PulseNews
சினிமா

தங்கைக்காக அண்ணன் எடுக்கும் ரிஸ்க்; சகோதர பாசத்தை உணர்த்திய டாப் ஹீரோ படங்கள்

தமிழ் சினிமாவில் காதல், நட்பு, குடும்ப உறவுகள் என பல்வேறு உணர்வுகளை மையமாக வைத்து ஏராளமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில், அண்ணன்-தங்கை மற்றும் அக்கா-தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு வெளியான, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில், குடும்ப உறவுகளின் பாசத்தையும், அதற்காக ஒருவர் செய்யும் தியாகங்களையும் அழகாக வெளிப்படுத்திய சில படங்களை பார்ப்போம். திருப்பாச்சி (2005) விஜய் மற்றும் மல்லிகா அண்ணன்-தங்கையாக நடித்த திரைப்படம் திருப்பாச்சி. பேரரசு இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், திருமணமாகி சென்னைக்கு செல்லும் தங்கைக்கும் அவரது கணவருக்கும் அங்குள்ள ரவுடிகளால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதையடுத்து, தனது தங்கையின் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அண்ணன் களத்தில் இறங்குகிறார். தங்கையின் நிம்மதிக்காக ஆபத்துகளை எதிர்கொண்டு ரவுடிகளை வேட்டையாடும் அண்ணனின் பாசமே படத்தின் முக்கிய திரைக்கதை. விஜய்யின் அதிரடி நடிப்புடன் குடும்ப உணர்வுகளும் இணைந்ததால் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. வேதாளம் (2015) சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் மற்றும் லட்சுமி மேனன் அண்ணன்-தங்கையாக நடித்த திரைப்படம் வேதாளம். படத்தில் உடன் பிறந்த தங்கை இல்லை என்றாலும், பாசத்தை காட்டிய தங்கையாக தனக்கு உதவி செய்த ஒரு பெண்ணை தனது சொந்த தங்கையாக ஏற்றுக்கொள்ளும் அண்ணன், அவருக்கு பாதுகாப்பான மற்றும் அமைதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க போராடுகிறார். தங்கையின் வாழ்க்கைக்காக எதையும் செய்யத் தயங்காத அண்ணனின் பாசம் படத்தின் முக்கியமான உணர்வாக இருந்தது. ஆக்‌ஷன், சென்டிமென்ட் என இரண்டும் கலந்த இப்படம் அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நம்ம வீட்டுப் பிள்ளை (2019) சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன்-தங்கையாக நடித்த படம் நம்ம வீட்டுப் பிள்ளை. குடும்ப உறவுகளையும் பாசத்தையும் மையமாகக் கொண்ட இந்த திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கி இருந்தார். வளர்ப்புத் தங்கையின் மகிழ்ச்சிக்காக தனது சொந்த ஆசைகளையும் விட்டுக்கொடுத்து, அவருக்கு எப்போதும் துணையாக நிற்கும் அண்ணனின் பாசத்தை இப்படம் அழகாக வெளிப்படுத்தியது. குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள், உறவுகளுக்குள் உருவாகும் விரிசல்கள் மற்றும் அவற்றைத் தாண்டி நிற்கும் பாசம் ஆகியவை படத்தின் கதைக்கு முக்கிய வெற்றியாக அமைந்தது, சிவப்பு மஞ்சள் பச்சை (2019) சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த சிவப்பு மஞ்சள் பச்சை, அக்கா-தம்பி உறவை மையமாக வைத்து உருவான திரைப்படமாகும். பெற்றோர்கள் இல்லாமல் வளரும் அக்கா-தம்பிக்கு இடையேயான ஆழமான பாசத்தையும், ஒருவருக்கொருவர் துணையாக இருக்கும் உறவையும் படம் எடுத்துக்காட்டுகிறது. தம்பியின் வாழ்க்கை மீது அக்கா கொண்டுள்ள அக்கறையும், அக்காவுக்காக தம்பி கொண்டுள்ள பாசமும் கதையின் முக்கியமான அம்சங்களாக அமைந்தன. இயக்குனர் சசி இயக்கிய இந்த படம் வழக்கமான குடும்பக் கதைகளிலிருந்து சற்று மாறுபட்ட அணுகுமுறையுடன் அக்கா-தம்பி உறவை இப்படம் பதிவு செய்தது. கடைக்குட்டி சிங்கம் (2018) பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம், பெரிய கூட்டுக் குடும்பத்தின் பின்னணியில் உருவான திரைப்படம். இதில் ஐந்து அக்காக்களுக்கு செல்லத் தம்பியாக கார்த்தி நடித்திருந்தார். அக்காக்களின் அன்பு, குடும்பத்திற்குள் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க தம்பி ஏற்கும் பொறுப்பு ஆகியவற்றை மையமாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தில், குடும்பத்தில் அனைவரையும் ஒன்றாக வைத்திருக்க முயற்சிக்கும் தம்பியின் பாசமும் பொறுப்புணர்வும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பாண்டிராஜின் குடும்பக் கதைக்களமும் கார்த்தியின் நடிப்பும் இணைந்து இப்படத்திற்கு நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும், இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகவும் கூறப்பட்டது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தங்கைக்காக அண்ணன் எடுக்கும் ரிஸ்க்; சகோதர பாசத்தை உணர்த்திய டாப் ஹீரோ படங்கள்
PulseNews சுருக்கம்

தமிழ் சினிமாவில் குடும்ப உறவுகளை மையப்படுத்திய கதைகளுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உண்டு. குறிப்பாக, அண்ணன்-தங்கை இடையேயான பாசத்தையும், தமக்கையவளுக்காக அண்ணன் மேற்கொள்ளும் தியாகங்களையும் வெளிப்படுத்தும் திரைப்படங்கள் உணர்ச்சிகரமான படைப்புகளாகக் கருதப்படுகின்றன.

இந்த வரிசையில், 2005-ஆம் ஆண்டு வெளியான 'திருப்பாச்சி' திரைப்படம் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான படங்களில் ஒன்றாகும். இப்படத்தில் விஜய் மற்றும் மல்லிகா ஆகியோர் அண்ணன்-தங்கையாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளனர்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema