தினமும் டிராவல் பண்றீங்களா? முதுகுவலி வராம இருக்க இந்த 6 விஷயங்களை மட்டும் செய்யாதீங்க
நம்மில் பலரும் தினமும் வேலை, கல்லூரி, தொழில் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக நீண்ட நேரம் பயணம் செய்து வருகிறோம். குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் தினசரி பல மணி நேரம் பைக், கார், பேருந்து அல்லது ரயிலில் பயணம் செய்வது வழக்கமாகிவிட்டது. ஆனால், பயணத்தின்போது நாம் கவனிக்காமல் செய்யும் சில பழக்கங்கள், நாளடைவில் முதுகு மற்றும் கழுத்து வலிக்கு காரணமாகலாம். குறிப்பாக நீண்ட நேரம் ஒரே நிலையில் இருப்பது, தவறான முறையில் உட்காருவது, அதிக எடையைச் சுமப்பது போன்றவை முதுகுத்தண்டில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, பயணத்தின்போது தவிர்க்க வேண்டிய சில முக்கியமான பழக்கங்கள் குறித்து தெரிந்துகொள்வது அவசியம். அதிக எடை கொண்ட பேக்குகளை நீண்ட நேரம் தூக்குவது: பயணத்தின்போது லேப்டாப், புத்தகங்கள், உடைகள் உள்ளிட்ட பல பொருட்களை ஒரே பேக்கில் வைத்து நீண்ட நேரம் சுமப்பது முதுகுத்தண்டுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக பேக்கை ஒரு தோளில் மட்டும் மாட்டிக்கொண்டு நீண்ட நேரம் நடப்பது, உடலின் சமநிலையை மாற்றி கழுத்து, தோள் மற்றும் முதுகுப் பகுதியில் தசை வலியை ஏற்படுத்தக்கூடும். எனவே, தேவையற்ற பொருட்களைத் தவிர்த்து, எடையை இரு தோள்களிலும் சமமாகப் பகிரும் பேக்குகளைப் பயன்படுத்துவது நல்லது. நீண்ட தூரம் பைக் அல்லது ஸ்கூட்டரில் பயணம் செய்வது: தொடர்ந்து பல மணி நேரம் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வதும் முதுகுத்தண்டுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம். வாகனத்தை சமநிலைப்படுத்துவது, திடீரென பிரேக் பிடிப்பது, வேகத்தடைகள் மற்றும் பள்ளங்களில் ஏறி இறங்குவது போன்றவற்றால் உடலுக்கு அதிர்வு ஏற்படும். இதனால் குறிப்பாக கழுத்து மற்றும் கீழ் முதுகுப் பகுதியில் அழுத்தம் அதிகரிக்கலாம். நீண்ட பயணம் என்றால் அவ்வப்போது வாகனத்தை நிறுத்தி சிறிது நேரம் ஓய்வெடுத்து, உடலை நீட்டி ஆசுவாசப்படுத்துவது உதவியாக இருக்கும். பஸ்ஸின் கடைசி சீட்டில் நீண்ட நேரம் பயணம் செய்வது: பஸ்ஸின் பின்புற சீட்களில் சாலை அதிர்வுகள் மற்றும் குலுக்கல்கள் அதிகமாக உணரப்படலாம். குறிப்பாக மோசமான சாலைகளில் பயணிக்கும்போது, இந்த அதிர்வுகள் தொடர்ந்து உடலுக்குப் பரவுவதால் கீழ் முதுகில் அசௌகரியம் ஏற்படலாம். ஏற்கனவே முதுகுவலி இருப்பவர்கள் நீண்ட நேரம் இத்தகைய சீட்களில் பயணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. முடிந்தவரை சௌகரியமான, நல்ல முதுகு ஆதரவு கொண்ட சீட்டைத் தேர்வு செய்யலாம். காரில் தவறான பொசிஷனில் உட்காருவது: நீண்ட தூர கார் பயணத்தின்போது சீட்டில் சாய்ந்து உட்காருவது, முன்னோக்கி குனிந்து உட்காருவது அல்லது முதுகுக்கு போதிய ஆதரவு இல்லாமல் இருப்பது போன்றவை கழுத்து மற்றும் முதுகுத் தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். காரின் சீட் உயரம் மற்றும் சாய்வு சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து, முதுகு சீட்டில் நன்றாகப் படும்படி உட்காருவது முக்கியம். நீண்ட பயணங்களில் அவ்வப்போது வாகனத்தை நிறுத்தி சில நிமிடங்கள் நடப்பதும் உடலை நீட்டுவதும் உதவும். தொடர்ந்து போனை குனிந்து பார்ப்பது: பயண நேரத்தை கடத்துவதற்காக பலரும் தொடர்ந்து போனைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், தலையைக் குனிந்த நிலையில் நீண்ட நேரம் போனைப் பார்ப்பதால் கழுத்துத் தசைகளில் அழுத்தம் அதிகரிக்கலாம். இதனால் கழுத்து வலி, தோள்பட்டை இறுக்கம் மற்றும் தலைவலி போன்ற அசௌகரியங்கள் ஏற்படலாம். எனவே, போனை கண் உயரத்திற்கு அருகில் வைத்து பயன்படுத்துவதுடன், தொடர்ந்து பார்ப்பதைத் தவிர்த்து இடையிடையே ஓய்வு கொடுப்பது நல்லது. கூட்ட நெரிசலான நேரத்தில் நீண்ட நேரம் ரயிலில் நிற்பது: பீக் ஹவர்ஸில் ரயிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். அப்போது நீண்ட நேரம் நின்றுகொண்டு பயணம் செய்வது மட்டுமின்றி, ரயில் திடீரென வேகமெடுப்பது அல்லது பிரேக் போடும்போது உடலை சமநிலைப்படுத்துவதும் சிரமமாக இருக்கும். இதனால் முதுகு, கால்கள் மற்றும் தோள்களில் சோர்வு ஏற்படலாம். முடிந்தவரை கூட்டம் குறைவான நேரத்தில் பயணம் செய்வது அல்லது பாதுகாப்பான இடத்தில் அமர்ந்து பயணம் செய்வது உடலுக்கு சிரமத்தை குறைக்க உதவும். நீண்ட நேரம் ஒரே நிலையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்: எந்த வாகனத்தில் பயணம் செய்தாலும், பல மணி நேரம் ஒரே நிலையில் உட்கார்ந்திருப்பது உடலில் தசை இறுக்கத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக நீண்ட தூரப் பயணங்களில் இடைவெளி கிடைக்கும் போதெல்லாம் எழுந்து நடப்பது, கால்களை நீட்டுவது மற்றும் உடல் நிலையை மாற்றுவது நல்லது. முதுகுத்தண்டை பாதுகாக்க சரியான பழக்கங்கள் அவசியம்: பயணத்தை முழுமையாகத் தவிர்க்க முடியாவிட்டாலும், நாம் பயணிக்கும் முறையில் சில சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்படும் தேவையற்ற அழுத்தத்தை குறைக்க முடியும். சரியான உட்காரும் நிலை, தேவையற்ற எடையைத் தவிர்ப்பது, இடையிடையே ஓய்வு எடுப்பது மற்றும் நீண்ட நேரம் போனை குனிந்து பார்க்காமல் இருப்பது போன்ற பழக்கங்கள் பயணத்தை சௌகரியமாக மாற்ற உதவும். தொடர்ந்து முதுகு அல்லது கழுத்து வலி, உணர்வின்மை அல்லது கை, கால்களில் பலவீனம் போன்ற அறிகுறிகள் இருந்தால், மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெறுவது அவசியம்.

வேலை, கல்வி மற்றும் இதர காரணங்களுக்காக சென்னை போன்ற பெருநகரங்களில் தினமும் நீண்ட நேரம் பயணம் செய்வது பலருக்கும் வழக்கமாகிவிட்டது. பைக், கார், பேருந்து அல்லது ரயில்களில் மேற்கொள்ளப்படும் இத்தகைய பயணங்களின் போது நாம் கவனிக்காமல் செய்யும் சில பழக்கவழக்கங்கள் பிற்காலத்தில் கழுத்து மற்றும் முதுகு வலிக்கு வழிவகுக்கின்றன.
தொடர்ந்து நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருப்பது, தவறான முறையில் அமரும் பழக்கம் மற்றும் அதிக எடையைச் சுமப்பது போன்றவை முதுகுத்தண்டின் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய பாதிப்புகளைத் தவிர்க்க, பயணத்தின் போது பின்பற்ற வேண்டிய 6 முக்கிய விஷயங்களை மேற்கொள்வது அவசியமாகும்.