மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு: பிரெயில் பெட்டகம் முதல் ஏஐ கருவிகள் வரை... அரசு வழங்கும் புதிய சலுகைகள்!

மயிலாடுதுறை: மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களை எதிர்பார்த்து வாழாமல், தற்சார்புடன் தங்களது அன்றாடப் பணிகளை இயல்பு நிலைக்கு நிகராகச் சுதந்திரமாகச் செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டமைப்பு உதவிகளைச் செய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் வழக்கமான 27 வகையான உதவி உபகரணங்களுடன், தற்காலத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கூடுதலாக 30 அதிநவீன உதவி உபகரணங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

இந்த நவீன சாதனங்கள் மாற்றுத்திறனாளிகளின் அன்றாட வாழ்வை எளிதாக்குவதுடன், அவர்களது கல்வி, பணி மற்றும் விளையாட்டுத் துறையிலான சாதனைகளுக்கும் பெரும் உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்கத்திறன் குறைபாடுடையோருக்கான நவீன சாதனங்கள்

கை மற்றும் கால் இயக்கத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்குப் பயன் தரும் வகையில், மாடிப்படிகளில் சிரமமின்றி ஏறி இறங்குவதற்கான கைகளால் இயங்கும் நாற்காலிகள், மின்கலனால் இயங்கும் நவீன நாற்காலிகள் மற்றும் கைகளாலும் மின்கலனாலும் இணைத்து இயக்கும் பல்நோக்குச் சக்கர நாற்காலிகள் ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளன.

மேலும், இலகுரகச் சக்கர நாற்காலிகள், முழங்கால் மூட்டு விடுவிப்புடன் கூடிய சிறப்பு எலும்பியல் சாதனங்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு மர நாற்காலிகள், தானியங்கி முறையில் செயல்படும் மூட்டு கட்டுப்பாட்டுச் செயற்கை உறுப்புகள் மற்றும் எளிதாக மடக்கி எடுத்துச் செல்லக்கூடிய நடைபயிற்சி சாதனங்கள் ஆகியவையும் இதில் அடங்கும்.

விளையாட்டு மற்றும் அன்றாட பயன்பாட்டு உபகரணங்கள்

இதுமட்டுமன்றி, மூன்று மற்றும் நான்கு கால்கள் பொருத்தப்பட்ட உறுதியான ஊன்றுகோல்கள், இயக்கத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய அதிநவீன நடைபயிற்சி உபகரணம், சாய்வு வசதியுள்ள பயணச் சக்கர நாற்காலிகள், குழந்தைகளுக்கான சிறிய ரகச் சக்கர நாற்காலிகள், நேராக நிற்கும் வசதி கொண்ட சக்கர நாற்காலிகள், பலவகை செயல்பாடுகளைத் துல்லியமாக மேற்கொள்ளும் தானியங்கிச் செயற்கை கைகள் மற்றும் தலையில் அணிந்துகொண்டு கணினியை இயக்கும் சிறப்புச் சுட்டி ஆகிய நவீனக் கருவிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

விளையாட்டுத் துறையில் சாதனை படைக்க விரும்பும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட சிறப்புச் சக்கர நாற்காலிகள், நவீனச் செயற்கை உறுப்புகள், கெயிட் நடைபயிற்சிக் கருவிகள், தேவைக்கேற்ப உயரத்தை மாற்றி அமைக்கும் ஊன்றுகோல்கள் மற்றும் கைகளில் பயன்படுத்தக்கூடிய நவீன உதவி சாதனங்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

பார்வை, செவித்திறன் மற்றும் அறிவுசார் குறைபாடுகளுக்கான கருவிகள்

பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை வெளிச்சமாக்கும் வகையில், அவர்கள் சுதந்திரமாக நடமாட உதவும் வழிகாட்டி ஊன்றுகோல்கள், பேசும் திறன் கொண்ட அறிவியல் கணிப்பான்கள், சாதாரணப் புத்தகங்களில் உள்ள எழுத்துக்களை உடனடியாக ஒலியாக மாற்றிக் காட்டும் அதிநவீன கருவிகள், புதுப்பிக்கத்தக்க பிரெய்லி காட்சி சாதனங்கள் மற்றும் பிரெய்லி பெட்டகங்கள் ஆகியவை வழங்கப்படவுள்ளன. அதேபோல், கடுமையான செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்குத் தெளிவான ஒலியை வழங்கும் ‘ஹை - ரெஸ் சூப்பர் பவர்’ எண்ணியல் காதொலிக் கருவிகளும், அறிவுசார் குறைபாடுடையவர்களுக்குப் பயன்படும் சிறப்புத் தகவமைப்பு ஆடைகள் மற்றும் பல்வேறு உணர்வுக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் சிறப்பு உபகரணங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பயனடைய மாவட்ட ஆட்சியர் அழைப்பு

இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, மேற்கண்ட அதிநவீன உதவி உபகரணங்கள் தேவைப்படும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் உடனடியாக விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வேண்டுகோள் விடுத்துள்ளார். விருப்பமும் தகுதியும் உள்ள பயனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அல்லது தனித்துவ அடையாள அட்டை (UDID) மற்றும் அதிகாரப்பூர்வ அடையாளச் சான்றுகள் உள்ளிட்ட உரிய ஆவணங்களின் நகல்களுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரில் அணுகி மனுக்களைச் சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் தற்சார்புடன் தங்கள் அன்றாடப் பணிகளைச் சுதந்திரமாக மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டமைப்பு உதவிகளை வழங்கி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஏற்கனவே வழங்கி வரும் 27 வகையான உதவி உபகரணங்களுடன், தற்காலத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கூடுதலாக 30 அதிநவீன உபகரணங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் பிரெயில் பெட்டகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் உள்ளிட்டவை அடங்கும்.