பர்மாவில் ஆன்மீக உரை நிகழ்த்த சென்ற சுமதி ஸ்ரீ; விஜய் வழங்கிய பதவி பற்றி கருத்து
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் மறுசீரமைக்கப்பட்ட மாநில அளவிலான 7 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 7 பேர் கொண்ட குழு, 2026 ஜூலை 24ஆம் தேதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கான பதவிக்காலத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்து, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு பரம்பரை சாராத அறங்காவலர்களை நியமிப்பதற்கான பெயர்ப் பட்டியலைத் தயாரிக்கும். மயிலம் பொம்மபுரம் ஆதீனத்தைச் சேர்ந்த தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி டாக்டர் கே. ராமநாதன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். குழுவின் ஐந்து உறுப்பினர்களில் ஒருவராக அர்ச்சனா கல்பாத்தி இடம்பெற்றுள்ளார். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.ஆர்.சம்பத், மா.சுமதி என்கிற சுமதிஸ்ரீ, டாக்டர் த.வேல்முருகன் ஆகியோர் மற்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், பதவிவழி உறுப்பினராகவும் செயலாளராகவும் செயல்படுவார். ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வருவாய் ஈட்டும் கோயில்களுக்கு பரம்பரை சாராத அறங்காவலர்களைத் தேர்வு செய்வதே இந்தக் குழுவின் முக்கியப் பணியாகும். முந்தைய குழுவின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த மறுசீரமைக்கப்பட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 2026 ஜூலை 24ஆம் தேதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இக்குழு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள சுமதிஸ்ரீ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தேர்வுக் குழுவின் உறுப்பினராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். இந்த அங்கீகாரத்தை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் என்னை நன்றாகப் படைத்திருக்கிறார்; அவனே என்னை நல்வழியில் நடத்துவான்”. பர்மாவுக்கு ஆன்மிகச் சொற்பொழிவுக்காகச் சென்றிருந்ததால், பலரின் தொலைபேசி அழைப்புகளை என்னால் ஏற்க முடியவில்லை. எனது வளர்ச்சியில் அக்கறை கொண்டு தொடர்ந்து ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நாம் அனைவரும் நன்றாக இருப்போம் என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் இந்த குழுவில் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள அர்ச்சனா கல்பாத்தி பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆவார். ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் அவர், முதல்வர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் (2019) மற்றும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) (2024) ஆகிய திரைப்படங்களை தனது ஏ.ஜி.எஸ் எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு, பரம்பரை சாராத அறங்காவலர்களைத் தேர்வு செய்வதற்காக 7 பேர் கொண்ட புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் தலைவராக தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் மற்றும் துணைத் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி கே. ராமநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அர்ச்சனா கல்பாத்தி, பி.ஆர்.சம்பத், மா.சுமதி, த.வேல்முருகன் ஆகியோருடன் அறநிலையத் துறை ஆணையர் செயலாளராகவும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நியமனம் குறித்து தனது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள மா.சுமதி, தான் பர்மாவில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றியபோது அழைப்புகளை ஏற்க இயலாத சூழல் இருந்ததை விளக்கி, தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பிற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல், இக்குழுவில் இடம்பெற்றுள்ள அர்ச்சனா கல்பாத்தி, விஜய் நடிப்பில் வெளியான பிகில் மற்றும் கோட் படங்களைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. 2026 ஜூலை 24 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இக்குழு செயல்படும்.