உள்ளாட்சித் தேர்தலில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை களமிறக்க தனுஷ் திட்டமா?சீக்ரெட்டாக செய்யப்படும் உதவி!
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது அடுத்தகட்டமாக உள்ளாட்சித் தேர்தலில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை களமிறக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் தவெகவை தொடங்கி குறுகிய காலத்திலேயே ஆட்சியைப் பிடித்து முதலமைச்சரானுள்ள நிலையில், திரையுலகைச் சேர்ந்த மேலும் சிலரும் அரசியல் களத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் தனுஷின் அரசியல் நகர்வுகளும் தற்போது கவனம் பெற்றுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தனுஷ் ரசிகர் மன்றத்தின் செயல்பாடுகள் பெரும்பாலும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது நற்பணி நடவடிக்கைகளிலும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. தனுஷ் ரசிகர் மன்றத்திற்கான கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவரது பிறந்தநாளையொட்டி நீண்ட நாட்களுக்கு பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டதாகவும், ஆட்டோ வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், திருவண்ணாமலையில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது இரண்டு பெண்களின் கல்விச் செலவை ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியானது. அதேபோல், படப்பிடிப்புகளுக்கு இடையிலும் தனுஷ் தொடர்ந்து ரசிகர்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக ராயன் படத்திற்குப் பிறகு மாவட்ட வாரியாக ரசிகர்களை சந்திப்பதில் அவர் ஆர்வம் காட்டியதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக ரசிகர் மன்ற உறுப்பினர்களை அதிகரிக்கவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலை தனுஷின் அரசியல் பயணத்திற்கான முதல் களமாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவரது நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, தனுஷ் ரசிகர் மன்றத்தில் உள்ள அரசியல் ஆர்வம் கொண்ட நிர்வாகிகள் தாமாக முன்வந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது தனுஷின் புகைப்படம் மற்றும் ரசிகர் மன்றக் கொடியை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தனுஷ் தரப்பில் தேவையான பொருளாதார உதவிகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்காக ரசிகர் மன்ற நிர்வாகிகள் நற்பணி நடவடிக்கைகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனுஷின் இந்த நகர்வு அவரது அரசியல் வருகைக்கான முக்கியமான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில், உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானதாக இருக்கும் என்பதால், தனுஷின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் களமிறங்கினால் அது தவெகவுக்கும் சவாலாக அமையுமா என்ற விவாதமும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. எனினும், தனுஷ் நேரடியாக அரசியல் கட்சி தொடங்குவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. தற்போதைய தகவல்கள் அனைத்தும் அவரது ரசிகர் மன்றத்தின் அரசியல் செயல்பாடுகள் தொடர்பான பேச்சுகளாகவே உள்ளன.

நடிகர் தனுஷ் அரசியலில் ஈடுபடுவதற்கான முன்னேற்பாடுகளில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடுத்தகட்டமாக, நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைப் போட்டியிட வைக்க அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியான தவெக மூலம் அரசியலில் கவனம் ஈர்த்துள்ள நிலையில், தனுஷின் இந்த அரசியல் நகர்வுகளும் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளன. தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் மறைமுகமாக அரசியல் பணிகளை மேற்கொள்ள அவர் தீவிரம் காட்டி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.