நூற்றாண்டு நாயகர் "பத்மஸ்ரீ' பாலசந்தர்! இது கே.பி.யின் கலைப்பயணம்! -புஷ்பா கந்தசுவாமி (12)
(12) ஒரு இயக்குநராக அப்பாவின் முதல் அனுபவம்! அ ப்பாவை பொருத்தவரையில் கதைதான் ஹீரோ. கதைக்காகத்தான் ஹீரோ, என்பதில் முதல் படத்திலிருந்தே தெளிவாக இருந்தார். "நீர்க்குமிழி காலத்திலிருந்தே ஹீரோ என்றால் அழகாக இருக்க வேண்டும், டூயட் பாட வேண்டும், சண்டை போட வேண்டும் என்ற மரபுகளை எல்லாம் உடைத்துவிட்டேன். கதைக்கு ஒரு பிரதான பாத்திரம் வேண்டும். அது நாகேஷோ, சுஜாதாவோ யாராகவும் இருக்கலாம் என்பது என் பாலிசி'' என்பது அப்பாவின் நேர்காணல் பதிவு. "சர்வர் சுந்தரம் படமாகும்பொழுது அப்பா கதை வசனகர்த்தா மட்டும்தான். படப்பிடிப்பில் கேமரா வழியாக கோணங்கள் பார்க்க இயக்குனருக் கும், ஒளிப்பதிவாளருக்கும் மட்டும்தான் "ரைட்ஸ்' மற்றவர்கள் பார்க்க அனுமதியில்லை. அப்படி யாரேனும் பார்த்தால் 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அப்படி ஒரு எழுதப்படாத விதி இருந்ததாக அப்பா சொல்லியிருக்கிறார். ஆனால் மற்ற எல்லா அம்சங்களையும் கூர்ந்து கவனிக்கத் தவறியதில்லை. அதேபோல "தெய்வத்தாய்' படத்தின்போது பாடல் உருவாக்கும் கோணத் தை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. இவர் கதை வசனகர்த்தா என்ப தால் இசையமைப்பின் முதல் அனுபவத்தை அங்கு நேரடியாக கண்டறிந்தார். எம்.எஸ்.வி. இசைக்க, கவிஞர் வாலி பாடல்கள் எழுத, ஒரு ஓரமாக அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பார். ஆர்.எம்.வீ. பாடல்களுக்கான மெட்டு தேர்வு செய்தார். எது வெற்றி பெறும் என்று தேர்வு செய்வதில் அவர் வல்லவர். நல்ல இசைஞானம் அவருக்கு கை கொடுத்தது. ஒரு படத்திற்கான பாடல்களைத் தேர்வு செய்யும் கலையை அங்குதான் அப்பா கற்றுக்கொண்டார். தனது திரையுலக பிரவேசம் "அது ஒரு எதிர்பாராத விபத்து' என்று அப்பா குறிப்பிடுவார். அப்பாவின் நாடகங்கள் நல்ல வரவேற்பு பெறுவதைப் பார்த்து சபாக்காரர்கள், ஆரம்பத்தில் 250 ரூபாய் தந்தவர்கள், "இனி ஒரு நாடகத்திற்கு 2000 ரூபாய் தருகிறேன்' என்று அப்பாவை உற்சாகப்படுத்தினார்கள். அன்றைக்கு அது ஒரு பெரிய தொகைதான். ஒருபக்கம் அப்பாவின் நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு, இன்னொரு பக்கம் "தெய்வத்தாய்' படத்திற்கு அவர் வசனம் எழுதியதும், அவர் திரைக்கதை, வசனம் எழுதிய "சர்வர் சுந்தரம்' நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. அந்தத் தருணத்தில் அருணாசலம் ஸ்டுடியோ அதிபர் ஏ.கே.வேலன் அப்பாவை சந்திக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். ஒரு படம் எடுக்க வேண்டும் என்று கூறினார். அப் போது நாடகத்திற்காக தயார் செய்துகொண்டிருந்த "நீர்க்குமிழி' கதையை அவரிடம் சொன்னார் அப்பா. அது அப்பாவின் ஐந்தாவது வெற்றிகர மான நாடகம். நாகேஷுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டது. "நீர்க்குமிழி' நாடக அரங்கேற்றம் அன்றே பரபரப்பாக பேசப்பட்டது. ஏ.