கவிஞர் புவியரசு அஞ்சலி! வானம்பாடியின் தலைமகன்! மு.முருகேசன்
"மு க்கூடல்' எனும் கவிதை நூல், கவிஞர் புவியரசு எழுதி, 2004-ஆம் ஆண்டில் தமிழக அரசின் சிறந்த கவிதை நூலுக்கான பரிசினை வென்றது. அந்த நூலில் "ஓ அஜீதா!' எனும் தலைப்பிலான கவிதையொன்றும் இடம்பெற்றிருந்தது. அதைக் கவிதை என்பதைவிடவும் கதைக் கவிதை என்பதே பொருத்தமானது. 32 வரிகளையுடைய அந்தக் கதைக் கவிதை, ஓர் ஆங்கில நாளிதழில் இடம்பெற்ற படத்திற்காக 1969-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. சரி, யாரந்த அஜீதா..? கேரள மாநிலத்தைச் சேர்ந்த அஜீதா, ஒரு பி.எஸ்.சி., பட்டதாரி. கேரளாவிலுள்ள தென்வயநாடு பகுதியைச் சேர்ந்த காடுகளில் ஏமாற்றிக் குடியேற்றம் செய்யப்பட்டும், பொய் வழக்குகள் போடப்பட்டும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான ஆதிவாசி மக்களுக்காகவும், ஏழை விவசாய மக்களுக்காகவும் போராடும் நோக்கில் மாணவப் பருவத்திலேயே தன்னையொரு போராளியாக வரித்துக்கொண்டவர் அஜீதா. நக்சல்பாரி குழுவைச் சேர்ந்த அஜீதா, "மலபார் ஸ்பெஷல் போலீஸ்' முகாமைத் தகர்த்த ஒரே பெண் போராளியாவார். அதனையொட்டி, இரு காவலர் நடுவே அஜீதா நிற்கும் புகைப்படமொன்று ஆங்கில நாளிதழ் "தி ஹிந்து'வின் முதல் பக்கத்தில் இடம்பெற்றிருந்தது. இந்தப் படத்தைக் கண்ட புவியரசு, அது ஏற்படுத்திய தாக்கத்தில், "தாமரை' (சனவரி - 1969) இதழில் "ஓ அஜீதா!' எனும் கவிதையை எழுதினார். அந்தக் கவிதையை எழுதியதற்காகவே தொடர்ந்து கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார் கவிஞர் புவியரசு. "புன-ற்கனலா? பூவில்நெருப்பா? புள்ளிப் பெண்மான் பு-யா? கனவுகள் காணும் கன்னியின் மனதில் கக்கும் எரிமலைக்குழம்பா?' - என்று தொடங்கும் அக்கவிதையை, "காலம் ஒருநாள் வாய்க்கும் சரியாய்க் கொய்வோம் அந்நாள் கனியை. நீலக்குயிலே! அந்நாள் வருவோம், நீயே திலகம்இடுவாய்!' - என்று உழைக்கும் மக்களின் போராட்டங்கள் ஒரு நாள் வென்றே தீரும் எனும் நம்பிக்கைத் திலக மிட்டு, அந்தக் கவிதையை முடித்திருப்பார் புவியரசு. அன்றிலிருந்தே எந்நேரமும் கவிஞரைச் சுற்றி, காவலர்கள் உளவு பார்க்கத் தொடங்கினர். புவியரசுக்கு வரும் கடிதங்கள் எல்லாம் காவலர்களால் பிரித்துப்படிக்கப்பட்டன. அப்போது திருவனந்தபுரத்திலிருந்து எழுத் தாளர் ஒருவர், அந்தக் கவிதையைக் கடுமையாக விமர்சித்து கடிதமொன் றினை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், "ஓ அஜீதா!' என்பதை மட்டும் சிவப்புமையினால் அடிக்கோடிட்டிருந்தார். அதைப் பார்த்த தணிக்கைக் காவலர்கள் உஷாரானார்கள். கவிஞரை விசாரணை எனும் பெயரால் க்யூபிராஞ்ச் அதிகாரிகள், மன நெருக்கடிக்கு ஆளாக்கினர். இச்சூழலில் கவிஞருக்கு ஒன்றிய அரசுப் பணி கிடைத்தது. இந்த விசாரணையின் காரணமாக அப்பணி கிடைக்காமலேயே