பட்டுக்கோட்டை அருகே வேப்பங்குளத்தில் செப்.1-ல் உலக தென்னை தின விழா!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், உலக தென்னை தினவிழா–2026 மற்றும் வர்ஜின் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள், கொள்முதலாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் கலந்துரையாடல் கூட்டம் செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெறுகிறது.

வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கோயம்புத்தூர் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககம் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சி, காலை 10 மணிக்கு தொடங்குகிறது. தென்னை விவசாயிகளின் உற்பத்தியை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதற்கான வாய்ப்புகள், வர்ஜின் தேங்காய் எண்ணெய் உற்பத்தி மற்றும் அதன் சந்தை வாய்ப்புகள் குறித்து இதில் விரிவாக எடுத்துரைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் முனைவர் கை.குமணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் செயல் துணைவேந்தர் முனைவர் மு.ரவீந்திரன் தலைமை வகித்து பேச உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) இரா.சுதா மற்றும் கிழக்கு கடற்கரை தென்னை விவசாயிகள் சங்கத் தலைவர் இ.வீ.காந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

மேலும், ஈச்சங்கோட்டை டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி முதல்வர் முனைவர் கு.இரா.ஜெகன்மோகன், கோயம்புத்தூர் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கக இயக்குநர் முனைவர் ஆ.சோமசுந்தரம், தோட்டக்கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் க.வெங்கடேசன் மற்றும் FRIGOSCAN Post Harvest Technologies நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் இரா.சங்கரன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

கருத்தரங்கின் முக்கிய அம்சமாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வர்ஜின் தேங்காய் எண்ணெய் தயாரிப்பு தொழில்நுட்பம், தரக்கட்டுப்பாடு, மதிப்புக்கூட்டுதல், சந்தைப்படுத்துதல் மற்றும் தொழில்முனைவுக்கான வாய்ப்புகள் குறித்து விரிவான தொழில்நுட்ப உரைகளை வழங்க உள்ளனர்.

தென்னை விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய்க்கு கூடுதல் மதிப்பு கிடைக்கும் வகையில், தேங்காய் எண்ணெய் மட்டுமின்றி பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கான வாய்ப்புகளும் தற்போது அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் வர்ஜின் தேங்காய் எண்ணெய் உற்பத்தியை தொழிலாக மேற்கொள்ள விரும்பும் புதிய தொழில்முனைவோருக்கும் இக்கூட்டம் பயனுள்ளதாக அமையும்.

மதிய உணவுக்குப் பின்னர் பிற்பகல் 2 மணிக்கு, வர்ஜின் தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கான பிரத்யேக தொழில்முனைவு மையத்தை பங்கேற்பாளர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் உற்பத்தி செயல்முறை மற்றும் தொழில்நுட்ப நடைமுறைகளை நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

எனவே, தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த தென்னை விவசாயிகள், புதிய தொழில்முனைவோர், கொள்முதலாளர்கள் மற்றும் வணிகப் பங்குதாரர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள், வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அலுவலக நேரங்களில் 04373-260205 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தங்களது வருகையை முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது அன்றாட வாழ்க்கையில் தென்னையின் பயன்பாடு இல்லாமல் இருக்காது. தென்னையில் இருந்து பெறப்படும் தேங்காய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை நமது உணவில் தினந்தோறும் பயன்படுத்துகிறோம். இதுதவிர இளநீரை இயற்கையின் குளிர்பானமாக குடித்து வருகிறோம்.

தென்னை மரத்தில் இருந்து நமக்கு இயற்கை பானமாக பதநீர், நீரா போன்றவையும் கிடைக்கிறது. இவற்றின் மூலம் கருப்பட்டி, வெல்லம் போன்ற பொருட்களும் நமக்கு கிடைக்கின்றன. தென்னை ஓலை நம் வீட்டின் நிழல் பந்தல் அமைப்பதற்கு பயன்படுகிறது.

இது தவிர தென்னை நாரில் இருந்து மெத்தை, காயர் பித் (தென்னை நார் கட்டி) உள்பட பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. இப்படி பல்வேறு விதங்களில் மனிதர்களின் வாழ்க்கையோடு ஒட்டி உறவாடுகின்றன தென்னை மரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி உலக தென்னை தின விழா நடைபெறவுள்ளது. இதனுடன் வர்ஜின் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள், கொள்முதல் செய்பவர்கள் மற்றும் பங்குதாரர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கோயம்புத்தூர் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககம் இணைந்து நடத்தும் இந்த நிகழ்வு காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.