வேட்டைக்காரன் படத்தில் அந்த பாட்டு, இப்போ நினைத்தால் அவசியம் இல்லனு தோணுது; ஜேசன் சஞ்சய் ஒபன் டாக்
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறி, தற்போது தமிழக முதலமைச்சராக உள்ள விஜய் சினிமாவில் இருந்து விலகியுள்ள நிலையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய், சுந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜேசன் சஞ்சய் படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: சமீபத்தில் தெலுங்கு தொகுப்பாளர் சுமா தனது யூடியூப் சேனலுக்காக நடத்திய நேர்காணலில் ஜேசன் சஞ்சய் கலந்து கொண்டார். அப்போது தனது பெற்றோருடனான உறவு குறித்தும், தனது விருப்பங்களைத் தேர்ந்தெடுப்பதில் தந்தை விஜய் அளித்த சுதந்திரம் குறித்தும் அவர் மனம் திறந்து பேசினார். தனது தந்தை விஜய் அளித்த ஆதரவு குறித்து ஜேசன் கூறுகையில், “சிறு வயதில் இருந்தே நான் படப்பிடிப்பு தளங்களுக்கு சென்று வந்திருக்கிறேன். அதனால், படப்பிடிப்பு தளங்களில் இருப்பது எனக்கு இயல்பான ஒன்றாகிவிட்டது. என்னுடைய நண்பர்கள் பலர் சினிமாவை ரசிகர்களின் கோணத்தில் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே பார்த்தார்கள். ஆனால், நான் சிறு வயதில் இருந்தே சினிமா துறையுடன் தொடர்பில் இருந்தேன். பல ஆண்டுகளாக என் தந்தை அந்தத் தொழிலில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதனால், எனக்கும் சிறு வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்தது. ஒரு கட்டத்தில் நான் வெளிநாட்டுக்குச் சென்று சுயமாக இருந்து, திரைப்படத் தயாரிப்பு தொடர்பான படிப்பை படிக்க விரும்புவதாக அவரிடம் கூறினேன். அவர் எந்தத் தயக்கமும் காட்டவில்லை. எனக்கு முதலில் பச்சைக்கொடி காட்டியவர் அவர்தான். இத்துறையில் அவர் நீண்ட காலமாக இருப்பதால், அதன் முக்கியத்துவத்தை என் அம்மா மற்றும் சகோதரியைவிட அவர் நன்றாகப் புரிந்துகொண்டார். மேலும், இப்போது சினிமா மற்றும் திரைப்படத் தயாரிப்பு தொடர்பாக ஏராளமான படிப்புகள் இருப்பதை அறிந்தும் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். மேலும், “நீ அந்தப் படிப்பைச் சென்று படி. அப்போதுதான் உனக்கு எது பிடிக்கும், எது உனக்குச் சரியாக இருக்கிறது, இந்தத் தொழில் உனக்குப் பிடிக்கிறதா என்பதையெல்லாம் புரிந்துகொள்ள முடியும். அதன் மூலம் உன்னைப் பற்றிய புரிதலும் உனக்கு கிடைக்கும் என்று அவர் கூறினார். அந்த விஷயத்தில் அவர் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார்” என்றார். ‘வேட்டைக்காரன்’ படத்தில் நடித்தது குறித்து ஜேசன் சஞ்சய் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குநராக அறிமுகமாக இருந்தாலும், அவர் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். 2009ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘வேட்டைக்காரன்’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். எனினும், தற்போது வளர்ந்த பிறகு அந்தப் படத்தில் தான் இடம்பெற்றதன் அவசியம் என்ன என்று தனக்குத் தானே கேள்வி எழுப்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அப்போது எனக்கு 8 அல்லது 9 வயது இருக்கும் என்று நினைக்கிறேன். ராஜமுந்திரியில் படப்பிடிப்பு நடைபெற்றது. என் தந்தை என்னிடம் வந்து, ஒரு யோசனை இருப்பதாகவும், அதில் நான் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். நானும் சரி என்று சொன்னேன். படப்பிடிப்பு தளங்களுக்கு ஏற்கனவே பழக்கப்பட்டிருந்ததும், படக்குழுவினருடன் இயல்பாகப் பழகியிருந்ததுமே எனக்கு அந்தப் படத்தில் நடிப்பதற்கான நம்பிக்கையை அளித்தது. எனக்கு அது மிகவும் இயல்பான விஷயமாகவே இருந்தது. ஆனால், இப்போது நான் வளர்ந்துவிட்ட நிலையில், அந்தப் படத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, ‘அந்தப் படத்தில் நான் இடம்பெற வேண்டிய அவசியம் என்ன இருந்தது?’ என்று நினைக்கிறேன். அந்தக் கதைக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்றார். அம்மா சங்கீதா குறித்து ஜேசன் தனது தாயார் சங்கீதா குறித்தும் ஜேசன் சஞ்சய் பேசினார். விஜய்க்கு எதிராக தொடர்ந்திருந்த விவாகரத்து வழக்கை சங்கீதா தற்போது திரும்பப் பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், தனது தாயாருடனான உறவு குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டார். இன்றுவரை அவர் என்னை ஒரு குழந்தையாகவே நடத்துகிறார். நான் வேலை செய்யத் தொடங்கிய பிறகு, அவருடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை. ஆனால், அவர் தொடர்ந்து என்னைப் பற்றி அக்கறையுடன் விசாரித்துக் கொண்டே இருப்பார். எப்போதும் எனக்கு மிகப்பெரிய ஆதரவாளராக இருந்து, எல்லா நேரங்களிலும் என்னை ஊக்கப்படுத்தி வருகிறார். அவர் இந்தப் படத்தைப் பார்த்து, தனது கருத்தை என்னிடம் தெரிவிப்பதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். அவர் தனது கருத்துகளில் மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பார்” என்றார். சகோதரி குறித்து ஜேசன் சஞ்சய் தனது சகோதரியுடனான உறவு குறித்துப் பேசிய ஜேசன், “நாங்கள் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் பூனையும் எலியும் போல அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டிருப்போம். ஆனால், நாங்கள் வளர்ந்த பிறகு இருவரும் மிகவும் நெருக்கமாகிவிட்டோம். நீண்ட தூர இடைவெளி எங்களுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது” என்றார்.

சுந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஜேசன் சஞ்சய். இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் தனது சமீபத்திய நேர்காணலில் சினிமா வாழ்க்கை மற்றும் குடும்பம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
விஜய்யின் ‘வேட்டைக்காரன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தது குறித்துப் பேசிய ஜேசன் சஞ்சய், அந்தப் படத்தில் தனது பங்களிப்பு அவசியமற்றதாகத் தோன்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது தந்தை விஜய் சினிமா துறையில் தனது ஆர்வத்திற்கு முழு சுதந்திரம் அளித்ததையும், தாயார் சங்கீதா தற்போதும் தன்னை அக்கறையுடன் கவனித்து வருவதையும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.