கே.வேலன் ஐயா நாடகத்தைப் பார்த்தார். "நாடகம் நன்றாக இருக்கிறது, இதை அப்படியே சினிமாவாக எடுக்கலாம் என்று பார்க்கிறேன்'' என்றார். நாகேஷ்தான் ஹீரோ, நீங்கள்தான் டைரக்டர் என்று அடுத்து ஒரு இன்ப அதிர்ச்சி தந்தார். அப்பாவுக்கு முதலில் சந்தோஷமும், அடுத்த வினாடி சினிமா பற்றி நமக்கு என்ன தெரியும் என்ற பயமும் வெளிப்பட்டது. "நான் டைரக்ட் செய்வதா? எனக்கு ஒன்றுமே தெரியாது சார்'' என்று கூறினார். "நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் தண்ணீரில் இறங்கினால்தானே முடியும். ஒரு தமிழ் வாத்தியாரான நானே ஒரு படம் டைரக்ஷன் பண்ணி அது பெரிய வெற்றி பெற்று, அதில் சம்பாதித்த பணத்தில்தான் இந்த அருணாசலம் ஸ்டுடியோவை வாங்கினேன். நீங்க "நீர்க்குமிழி' கதையைக் கூறும்போதே எனக்கு படம் பார்ப்பதை போன்ற உணர்வு ஏற்பட்டு விட்டது. உங்களால் டைரக்ட் செய்ய முடியும் என்று உறுதியாக நினைக்கிறேன்'' என்றார். அவர் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை பார்த்து அப்பாவுக்கு ஆச்சரியம். ஒருவாரம் அவகாசம் கேட்டு வந்தார். "அப்பாவின் நாடகக் குழுவினர், "அருமை யான வாய்ப்பு அதை விட்டு விடாதே. ஏற்றுக் கொள்' என்றார்கள். ஏ.கே.வேலன் அவர்களை சந்தித்து அப்பா சம்மதம் சொல்ல, அவருக்கு பெரும் சந்தோஷம். வெற்றிபெற்ற ஒரு நாடகம் திரைப்படமாக உருவானது. நடிகர், நடிகைகள் தேர்வு பற்றிய பேச்சு எழும்போது "உங்கள் நாடகத் தில் நடித்தவர்களையே போட்டுக் கொள்ளுங்கள்' என்று தயாரிப்பாளர் சொல்லிவிட்டார். திரையுலகில் நிறைய சென்டிமெண்ட் எனப் படும் நம்பிக்கைகள் இருக்கின்றன. மூடநம்பிக்கை என்று ஒதுக்கிவிட முடியாது. முதல் போடுபவர் கள், உழைப்பவர்கள் என்று பலதரப்பட்டவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தே திரையுலகம் இயங்குகிறது. அப்படிப் பணம் தரும் பைனான் சியர்கள் "நீர்க்குமிழி' என்ற தலைப்பு எதிர்மறையாக இருக்கிறது, நிலையாமையை குறிக்கிறது. தலைப்பு சரியாக இல்லை என்று கருத்து தெரிவித்தார்கள். அப்பாவுக்கு அதில் உடன்பாடில்லை. வெற்றிகரமாக மேடையேறிய நாடகம்தானே, நல்லபடியாக அமையும் என்ற சிந்தனையுடன் தயாரிப்பாளர் ஏ.கே.வேலனுடன் மட்டும் ஆலோசித்தார். அவர் ஆட்சேபனை எதுவும் கூறவில்லை. ஆகவே "நீர்க்குமிழி' தலைப்பே வைக்கப்பட்டது. அதேபோல அப்பாவின் "ரயில் சினேகம்' முற்றுப்பெறாத நட்பை குறிக்கும் சொல் அது. அப்போதும் சென்டிமெண்ட் பார்க்காமல் தலைப்பு வைத்தார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தொலைக்காட்சி ஊடகத்தில் முத்திரை பதித்த வண்ணம் உழைத்தார். எதற்காக இங்கே இதைக் குறிப்பிட வேண்டிய கட்டா யம் என்றால், படைப்புத் தொழிலில் பல கலைஞர் களின் பங்களிப்பு இருக் கும். ஒரு தொழிலில் நம் முடிவுகளை எந்த குழப்பமும் பயமும் இல்லாமல் எடுக்க வேண்டும். நம்முடைய தெளிவு தான் முக்கியம். அதேசமயம் யாரு