விஜய் பாணியை திருமாவளவன் காப்பி அடிக்கிறாரா? – விசிக இசையமுதனின் அதிரடி பதில்
தமிழக அரசியலில் சினிமா கவர்ச்சியோடு அண்மையில் புதிய கட்சியைத் தொடங்கிப் பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளார் நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். விசிகவின் தற்போதைய அரசியல் நகர்வுகளும் மாநாட்டு உத்திகளும் விஜய் பாணியைப் பின்பற்றியே அமைக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். விசிக மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த நீண்ட ‘ராம்ப்’ நடைமேடை, தொண்டர்களை நோக்கித் துண்டை தூக்கிப் போடும் செயல்கள் யாவும் விஜய்யின் மாநாட்டு உத்திகளைப் பிரதிபலிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. ஒரு கொள்கைத் தலைவர் ஏன் சினிமா கவர்ச்சிப் பாணியைப் பின்பற்ற வேண்டும் என்ற கேள்விக்கு விசிக நிர்வாகி விளக்கமளித்துள்ளார்.இதுகுறித்து விசிக கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநிலச் செயலாளர் இசையமுதன் நக்கீரன் டிவிக்கு கொடுத்த பிரத்யேக நேர்காணலில் இதுகுறித்து கூறுகையில், “விஜய் அவர்கள் இப்போதுதான் புதிதாகக் கட்சி ஆரம்பித்துத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் பெரிய அளவில் வளர்ந்து வருவதை நாங்கள் வரவேற்கிறோம், அதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், விசிக விஜய் அவர்களின் பாணியைப் பார்த்து காப்பி அடிக்கிறது என்று சொல்வது முற்றிலும் அபாண்டமானது. நாங்கள் ஏற்கனவே பூத் கமிட்டி மற்றும் பாக முகவர்களுக்காக ஒரு பிரம்மாண்ட மாநாட்டை நடத்தினோம். அந்த மாநாட்டிலேயே எங்களின் தலைவர் தொண்டர்கள் நடுவே நீண்ட தூரம் நடந்து வர வேண்டும் என்பதற்காகத்தான் ‘ராம்ப்’ போன்ற நடைமேடை அமைக்கப்பட்டிருந்தது. உண்மையில் எங்களின் தலைவர் திருமாவளவன் தனக்கு இந்த ஆடம்பர ஏற்பாடுகள் எதுவும் வேண்டாம் என்றுதான் மறுத்தார். மு.க.ஸ்டாலின் திருச்சியில் மாநாடு நடத்தியபோதுகூட இதுபோன்ற நீண்ட நடைமேடை அமைக்கப்பட்டிருந்தது. தலைவர் வேண்டாம் என்று சொல்லியும், தொண்டர்களின் வேண்டுகோளுக்காகவே அது முகவர்கள் மாநாட்டில் அமைக்கப்பட்டது. எனவே, விஜய்க்கு முன்னாடியே நாங்கள் அந்த ராம்ப் அமைப்பை மாநாட்டில் பயன்படுத்திவிட்டோம். இதனால் நாங்கள் யாரையும் பார்த்து காப்பி அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, எங்களைப் பார்த்துதான் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல இயக்கங்களும் பல அரசியல் கட்சிகளும் காப்பி அடித்துக்கொண்டிருக்கின்றன. எங்களைப் பார்த்துதான் பிரம்மாண்டமாக மாநாடு போடுவதற்கே அவர்கள் கத்துக்கொண்டார்கள். அது அதிமுகவாக இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த இயக்கமாக இருந்தாலும் சரி, மாநாடு என்றாலே அது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான். கொள்கை ரீதியாகத் தொண்டர்களை வழிநடத்தும் கட்சி விசிக. சினிமா கூட்டத்தைப் போலத் தொண்டர்கள் முட்டி மோதுகிறார்கள் என்று தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. தலைவரின் மீதுள்ள சித்தாந்தப் பற்றின் காரணமாகவே எங்களின் தொண்டர்கள் அப்படித் திரள்கிறார்கள். நாங்கள் யாரையும் பார்த்து அரசியல் செய்யவில்லை” என்று தெரிவித்தார்.

தமிழக அரசியலில் நடிகர் விஜய் தனது மாநாட்டின் மூலம் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அதே பாணியைப் பின்பற்றுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விசிக மாநாட்டில் அமைக்கப்பட்ட நீண்ட நடைமேடை மற்றும் தொண்டர்களை நோக்கித் துண்டை வீசும் செயல் போன்றவை விஜய்யின் உத்திகளைப் போன்றே இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த விமர்சனங்களுக்கு விசிகவின் இசையமுதன் பதிலடி கொடுத்துள்ளார். அரசியல் ரீதியாக விசிகவின் நகர்வுகள் மற்றும் மாநாட்டு உத்திகள் விஜய் பாணியைப் பின்பற்றி அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.