தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த பெற்றோர்: பெருமிதம் கொள்கிறார் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தனது மகன் விஜய்யை, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி ஷோபா ஆகியோர் இன்று (07/09/2026) நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர். சினிமாவை விட்டு விலகி இருக்கு…

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தனது மகன் விஜய்யை, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி ஷோபா ஆகியோர் இன்று (07/09/2026) நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர். சினிமாவை விட்டு விலகி இருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர், இந்தச் சந்திப்பு குறித்த தகவல்களையும், புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
பகிரப்பட்டுள்ள புகைப்படங்களில் ஒன்றில் சந்திரசேகர் தனது மகனுடன் இருப்பதும், மற்றொன்றில் விஜய் தனது பெற்றோர் இருவருடனும் இருக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளன. முதலமைச்சர் என்ற பெரும் பொறுப்பில் உள்ள தனது மகனைச் சந்தித்தது குறித்துப் பதிவிட்டுள்ள சந்திரசேகர், தனது மகன் அரசியல் அழுத்தங்களையும் பெரிய பொறுப்புகளையும் மிகவும் எளிதாகக் கையாள்வதைக் கண்டு ஒரு தந்தையாக தான் மிகுந்த பெருமை அடைவதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தந்தை-மகன் சந்திப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் த.வெ.க தொண்டர்கள் விஜய்க்கும் அவரது பெற்றோருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த மே மாதம் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியிருந்த சந்திரசேகர், கடந்த முப்பது ஆண்டுகளாகவே சமூகத்திற்காகவும் தமிழ் மக்களுக்காகவும் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் விஜய்யின் மனதில் ஆழமாக இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். தேர்தல் பிரச்சாரத்தின்போது எந்தவிதத் தயக்கமும் இன்றி, தனித்துப் போட்டியிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை ஈட்டிய விஜய்யின் தன்னம்பிக்கை மற்றும் உறுதி குறித்து அவர் பெருமிதம் தெரிவித்திருந்தார். தற்போதைய சூழலில், தனது தந்தை போலத் துணிச்சலாகவும், தாயைப் போல அன்பாகவும் விஜய் செயல்படுவதாக ரசிகர்கள் அவரைப் புகழ்ந்து வருகின்றனர்.