கனவை நோக்கிய விடாமுயற்சி: கோவையின் முதல் திருநங்கை நடத்துநராக சாதனை படைக்கும் விநோதினி
வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் வந்தாலும், தனது கனவை மட்டும் கைவிடாமல் போராடினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணமாக, கோவையின் முதல் திருநங்கை நடத்துநராக வலம் வரும் விநோதினி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. திருநங்கைகள் என்ற உடனேயே சாலையோரங்களில் யாசகம் கேட்பவர்கள் என்ற நிலையை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், அரசுப் பேருந்தில் நடத்துனராக தனது பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் விநோதினி. பழனியைச் சேர்ந்தவர் விநோதினி. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், அதன்பிறகு தனது பாலின அடையாளத்தை வெளிப்படுத்தி திருநங்கையாக தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தார். பல்வேறு சவால்களையும் சமூகத்தின் புறக்கணிப்புகளையும் எதிர்கொண்ட அவர், சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்தார். கோவையில் சமையல் வேலை, ஓட்டுநர் வேலை உட்பட கிடைத்த பணிகளைச் செய்து தனது வாழ்க்கையை நகர்த்தி வந்த விநோதினியின் மனதில், ஒரு நாள் அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்ற வேண்டும் என்ற கனவு உருவானது. அந்தக் கனவை நனவாக்கும் முயற்சியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடத்துநர் உரிமம் பெற்றார். தொடர்ந்து, தனது விடாமுயற்சிக்குப் பலனாக கடந்த மாதம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநர் பணி கிடைத்தது. தற்போது கோவையில் இயங்கி வரும் ஐந்தாம் எண் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறார். இதன் மூலம் கோவையின் முதல் திருநங்கை நடத்துநர் என்ற பெருமையையும் விநோதினி பெற்றுள்ளார். "எனது வாழ்க்கையில் பல கஷ்டங்களையும் சவால்களையும் சந்தித்துதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதனால் வேலை செய்வதில் எந்த சிரமமும் தெரியவில்லை. பேருந்தில் பயணிக்கும் பலரும் என்னிடம் கனிவாக நடந்து கொள்கின்றனர். என் முயற்சியைப் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிரார்கள் எனத் தகவலாக தெரிவித்தார் வினோதினி. மக்கள் அனைவரும் இவருடன் கனிவாக நடந்து கொள்வதாகவும், ஒரு சிலரைத் தவிர, வளர்ந்து வரும் விநோதினியின் முயற்சியைப் பாராட்டி வருவதாகவும் தெரிவிக்கும் பேருந்து ஓட்டுநர் சுரேஷ், அவருக்கு பணி நிரந்தரம் செய்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுவரை ஆண் நடத்துநர்களை மட்டுமே பார்த்த இந்த நிலையில், திருநங்கை நடத்துநரைப் பார்ப்பது புதுமையாகவும், பூரிப்பாகவும் இருப்பதாகவும், தமிழக அரசு திருநங்கைகளுக்கு இதுபோன்ற பணிகளை வழங்கினால் அவர்கள் சாலையோரங்களில் யாசகம் கேட்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் பயணிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். தற்போது தற்காலிக அடிப்படையில் பணியில் சேர்ந்துள்ள விநோதினி, தனக்கு முதல்வர் விஜய் பணி நிரந்தரம் செய்து கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறார். ஒரு பேருந்தின் பயணத்தை மட்டுமல்ல, தனது வாழ்க்கையின் பயணத்தையும் தன்னம்பிக்கையுடன் வழிநடத்தத் தொடங்கியிருக்கும் விநோதினி, மற்ற திருநங்கைகளுக்கு முன்மாதிரியாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தி: பி. ரஹ்மான் - கோவை மாவட்டம்

பழனியைச் சேர்ந்த வினோதினி, கோவை மாநகரின் முதல் திருநங்கை பேருந்து நடத்துநராகப் பணியாற்றி சாதனை படைத்துள்ளார். திருநங்கைகள் என்றால் பிச்சை எடுப்பவர்கள் என்ற சமூக பிம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற உறுதியான நோக்கத்துடன், அரசுப் பேருந்தில் அவர் தனது பணிப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றிருந்தாலும், விடாமுயற்சியுடன் தனது கனவை நனவாக்கியுள்ளார் வினோதினி. வாழ்க்கையில் எத்தகைய சவால்கள் வந்தாலும் தளராமல் போராடினால் வெற்றி பெறலாம் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்.