போனது. தினமும் கவிஞர் வீட்டிற்குக் காவலர் ஒருவர் வருவார். "காவல்நிலைய அதிகாரி வரச்சொன்னார்' என்ற தகவலை மட்டும் சொல்லிவிட்டுப் போவார். கவிஞரும் காவல் நிலையம் செல்வார். ஆனால் காவல் அதிகாரியோ வெளியே சென்றிருப்பார். இப்படியாகப் பல நாட்கள் தொடர்ந்தன. உடல்நலக் குறைவோடு தினமும் அலைந்து திரிந்த கவிஞர் கோபத்தோடு ஒரு அதிகாரியின் வீட்டிற்கே போனார். கவிஞரைப் பார்த்த அதிகாரியோ, "அஜீதாவுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு..?' என்று கேட்டார். கவிஞரோ சற்றும் அசராமல், "அது வெறும் தொடர்பல்ல, உறவு' என்றுசொல்லவே ஆடிப்போனார் அதிகாரி. "ஓர் இளம்பெண்ணுக்கே இவ்வளவு துணிச்சலும், கோபமும் ஏற்பட்டிருக்கவேண்டுமானால் அங்கே எவ்வளவு அக்கிரமங்கள் நடந்திருக்கவேண்டும். அவரது துணிச்சல்தான் என்னை உறவுக்காரன் ஆக்கிவிட்டது. இது மனஉறவு. அவர் செய்த செயல்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. பத்திரிகைச் செய்தி பார்த்துத்தான் கவிதை எழுதினேன்' என்று கவிஞர் உறுதியாகச் சொல்லவே, பதில் பேசாமல் மௌனமானார் அதிகாரி. இதுதான் கவிஞர் புவியரசு. இந்த உறுதியும் கொள்கைப்பிடிப்புமே புவியரசுவின் அடையாள மாகும். எதற்கும் அஞ்சாமல், ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியோடும் நம்பிக்கையோடும் தன் கடைசிமூச்சு காற்றில் கலக்கும்வரை இருந்த பேராளுமையே கவிஞர் புவியரசு. "என் உயிர்த்துடிப்பு கவிதை என்பதால் அதுவே என் உயிர்ஒப்பம்' - என்றெழுதிய கவிஞர் புவியரசுவின் இயற்பெயர் சு.சகன்னாதன். சுப்பையா - தாயம்மாளின் மகனாக உடுமலை வட்டத்திலுள்ள லிங்கவநாயக்கன் புதூரில் 1931-ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று பிறந்தார். சமஸ்கிருத சொல்லாக இருந்ததால், தனது பெயரைப் புவியரசு என்று தமிழாக்கிக்கொண்டார். புவியரசு சிறுவனாக இருந்தபோதே, அவர்களது குடும்பம் கோவைக்குக் குடியேறியது. பள்ளியில் படிக்கும்போதே தேசிய மாணவர் இயக்கத்திலும், தொண்டர் படையிலும் சேர்ந்தார். பிறகு கோவை அரசு கலைக்கல்லூரியில் இண்டர்மீடியட்டும், பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரியில் தமிழ் வித்வான் படிப்பையும், சென்னையிலுள்ள சைதை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும் பயின்றார். காந்தவியல் மருத்துவப் பட்டத்தைப் புதுடில்லியிலுள்ள கல்லூரியொன்றில் பெற்றார். தனது கல்விப்பணியை 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழாசிரியராகச் சுதந்திர உயர்பள்ளி, தியாகி என்.ஜி.