PulseNews
லைஃப் ஸ்டைல்

விதிகளை மீறி கலப்படம், 2 முக்கிய நிறுவனங்களின் பெருங்காய விற்பனைக்கு தடை: உணவு பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை

பெருங்காயத்தில் நிர்ணயித்த அளவை விட குறைவான சத்து இருந்தது கண்டறியப்பட்டதை தொடர்ந்து பிரபல நிறுவனங்கள் பெருங்காயம் விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணைய ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த பெருங்காயத்தில் ஆல்கஹால் கரையக்கூடிய சாறு 0 முதல் 3% மட்டுமே இருந்தது. ஆனால் குறைந்தது 5% இருக்க வேண்டும் என்பது விதிமுறை என்று தெரிவித்துள்ளது. எவரெஸ்ட் ஃபுட் புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எல்.ஜி கோதூ அண்ட் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் பெருங்காயத் தூளை விற்பனை செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தடை விதித்துள்ளது. இது தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், எவரெஸ்ட் ஃபுட் புராடக்ட்ஸ் மற்றும் எல்.ஜி கோதூ அண்ட் கம்பெனி ஆகிய நிறுவனங்களின் பெருங்காய தயாரிப்புகள் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றின் விற்பனைக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எவரெஸ்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, கலவைப் பெருங்காயத் தூள் (Compounded Asafoetida/Hing Powder) வகைகளின் விற்பனைக்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதன்மை உணவு ஆய்வகத்தின் உணவு ஆய்வாளர் மேற்கொண்ட பரிசோதனையில், கலவைப் பெருங்காயத் தூள் மாதிரிகள் தவறாகப் பெயரிடப்பட்டவை மற்றும் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டன. இந்தப் பொருட்களில் ஆல்கஹாலில் கரையக்கூடிய சாறு (Alcohol-Soluble Extract) உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிமுறைகள், 2011-ன் படி, இது குறைந்தபட்சம் 5 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால் இதில் 0 சதவீதமாக இருந்தது. அதேபோல், மஞ்சள் நிற ஹிங் பவுடர் (கலவைப் பெருங்காயம்) மற்றும் கருப்பு நிற ஹிங் பவுடர் (கலவைப் பெருங்காயம்) ஆகியவற்றின் மாதிரிகளும் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டன. இவற்றில் ஆல்கஹால் கரையும் சாறு முறையே 3.29 சதவீதம் மற்றும் 4.4 சதவீதம் மட்டுமே இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. தரமற்ற கலவைப் பெருங்காயத்தை தொடர்ந்து விற்பனை செய்து வரும் நடைமுறையைச் சரிசெய்வதற்கான செயல் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு எவரெஸ்ட் நிறுவனத்திடம் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், 2006ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற தரநிலைகளுக்கு ஏற்ப பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. நிறுவனம் தனது தவறுகளைச் சரிசெய்யத் தவறினால், மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது. எல்.ஜி கோதூ அண்ட் கம்பெனியைப் பொறுத்தவரை, அந்நிறுவனம் தயாரித்து விற்பனை செய்த பெருங்காயத் தூள் தரமற்றதாகவும், கலப்படம் செய்யப்பட்டதாகவும் கண்டறியப்பட்டதால், அதன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஃபாசி (FSSAI) தெரிவித்துள்ளது. கலவைப் பெருங்காயம் (தூள் மற்றும் கட்டி வடிவம்) ஆகியவற்றின் மாதிரிகள் தரமற்றவையாகவும், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிமுறைகள், 2011-ல் நிர்ணயிக்கப்பட்ட தேவைகளுக்கு தரத்தில் இல்லாதவை என கண்டறியப்பட்டன. மேலும், கலவைப் பெருங்காய மாதிரிகள் தவறாகப் பெயரிடப்பட்டவை மற்றும் தரமற்றவை என்பதும் தெரியவந்தது. கலவைப் பெருங்காயம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப் பெருங்காயத்தின் பல்வேறு வகைகளின் மாதிரிகளும் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டன. அதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான மாவுச்சத்து (Starch) இருப்பது கண்டறியப்பட்டது. பெருங்காயத்தில் மாவுச்சத்தின் அளவு எடையில் 1 சதவீதத்தைத் தாண்டக்கூடாது என்பது விதிமுறையாகும். எனவே, விதிமுறைகளை மீறி தரமற்ற பொருட்களை விற்பனை செய்யும் நடைமுறையைச் சரிசெய்வதற்கான செயல் திட்டத்தைச் சமர்ப்பிக்குமாறு லால்ஜி கோதூ நிறுவனத்துக்கும் ஃபாசி உத்தரவிட்டுள்ளது. மேலும், 2006ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின்படி, தரமான பொருட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அந்த நிறுவனம் தனது செயல் திட்டத்தில் குறிப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
விதிகளை மீறி கலப்படம், 2 முக்கிய நிறுவனங்களின் பெருங்காய விற்பனைக்கு தடை: உணவு பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை
PulseNews சுருக்கம்

நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விட பெருங்காயத்தில் சத்துக்கள் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டதையடுத்து, இரண்டு முக்கிய நிறுவனங்களின் பெருங்காய விற்பனைக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த பெருங்காயத்தில் ஆல்கஹால் கரையக்கூடிய சாறு 0 முதல் 3 சதவீதம் மட்டுமே இருந்த நிலையில், விதிமுறைப்படி இது குறைந்தபட்சம் 5 சதவீதம் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, எவரெஸ்ட் ஃபுட் புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எல்.ஜி கோதூ அண்ட் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் தங்கள் பெருங்காயத் தூளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக இந்த நடவடிக்கையை ஆணையம் எடுத்துள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle