் படிந்து, அதன் துகள்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு கட்டியாக மாறலாம். குறிப்பாக ஈரமான ஸ்பூனை சர்க்கரை டப்பாவுக்குள் பயன்படுத்தினால், அந்த ஈரம் நேரடியாக சர்க்கரைக்குச் சென்று பிசுபிசுப்பை ஏற்படுத்தும். அதேபோல், சர்க்கரை டப்பாவை அடிக்கடி திறந்து வைத்தாலும் காற்றில் உள்ள ஈரப்பதம் உள்ளே சென்று சர்க்கரையின் தன்மையை மாற்றக்கூடும். எனவே, சர்க்கரை உப்பைப் போல பாதிக்கப்படாது என்று நினைத்து அலட்சியமாக வைக்கக்கூடாது. உப்பு, சர்க்கரையை ஈரப்பதம் இல்லாமல் வைக்க என்ன செய்யலாம்? முதலில், உப்பு மற்றும் சர்க்கரையை சேமித்து வைக்கும் டப்பாக்கள் முற்றிலும் சுத்தமாகவும், நன்றாக உலர்ந்ததாகவும் இருக்க வேண்டும். டப்பாவை கழுவிய உடனேயே அதில் உப்பு அல்லது சர்க்கரையை நிரப்பாமல், உள்ளே ஈரத்தன்மை இல்லாததை உறுதி செய்த பிறகே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக மூடியின் உள் பகுதியிலும் ஈரம் இருக்கிறதா என்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டும். உப்பு, சர்க்கரைக்கு காற்று புகாத, நன்றாக மூடக்கூடிய டப்பாக்களைப் பயன்படுத்துவது சிறந்தது. சாதாரணமாக மூடி மட்டும் இருக்கும் டப்பாக்களை விட, இறுக்கமாக மூடப்படும் ஏர்டைட் கண்டெய்னர்கள் வெளிப்புற ஈரப்பதம் உள்ளே செல்வதை குறைக்க உதவும். டப்பாவை ஒவ்வொரு முறையும் பயன்படுத்திய பிறகு உடனடியாக மூடி வைப்பதும் முக்கியம். சமையலறையில் உப்பு, சர்க்கரை டப்பாக்களை சிங்க் அருகில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். பாத்திரம் கழுவும் இடத்தில் எப்போதும் நீர்த்துளிகள் மற்றும் ஈரமான காற்று இருப்பதால், அங்கு வைக்கப்படும் பொருட்களில் ஈரப்பதம் எளிதில் சேரும். அதேபோல், அடுப்பு அல்லது கேஸ் ஸ்டவ் அருகிலும் இவற்றை வைக்க வேண்டாம். சமையல் செய்யும்போது உருவாகும் நீராவி மற்றும் வெப்பநிலை மாற்றங்கள் டப்பாவுக்குள் ஈரப்பதம் சேர்வதற்கு காரணமாக இருக்கலாம். உப்பு மற்றும் சர்க்கரையை எடுக்கும்போது எப்போதும் உலர்ந்த ஸ்பூனை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சமையலுக்கு பயன்படுத்திய ஈரமான ஸ்பூனை நேரடியாக உப்பு அல்லது சர்க்கரை டப்பாவுக்குள் போடுவது ஈரப்பதம் சேருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். எனவே, இதற்காக தனியாக ஒரு உலர்ந்த ஸ்பூனை வைத்துக்கொள்வது நல்ல பழக்கமாகும். மேலும், பெரிய அளவில் உப்பு அல்லது சர்க்கரையை ஒரே டப்பாவில் சேமித்து வைப்பதைவிட, வீட்டில் தேவையான அளவுக்கு மட்டும் சிறிய டப்பாவில் எடுத்துப் பயன்படுத்தலாம். மீதமுள்ள பொருட்களை நன்றாக மூடிய பெரிய ஏர்டைட் கண்டெய்னரில் வைத்தால், டப்பாவை அடிக்கடி திறப்பதால் ஏற்படும் ஈரப்பதத்தைக் குறைக்க முடியும். டப்பாவை