“வேறொரு உலகத்திற்கு சென்றேன்...” - ‘முத்துமணி’ பாடல் உருவான விதத்தை பகிர்ந்த கார்த்திக் சுப்புராஜ்
‘ரெட்ரோ’ படத்தை தொடர்ந்து ‘டோரதி’ எனும் தலைப்பில் ஒரு படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இயக்குவது மட்டுமல்லாமல் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்துள்ளார். இவரோடு ஆஸ்கர் வென்ற குனீத் மோங்கா மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செப்டம்பர் 25ஆம் தேதி படம் வெளியாகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இது அவரது 1540வது படமாகும். முதல் முறையாக கார்த்திக் சுப்புராஜும் இளையராஜாவும் இணைந்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. இப்படத்தில் இருந்து கடந்த ஆக்.22ஆம் தேதி முதல் பாடலாக வெளியான ‘கல்யாண விருந்து’ நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஆக.29ஆம் தேதி வெளியான ‘முத்துமணி’ பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த இரண்டு பாடல்களையுமே இளையராஜா தான் எழுதியுள்ளார். முத்துமணி பாடலை இளையராஜாவும் ஒரு பகுதியை பாடியுள்ளார். 83 வயதிலும் இளையராஜாவின் ஈடுபாட்டையும் இசையையும் ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். இந்த நிலையில் முத்துமணி பாடல் பெற்ற வரவேற்பு தொடர்பாக கார்த்திக் சுப்புராஜ் பாடல் உருவான விதத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “டோரதி படத்திற்காக இசைஞானி ராஜா சாருடன் நான் பணியாற்றிய முதல் நாள், அந்த மேஜிக் ஹார்மோனியத்தில் அவரது மந்திரக் கைகள் ' முத்துமணி' பாடலுக்கு இசையமைத்ததோடு தொடங்கியது. அந்தத் தருணத்தைக் காணும்போதே நான் உணர்ச்சிவசப்பட்டேன். அது ஒரு கனவுலக அனுபவமாக இருந்தது. ராஜா சார் 'வனக்கிளியே' என்று பாடத் தொடங்கியபோது... அந்த தருணத்தில் என் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை. காற்றில் மிதப்பது போலவும், வேறொரு உலகத்திற்குச் செல்வது போலவும், மனதிற்குள் ஒரு சுகமான ஆறுதல் கிடைப்பது போலவும்... இவை அனைத்தும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன. இப்போது இந்தப் பாடலுக்கு உங்கள் அனைவரிடமிருந்தும் அதே போன்ற உணர்வுகளைப் பார்க்கும்போது நான் மிகுந்த நெகிழ்ச்சியடைகிறேன். ஆம்... ராஜா சார் நம் இசைக்கடவுள், அவரது குரல் என்பது கடவுள் நம்மிடம் பேசும் ஒரு வழியாகவே அமைகிறது.எங்களுக்கு இந்த ஆசியை வழங்கியதற்கு நன்றி இளையராஜா சார்” எனக் குறிப்பிட்டுள்ளார். Muthumani - The Raaja Trance ❤️❤️ My First day of work for #Dorothy with the Maestro Raaja sir started with him composing for #Muthumani song with his magical hands on that Magical Harmonium. I was emotional already and feeling surreal to witness that moment and when Raaja sir... pic.twitter.com/hIJsYxZmR2 — karthik subbaraj (@karthiksubbaraj) September 1, 2026

‘ரெட்ரோ’ படத்தைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘டோரதி’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம், ஆஸ்கர் விருது பெற்ற குனீத் மோங்கா மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ளது.
கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் மற்றும் சனந்த் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இது இசையமைப்பாளரின் 1540-வது படமாகும். இப்படம் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.