ஆர். உயர்பள்ளி, சர்வசன உயர்பள்ளி ஆகியவற்றில் ஆற்றினார். சிறுவனாக இருந்தபோதே கவிதைகளை எழுதத்தொடங்கிய புவியரசுவின் கவிதைகள், 1952-ஆம்ஆண்டில் வெளிவந்தன. பொதுவுடமை கருத்துக்களே கவிஞரது மனதிற்கு நெருக்கமாக இருந்த காரணத்தினால், மார்க்சிய அரசியலை முன்வைத்த கவிதைகளைப் படைப்பதில் ஆர்வம் கொண்டார். சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யின் தமிழரசு இயக்கத்தில் இணைந்து, நகரச்செயலாளராக இருந்து, பல பயிற்சிமொழிக் கருத்தரங்குகளையும், மாநாடுகளையும் நடத்திக் காட்டினார். எழுதுவதொடு ஒரு கவிஞனது வேலை முடிந்துவிட்டது என்பதில் சிறிதும் உடன்பாடு கொள்ளாத புவியரசு, களத்திலும் நின்று பல போராட் டங்களுக்குத் தலைமையேற்றார். தமிழ்ப் பாதுகாப்பு, தமிழக வடக்கெல்லை- தெற்கெல்லை மீட்பு, பயிற்சிமொழி, ஆட்சிமொழிப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு, பலமுறை சிறைவாசத்தை அனுபவித்தார். 1970-களில் கோவையில் தொடங்கப்பட்ட வானம்பாடி கவிதை இயக்கத்தை முன்நின்று வழிநடத்திய தலைமகனாகத் திகழ்ந்தவர் கவிஞர் புவியரசு எனில் மிகையில்லை. "நாங்கள் மானுடம்பாடும் வானம்பாடிகள்' எனும் உரத்த முழக்கத்தோடு கோவையிலிருந்து வெளிவந்த "வானம்பாடி' கவிதை இதழ், முற்போக்கு சிந்தனையும் பகுத்தறிவுப் பார்வையும் கொண்ட கவிஞர்களை ஓரணியில் சேர்த்தது. சிற்பி, கங்கைகொண்டான், சிதம்பரநாதன், தமிழ்நாடன், அப்துல்ரகுமான், ஈரோடுதமிழன்பன், அக்கினிப்புத்திரன், சி.ஆர்.ரவீந்திரன், சக்திக்கனல், மு.மேத்தா, கோவைஞானி, பா.செயப்பிரகாசம், பிரபஞ்சன், பாலா, கோ.இராஜாராம், மீரா என பல நூறு கவிஞர்களின் சங்கமமாக, தமிழின் முதல் கவிதை இயக்கமாக "வானம்பாடி' எழுந்தது. தனது மருமகன் நடத்திய மலர்விழி அச்சகத்தில் "வானம்பாடி' கவிதை இதழை அச்சிட்டு, தனது வீட்டுமுகவரியோடு வெளிக் கொண்டுவந்தார் புவியரசு. "பூமியின் பிரளயங்களாய், காலத்தின் வசந்தங்களாய், யுகத்தின் சுவடுகளாய், நிறங்களில் சிவப்பாய், மண்ணை வலம்வரும் பறவைகளாய், விலையிலாக் கவிமடலாக' வெளிவந்தது "வானம்பாடி.' 1981 வரை 13 இதழ்கள் வெளிவந்தன. "வானம்பாடி' இதழின் வருகைக்கு முதன்மை காரணமாகக் கவிஞர் புவியரசு முன்நின்றார். 1957-ஆம் ஆண்டில் "திருமணப்பரிசு' எனும் இலக்கியக் கட்டுரைகள் அடங்கிய தனது முதல் நூலினை வெளியிட்டார் புவியரசு. பிறகு, 1964-இல் மல்லைத்துறை, ராஜதுறை, மணிகண்டபுரம் மாயாவி எனும் மூன்று நாவல்களை ஒரே ஆண்டில் வெளியிட்டு, சாதனை படைத்தார். கவிஞரது முதல் கவிதை நூல் "புவியரசு கவிதைகள்' 1964-இல்வெளியானது. 1975-இல் "இதுதான்', 1979-இல் "மீறல்' எனப் பல கவிதைநூல்களைத் தொடர்ந்து படைத்தளித்தார். "இரவுகள் நரகங்கள் ஆகிவிடுவதால் பகல்கள் சொர்க்கங்கள் ஆகிவிடுவதில்லை' - என்றெழுதிய கவிஞர் தான், "நான் எப்போதும் ஒளிந்துகொண்டுதான் இருக்கிறேன் எனக்குள் இருக்கும் ஒரு நாளைப் போல' - என்று தனக்குள்ளேயே ஒரு கவிதைத் தேடலையும் நிகழ்த்திக் காட்டினார். கவிஞரெனும் ஒற்றை அடையாளத்திற்குள் சுருங்கி விடுபவரல்ல புவியரசு. எழுத்தாளர், நாடகஆசிரியர், நவீன நாடகப் பயிற்சியாளர், திரைப்படப் பாடலாசிரியர், இணை இயக்குநர், புகைப்படம், சலனப்படம் எடுப்பதில் வல்லவர், எல்லாவற்றிற்கும் மேலாக தமிழின் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட பன்முகத்திறன் களைப் பெற்றிருந்த புவியரசு, தனது வாழ்நாள் முழுவதும் எழுதுவதிலும் மொழிபெயர்ப்பதிலும் தீவிரமாக இயங்கிக்கொண்டேயிருந்தார். 