நேரடியாக தரையில் வைக்காமல், உயரமான மற்றும் உலர்ந்த அலமாரியில் வைப்பதும் உதவும். சமையலறையில் காற்றோட்டம் இருக்கும் இடத்தைத் தேர்வு செய்து, சிங்க், ஜன்னல் வழியாக மழைத்துளிகள் வரும் பகுதி அல்லது நீராவி அதிகமாக இருக்கும் இடங்களைத் தவிர்ப்பது நல்லது. முக்கியமாக, உப்பு அல்லது சர்க்கரையை சேமிக்கும் டப்பாவில் ஈரமான பொருட்கள், ஈரமான ஸ்பூன் அல்லது தண்ணீர் துளிகள் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருமுறை ஈரம் சேர்ந்துவிட்டால் அதை தொடர்ந்து பயன்படுத்துவது கட்டியாகும் பிரச்சனையை அதிகரிக்கலாம். டப்பாவின் மூடியிலும் ஈரம் படிந்திருந்தால், அதை துடைத்து நன்றாக உலர்த்திய பிறகே மூட வேண்டும். சில வீடுகளில் உப்புக் கட்டிகளைத் தடுக்க அரிசியை சேர்த்து வைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் அரிசியை சேர்ப்பதைவிட, உப்பை காற்று புகாத உலர்ந்த டப்பாவில் வைத்து, ஈரமான ஸ்பூனை பயன்படுத்தாமல் இருப்பதே அடிப்படை மற்றும் பாதுகாப்பான சேமிப்பு முறையாகும். அதேபோல், உணவுப் பொருட்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய டப்பாவில் தேவையற்ற பொருட்களை சேர்ப்பதைத் தவிர்ப்பதும் நல்லது. எனவே, மழைக்காலத்தில் உப்பு, சர்க்கரை ஈரமாகாமல் இருக்க பெரிய முயற்சி எதுவும் தேவையில்லை. உலர்ந்த ஏர்டைட் டப்பா, உலர்ந்த ஸ்பூன், நீராவி மற்றும் சிங்கில் இருந்து தள்ளி வைப்பது, பயன்படுத்தியவுடன் மூடியை இறுக்கமாக மூடுவது போன்ற சின்னச் சின்ன பழக்கங்களே போதும். குறிப்பாக சமையலறையில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் நாட்களில் இந்த முறைகளைப் பின்பற்றினால், உப்பு நீர்த்துப் போவதையும் சர்க்கரை கட்டியாகிப் போவதையும் பெருமளவு குறைத்து, நீண்ட நாட்களுக்கு அவற்றை உலர்ந்த நிலையில் பயன்படுத்தலாம்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
உப்பு டப்பா திறந்தா ஈரமா இருக்கா? மழைக்காலத்துல இந்த சிம்பிள் டிப்ஸ் போதும்; இப்படி பிரெச்சனையே வராது
PulseNews சுருக்கம்

மழைக்காலத்தில் சமையலறையில் ஏற்படும் அதிகப்படியான ஈரப்பதம், உப்பு மற்றும் சர்க்கரை போன்ற பொருட்களை எளிதில் பாதிக்கிறது. இதனால் உப்பு டப்பாவிற்குள் நீர் கோர்த்து ஈரப்பதம் ஏற்படுவதுடன், உப்பை எடுக்க முடியாமல் கட்டியாகிவிடும் சிரமமும் உண்டாகிறது.

இத்தகைய பிரச்சனைகளைத் தவிர்க்க எளிய வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமாகும். இந்த சிறிய குறிப்புகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், மழைக்காலத்திலும் உப்பு மற்றும் சர்க்கரை போன்ற பொருட்களை ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்க முடியும்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle