திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் புதிய கற்காலக் கருவி, சோழர் காலக் காசு கண்டெடுப்பு: மீண்டும் அகழ்வாராய்ச்சி செய்ய கோரிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றின் நடுவே அமைந்திருக்கும் கபிலர் குன்றை சுற்றியுள்ள பகுதிகளில், தென்பெண்ணை நதிக்கரை நாகரிக ஆய்வு குழுவினர் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு, தென்பெண்ணை நதிக்கரை நாகரிக ஆய்வு குழுவின் தலைவர் சிங்கார உதியன் தலைமையில், ஆய்வாளர் இம்மானுவேல், நூலகர் மு.அன்பழகன், பத்திரிக்கையாளர் சத்தியமூர்த்தி மற்றும் நதியோசை இளையராஜா ஆகியோர் அடங்கிய குழுவினரால் நடத்தப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள்: 18 செ.மீ நீளமும், 41⁄2 செ.மீ அகலமும் கொண்ட ஈட்டி போன்ற அமைப்பிலான கல்லாயுதம். இது புதிய கற்காலக் கருவியாகும். சங்க காலத்தைச் சேர்ந்த நீல நிறக் கண்ணாடி மணி. 16 மி.மீ விட்டமும், 3.56 கிராம் எடையும் கொண்ட கி.பி. 985 முதல் 1014 வரையிலான முதலாம் ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்து நாணயம் (செப்புக்காசு). நாணயத்தின் சிறப்பம்சங்கள்: தொல்லியல் துறை உதவி இயக்குனர் பொ. கோ.லோகநாதன் நேரில் வருகை தந்து ஆய்வு செய்ததில், இந்தச் செப்பு நாணயத்தின் முன்பக்கத்தில் மலரைக் கையில் ஏந்தியவாறு ஒருவர் நிற்க, இடது புறத்தில் நான்கு வட்டங்கள், பிறை மற்றும் மலரும், வலது புறத்தில் திரிசூலமும் விளக்கும் பொறிக்கப்பட்டுள்ளன. நாணயத்தின் பின்பக்கத்தில் கையில் சங்கு ஏந்தி அமர்ந்திருப்பவரின் இடது கை அருகே தேவநாகரி எழுத்தில் "ஸ்ரீராஜராஜ" என மூன்று வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் புதிய கற்கால கல்லாயுதம், சங்க கால கண்ணாடி மணி மற்றும் முதலாம் ராஜராஜ சோழனின் செப்பு நாணயம் ஆகிய பழங்கால தொல்பொருட்களை நதிக்கரை நாகரிக ஆய்வு குழுவினர் இன்று மேற்பரப்பு கள ஆய்வில் கண்டெடுத்தனர். #Kallakurichi pic.twitter.com/HqGydtYium — Indian Express Tamil (@IeTamil) August 15, 2026 தென்பெண்ணை ஆறு தோன்றுமிடம் முதல் அது கடலில் கலக்கும் கடலூர் வரை கடந்த 15 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வரும் இக்குழுவினர், இப்பகுதியில் தொடர்ந்து பல்வேறு வரலாற்றுத் தடயங்களைக் கண்டெடுத்து வருகின்றனர். இதனால் திருக்கோவிலூர் பகுதியில் மீண்டும் ஒருமுறை தொல்லியல் துறையினரால் முழுமையான அகழ்வாராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆய்வுக்குழுத் தலைவர் சிங்கார உதியன் கோரிக்கை விடுத்துள்ளார். இக்கள ஆய்வின் போது பா.கார்த்திகேயன், சு.சங்கர் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் உள்ள கபிலர் குன்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் தென்பெண்ணை நதிக்கரை நாகரிக ஆய்வு குழுவினர் மேற்பரப்பு ஆய்வுகளை மேற்கொண்டனர். சிங்கார உதியன் தலைமையிலான இக்குழுவில் இம்மானுவேல், மு.அன்பழகன், சத்தியமூர்த்தி மற்றும் இளையராஜா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த ஆய்வின்போது புதிய கற்காலத்தைச் சேர்ந்த ஒரு கருவி மற்றும் சோழர் காலத்தைச் சேர்ந்த நாணயம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பகுதியில் மீண்டும் முறையான அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.