110-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். சப்னா எனும் புத்தக நிறுவனத்தின் பதிப்பாசிரியராக இருந்து, சுமார் 170-க்கும் மேற்பட்ட நூல்களை வெளிக்கொண்டு வந்துள்ளார். மலையாளம் மற்றும் ஆங்கில மொழியிலிருந்தும் மிக முக்கியமான பல உலக இலக்கிய நூல்களைத் தமிழுக்குத் தந்துள்ளார். ஓஷோவின் நூல்களான கிருஷ்ணா (1993), இப்போதே பரவசம் (1994), வாழ்க்கையே திருவிழா (1994), இரண்டாவது கோப்பை தேநீர் (1995), நீ, நீயாகஇரு (1997), அற்புதத்தில் அற்புதம் (2002) என பலவற்றை மொழிபெயர்த்தளித்தார். உலகப் புகழ்பெற்ற கவிஞரான கலீல்ஜிப்ரான் மற்றும் உமர்கய்யாமின் கவிதை நூல்களையும், சேக்ஸ்பியர், ஜேம்ஸ் ஹாட்-சேஸ், எச்.ஜி.வெல்ஸ், பிராம்ஸ்டோக்கர் ஆகியோரின் நூல்களையும் தமிழுக்கு நல்வரவாக்கினார். 1850 பக்கங்களையுடைய, ரஷ்ய எழுத்தாளரான ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் "கரமசோவ் சகோதரர் கள்' நாவலைப் பல்லாண்டுகாலம் உடல்நலனையும் பொருட்படுத்தாமல் கடுமையாக உழைத்து, இரு தொகுதிகளாக 2014-ஆம் ஆண்டில் வெளியிட்டார். "ஆரம்பத்திலிருந்து நான் எழுதிவருவது ஒரே கவிதைதான் துண்டுதுண்டாக' என்று 1988-இல்வெளியான "ஒரு முக்கிய அறிவிப்பு' கவிதை நூலின் முன்னுரையைத் தொடங்கியவர் கவிஞர் புவியரசு. கவிஞரது "கையொப்பம்' கவிதை நூலுக்கு ஒன்றிய அரசு, 2005-ஆம் ஆண்டில் சாகித்திய அகாதெமி விருதினை வழங்கியது. மேற்கு வங்காளத்தின் பெங்காலிமொழிக் கவிஞரான காஸி நஸ்ரூல் இஸ்லாமின் கவிதைகளை 2003-இல் "புரட்சிக்காரன்' எனும் தலைப்பில் மொழிபெயர்க்க, அந்த நூலுக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்தியஅகாதெமி விருதினை 2006-இல் வழங்கியது ஒன்றிய அரசு. வானொலியிலும், தொலைக்காட்சியிலும் கவிஞரது பல நாடகங்கள் ஒலி / ஒளிபரப்பாகியுள்ளன. இலக்கிய உரை, பேட்டி, கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் ஆகியவற்றிற்கு தலைமையேற்றுச் சிறப் பித்துள்ளார். திரைத்துறையிலும் ஆர்வம் கொண்ட கவிஞர் புவியரசு, கருணை இல்லம், பூங்குழலி, பொறாமை, விழிகள் பேசும் மொழிகள், பிரியமுடன் பிரபு ஆகிய படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும், நடிப்புப் பயிற்சியாளராகவும் "பிரியமுடன் பிரபு' படத்தில் பங்களிப்பினை வழங்கியுள்ளார். ரா.பார்த்திபன் நடித்து, இயக்கிய "ஹவுஸ்புல்' திரைப்படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். திரைக்கலைஞர் கமலஹாசனோடு பல்லாண்டுகளாக நட்பில் இருந்த கவிஞர் புவியரசு, "ஹே ராம்' ஸ்கிரிப்ட் புத்தகத் தயாரிப்பிலும், "மருதநாயகம்' கதை உருவாக்கத்திலும் உடனிருந்துள்ளார். 1990 முதல் 1992 வரையிலும் சென்னை யிலுள்ள கேரள அரசு திரைப்பட வளர்ச்சிக் கழகத்தில் தொடர்பு அலுவலராகப் பணியேற்று, 6 தமிழ்ப் படங்களும், பல மலையாளப் படங்களும் கவிஞரது மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டன. கவிஞர் புவியரசுவின் கவிதைகள் மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ரஷ்ய, ஹங்கேரி, சிங்கள மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. தனது முதுமைக் காலத்தில் எழுதுவதைக் குறைத்து, மொழியாக்கம் செய்வதிலும், நல்ல நூல்களைப் பதிப்பிப்பதி லுமே கூடுதலாகக் கவனத்தைச் செலுத்தி வந்த கவிஞர் புவியரசு, எப்போதும் இளைய கவிஞர்களைப் பாராட்டுவதிலும், அவர்களுக்கு ஆலோசனை சொல்வதிலும் ஒரு வழிகாட்டி யாகவே விளங்கினார். சிறிது காலம் உடல் நலிவுற்றி ருந்த கவிஞர் புவியரசு, கடந்த 2026 ஜூன் 30 அன்று தனது 95-ஆவது வயதில் காலமானார். ஆனால், அவரது புகழும், அவர் தமிழுக்குத் தந்திருக்கும் மதிப்புமிகு படைப்புகளும் என்றென்றும் காலத்தால் அழியாத கல்வெட்டுக்களாக நிலைத்திருக்கும். "தன்னை முழுசாய்ச் சாறுபிழிந்து ஒரு கவிதை படைத்த பின் அடுத்த கவிதைக்கு என்ன தேவை வந்தது..?' - என்று கவிதையாலேயே கேள்வி கேட்ட கவிஞர் புவியரசு, தானெழுதிய எல்லாக் கவிதைகளிலுமே தன்னையே சாறாகப் பிழிந்துதந்துள்ளார். அவை சாரம் குறையாமல் காலத்தால் அழியா மல் உயிர்த்திருக்கும்.

வானம்பாடி கவிதை இயக்கத்தின் தலைமகனாகத் திகழ்ந்த கவிஞர் புவியரசு, தனது 95-ஆவது வயதில் 2026 ஜூன் 30 அன்று காலமானார். 1931-ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று பிறந்த இவரது இயற்பெயர் சு.சகன்னாதன். முற்போக்கு சிந்தனை மற்றும் பகுத்தறிவுப் பார்வைகொண்ட கவிஞர்களை ஓரணியில் திரட்டிய 'வானம்பாடி' இதழைத் தொடங்கி, தமிழின் முதல் கவிதை இயக்கத்தை வழிநடத்திய பெருமை இவருக்கு உண்டு. 110-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ள புவியரசு, சாகித்திய அகாதெமி விருதுகள் உட்படப் பல அங்கீகாரங்களைப் பெற்றுள்ளார்.
கவிஞர் புவியரசு, தான் எழுதிய 'ஓ அஜீதா!' என்ற கவிதைக்காகப் பல்வேறு காவல் கண்காணிப்புகளுக்கும் மன நெருக்கடிகளுக்கும் உள்ளானவர். எழுத்துப்பணியுடன் மொழிபெயர்ப்பு, நாடக இயக்கம், திரைத்துறை எனப் பன்முகத்திறன் கொண்டவராகத் திகழ்ந்த இவர், தஸ்தயேவ்ஸ்கியின் 'கரமசாவ் சகோதரர்கள்' உள்ளிட்ட உலக இலக்கியங்களை தமிழுக்குக் கொண்டுவந்ததில் முக்கியப் பங்காற்றியுள்ளார். கொள்கைப் பிடிப்பும் உறுதியும் கொண்ட பேராளுமையாக வாழ்ந்த புவியரசுவின் படைப்புகள், காலத்தால் அழியாத இலக்கியங்களாக என்றும் நிலைத்திருக்கும்.