'கருப்பு' படத்தில் எனது காட்சிகளை நீக்கியது ஏன்? என்னை டம்மியாக்கிட்டாங்க - படக்குழு மீது மன்சூர் அலிகான் பாய்ச்சல்
தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான வில்லன் மற்றும் குணச்சித்திர நடிப்பால் முத்திரை பதித்த மூத்த நடிகர் மன்சூர் அலிகான், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த மே மாதம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'கருப்பு' திரைப்படத்தின் குழுவினர் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கடந்த ஆக.14-ம் தேதி சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்ற தர்ஷன் ஜெயபிரகாஷ் மற்றும் பிக்பாஸ் ஜனனி ஆகியோர் நடித்துள்ள ஆல் பாஸ் படத்தின் டிரெய்லர், இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மன்சூர் அலிகான் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், 'கருப்பு' படத்தில் தான் நடித்த முக்கியக் காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து ஆவேசமாகப் பேசினார். விழாவில் மன்சூர் பேசுகையில், நான் கஷ்டப்பட்டு நடித்த காட்சிகள் 'கருப்பு' படத்தில் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. 'நாங்க நாலு பேரு' என்ற பாடலில் நாங்க மிகவும் சிரமப்பட்டு நடனமாடினோம். ஆனால், நேரமின்மை காரணமாக அந்தக் காட்சிகள் நீக்கப்பட்டதாகக் கூறினார்கள். மேலும், அவற்றை யூடியூப் தளத்தில் வெளியிடுவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இதுவரை வெளியிடவில்லை. இதுபற்றிக் கேட்டால் மிகவும் பொறுப்பில்லாமல் பதில் கூறுகிறார். 'கருப்பு' திரைப்படத்தில் இருந்து என்னுடைய காட்சிகளை எதற்காக நீக்கினீர்கள்? படத்தைப் பார்த்த என் பிள்ளைகள் இதுபற்றி என்னிடம் கேள்வி கேட்கிறார்கள்; அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நான் தவித்து வருகிறேன். நான்தான் உண்மையான கருப்பன். உங்களுக்கு நிஜமாகவே தைரியம் இருந்தால், நீங்க வெட்டி எறிந்த அந்தக் காட்சிகளை இப்போது பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடுங்கள், பார்க்கலாம். தனது திரைப்பயண அனுபவத்தை சுட்டிக்காட்டி பேசிய அவர், இன்றைக்குப் படத்தில் இருக்கும் பல முக்கியப் புள்ளிகள் அரைக்கால் டிராயர் போட்டுக் கொண்டு சுற்றிய காலத்திலேயே நான் சினிமா தயாரிப்பாளராக மாறியவன். இதுவரை 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துத் திரையுலகில் எனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ளேன். அப்படிப்பட்ட நீண்ட அனுபவம் கொண்ட என்னையே ஒரு காட்சியில் வெறுமனே டம்மியாக நிற்க வைத்து வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். எனக்கே இந்த நிலைமையா? என்று ஆதங்கப்பட்டார். மேலும், தற்போதைய திரைத்துறை நிலவரம் குறித்து விமர்சித்த அவர், இன்றைக்குத் திரையில் தோன்றும் பல ஹீரோக்கள் வெறும் பில்டப் மூலமாக மட்டுமே தங்களது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். நான் யாரிடமும் பிச்சை எடுக்கவில்லை; முழுக்க முழுக்க என்னுடைய சொந்த உழைப்பால் உயர்ந்தவன் என்று மிகக் காட்டமாகத் தெரிவித்தார்.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான 'கருப்பு' திரைப்படத்தில், தனது காட்சிகள் நீக்கப்பட்டதைக் குறித்து மூத்த நடிகர் மன்சூர் அலிகான் படக்குழுவினர் மீது அதிருப்தி தெரிவித்துள்ளார். தரம் குறைந்த முறையில் தன்னை ஒதுக்கிவிட்டதாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்ற 'ஆல் பாஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டபோது, மன்சூர் அலிகான் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். தர்ஷன் ஜெயபிரகாஷ் மற்றும் பிக்பாஸ் ஜனனி நடித்திருக்கும் அந்த படத்தின் விழாவில் அவர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.