டைய மனதையும் புண்படுத்தாமல் கலையைப் படைத் துக்கொண்டேயிருக்க வேண்டும். நாடகத்தில் நடித்த சுந்தரராஜன், சௌகார் ஜானகி, கோபி, நாகேஷ் நடிக்க, ஒரு செட்டுக்குள் படத்தை முடித்தார். "நீர்க்குமிழி' படத்தின் கதையே புதுமையானது. தொடக்கத்தில் அப்பாவின் கனமான குரலில் "இது ஏழாவது வார்டின் கதை' என்று படம் துவங்கும். டாக்டர் சுந்தர்ராஜன் வார்டுக்குள் நுழையும் ஒரு காட்சி. அதில் அப்பா டாக்டரையே காட்டவில்லை. மாறாக கேமராவையே டாக்டராக இயங்கச் செய்தார். கேமரா வரும் வழியில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தின் ரீ-ஆக்ஷனை காட்டினார். ஒருவர் சல்யூட் அடிப்பார், ஒருவர் அவசர அவசரமாக தான் பிடித்துக் கொண்டிருக்கும் பீடியை அணைப்பார். இப்படி டாக்டரை காட்டாமலே அந்த பாத்திரத்தின் மீது மரியாதை ஏற்படும் வகையில் அந்த ஷாட்டை அமைத்திருந்தார் அப்பா. "சார் நான் பள்ளிக்கூடத்துல படிச்சிட்டு இருந்தப்போ "நீர்க்குமிழி' படம் பார்த்தேன். அந்த வித்தியாசமான ஷாட்டை பார்த்து அசந்துட்டேன் இந்த படத்தோட டைரக்டர் எதிர்காலத்துல பெரிய ஆளாக வருவார் என்று நானும், என் நண்பர்களும் பேசிக்கிட்டோம்'' என்று ஒரு தடவை பாரதிராஜா, அப்பாவிடம் சொன்னார். அதேபோல அப்பாவின் ஒரு பாடல் கம்போசிங் நடக்கும்போது, "சார் "நீர்க்குமிழி' படத்துல டாக்டர் வர்ற அந்த ஷாட் இன்னும் என் கண்ணிலேயே நிக்குது'' என்று பாராட்டினார் இசைஞானி இளையராஜா. அந்தப் படத்தின் ஒரு ஷாட்டே இந்த அளவுக்கு பாராட் டப்பட்டது என்றால் படத்தின் மற்ற புதுமை களை ரசிகர்கள் எப்படி ரசித்திருப்பார்கள் என்பதை நீங்கள் உணர லாம். "நீர்க்குமிழி' படம் வெளிவந்ததும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. தெரிந்த, தெரியாத பலரிடமிருந்தும் பாராட் டுக் கடிதங்கள் வந்தவண்ண மிருந்தன. அதில் மறக்க முடியாத ஒரு கடிதம் சினிமா உலக ஜாம்பவான் ஏவி.எம். எழுதிய "உங்கள் முதல் படத்திலேயே நீங்கள் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த டைரக்டர்கள் வரிசையில் இடம் பெற்றுவிட்டீர்கள். தொடர்ந்து செய்யுங்கள்'' என்ற பாராட்டுக் கடிதம். அப்பா அந்தக் கடிதத்தை பொக்கிஷம் போல பாதுகாத்து வைத்திருக்கிறார். "நீர்க்குமிழி'யின் வெற்றி அப்பாவை திரும்பிப் பார்க்க வைத்தது. எம்.ஜி.ஆர். படத்தை இயக்க அப்பா மறுத்தது ஏன்..? (சொல்கிறேன்) -எழுத்தாக்கம் "கலைமாமணி' சபீதா ஜோசப்

பத்மஸ்ரீ பாலசந்தரின் கலைப்பயணத்தை அவரது மகள் புஷ்பா கந்தசுவாமி நினைவு கூர்ந்துள்ளார். கதையே ஒரு படத்தின் நாயகன் என்பதில் பாலசந்தர் உறுதியாக இருந்தார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அழகான நாயகர்கள், டூயட் பாடல்கள் மற்றும் சண்டைக் காட்சிகள் கொண்ட வழக்கமான திரைக்கதை மரபுகளை தனது முதல் படமான நீர்க்குமிழியிலேயே அவர் உடைத்தார். கதைக்குத் தேவையான பிரதான பாத்திரமே அந்தப் படத்தின் நாயகன் என்பது அவரது கொள்கையாக இருந்தது.