கோயில் திருவிழாவில் மக்களுடன் மக்களாக ஆடிய எஸ்.பி.வேலுமணி: மிலாது நபி பேரணி குழந்தைகளுக்கு பழரசங்கள் வழங்கி உற்சாகம்
கோவை மைல்கல், சுகுணாபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் திருக்கல்யாண உற்சவத் திருவிழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு ஊர் பொதுமக்களுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடினார். மேலும், மிலாது நபி ஊர்வலத்தில் பங்கேற்ற அரபிக் பாடசாலை குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் பழரசங்களை வழங்கிச் சிறப்பித்தார். கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குடும்பத்துடன் சாமி தரிசனம்: இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான எஸ்.பி.வேலுமணி, நல்லறம் அறக்கட்டளைத் தலைவரும் சமூக ஆர்வலருமான எஸ்.பி.அன்பரசன், கல்வியாளர் எஸ்.பி.செந்தில்குமார் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்துச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவிழாவின் போது, பூசாரி சக்தி பூ சட்டி ஏந்தி கம்பத்தைச் சுற்றி பக்தி பரவசத்துடன் ஆடிய நிகழ்வை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குடும்பத்தினருடன் கண்டு தரிசித்தார். தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற கொண்டாட்டத்தில், ஊர் பொதுமக்களுடனும் அ.தி.மு.க தொண்டர்களுடனும் இணைந்து எஸ்.பி.வேலுமணி உற்சாகமாக நடனமாடினார். முன்னாள் அமைச்சர் மக்களுடன் ஒருவராகக் கலந்து நடனமாடியது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளான 'மீலாது நபி' திருநாளை முன்னிட்டு, கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் வர்ணக் கொடிகளாலும், வண்ணமயமான மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு கோலாகலமாகத் தயாராகி வருகின்றன. இதன் ஒருபகுதியாக, மைல்கல் சுகுணாபுரம் பகுதியை சேர்ந்த அரபிக் பாடசாலையில் பயிலும் இஸ்லாமியக் குழந்தைகள் நபிகள் நாயகத்தின் போதனைகள் மற்றும் தியாகங்களைப் போற்றும் வகையில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர். ஊர்வலத்தில் பங்கேற்ற குழந்தைகளின் களைப்பைப் போக்கும் வகையிலும், அவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் சுகுணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அனைவருக்கும் குளிர்பானங்கள், பழரசங்கள், பிஸ்கட், குடிநீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் திருக்கல்யாண உற்சவத் திருவிழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டார். அப்போது அவர் ஊர் மக்களுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அதேபோல், மிலாது நபி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அரபிக் பாடசாலை குழந்தைகளுக்கு பழரசங்கள் மற்றும் இனிப்புகளை எஸ்.பி.வேலுமணி வழங்கிச் சிறப்பித்தார். இந்த நிகழ்வுகள் அப்பகுதியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.