நூற்றாண்டு நாயகர் "பத்மஸ்ரீ' பாலசந்தர்! இது கே.பி.யின் கலைப்பயணம்! -புஷ்பா கந்தசுவாமி (10)
(10) கே.பி. வசனத்தை திருத்திய எம்ஜிஆர்! இரா ம.வீரப்பன் அய்யா அவர்களுக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒரு படம் நடிக்க கால்ஷீட் தர சம்மதித்தார். அதற்காக தொடங்கப்பட்டது "சத்யா மூவிஸ்' பட நிறுவனம். டைரக்டர் ஸ்ரீதரின் உதவியாளர் பி.மாதவன் இயக்க, ஒரு ஹிந்தி படத்தின் உரிமையை வாங்கியிருந்தார் ஆர்.எம்.வீரப்பன். "அந்தப் படத்திற்கான திரைக்கதை வசனத்தை (அந்த நாடக இளைஞர்) பாலசந்தரை எழுத வையுங்கள்' என்று எம்.ஜி.ஆர். சொன்னதால் ஆர்.எம்.வீ., அப்பாவை சந்தித்தார். "ஒரு ஹிந்தி படத்தைப் பார்த்து தமிழில் அதற்கு நீங்கள் திரைக்கதை வசனம் எழுத முடியுமா?'' என்று கேட்டார். அப்பா மௌனமாக இருந்தார். மௌனமே சம்மதம் என்று நினைத்து அவர் முன் பணம் கொடுத்துவிட்டு, "நாளை அந்தப் படத்தை நீங்க பாருங்க' என கூறினார் ஆர்.எம்.வீரப்பன். மறுநாள் பிளாசா தியேட்டரில் அந்தப் படத்தை அப்பா மட்டும் தனியே அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். அதே தியேட்டரில் அப்பா கியூவில் நின்று டிக்கெட் வாங்கி பல படங்களைப் பார்த்த நினைவு அப்போது வந்துபோனது. படம் பார்த்துவிட்டு மாலையில் அலுவலகத்துக்கு அப்பா சென்றார். எடுக்கப்போகும் படத்தின் திரைக்கதை வசனம் எப்படி அமைய வேண்டும் என்று ஆர்.எம்.வீ. அய்யா விளக்கினார் . "ஹிந்தியில் பிரபல நடிகர் பிரான்தான் வில்லன். அவருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால் தமிழில் வில்லன் அசோகன். அந்தக் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை. கொஞ்சம் நல்ல வில்லனாக காட்டினால் போதும், மற்றபடி ஹீரோ எம்.ஜி.ஆரின் கதாபாத்திரம் மட்டும் சிறப்பாக வரவேண்டும். அம்மா சென்டிமென்ட் இருக்கணும், தாய் பாசக் காட்சிகள் அதிகமாக இருக்கவேண்டும். வசனங்களில், காட்சிகளில் ஹீரோவை சிறப்பித்துக் காட்டணும்'' என்று தயாரிப்பாளர் ஆர்.எம். வீரப்பன் சொன்னதும் அப்பாவுக்கு சற்று நெருடலாக இருந்தது, புதுசாகவும் தெரிந்தது. "எம்.ஜி.ஆர். என்கிற ஆளுமைக்கு எழுதுகிறோம்' என்கின்ற உணர்வோடு அப்பா ஒத்துக் கொண்டார். அப்பா உட்கார்ந்து எழுதுவதற்காக அறை ஒதுக்கப்பட்டது, இந்தி பட வசனங்களை தமிழில் எழுதினார். அதை வாங்கிப் பார்த்த ஆர்.எம்.வீ., "இப்படியெல்லாம் எழுதக் கூடாது. நீங்க எழுதுறது எம்.ஜி.ஆருக்காக... இத மனசுல வச்சுக்கோங்க' என்று சொல்லி, அப்பா எழுதிய வசனங்களைப் பார்த்து, அவர் கண் முன்னாடியே அடித்து விட்டு பக்கத்திலேயே மாற்றி எழுதினார். இதைப் பார்த்து அப்பாவுக்கு பகீரென் றிருந்தது. ஏற்றுக்கொண்ட வேலையை செய்து கொடுத்துவிட்டுப் போவோம் என்று நினைத்துக் கொண்டார். நடுத்தர மக்களின் வாழ்வியலை எழுதிய அப்பாவுக்கு, எம்.ஜி.ஆர். என்ற மாஸ் ஹீரோவுக்கு எழுதுவது புதிய அனுபவமாக இருந் தது. அதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டார். "எம்.ஜி.ஆருக்கேற்ற மாதிரி இவரால் எழுத முடியல, இவரை மாத்திட வேண்டியதுதானே' என்று சிலர் வீரப்பன் ஐயா காதை கடித்தனர். "அவர் பெரிய ரைட்டர்யா, அவருக்கு இது புதுசு. அவரை மாத்தணும்னா எம்.ஜி.ஆர். கோபித்துக்கொள்வார்'' என்றாராம் ஆர்.எம்.வீ.படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது "உங்களுடைய வசனம் எனக்கு நன்றாக புரிகிறது. ஆனால் என் ரசிகர்கள் பாமரர்கள், படிக்காதவர்கள், விவசாயக் கூலிகள், ரிக்ஷா தொழிலாளி கள்... அவர்களுக்குப் புரியும் படி எழுதுங்கள்'' என்று எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண் டார். ஒருநாள் படப்பிடிப் புத் தளத்தில் எம்.ஜி.ஆர். ஒரு வசனத்தை "கொஞ்சம் மாற்றி எழுதித் தாருங்கள் வாத்தியாரே'' என்று சொல்ல, அப்பா உட்கார்ந்து எழுது கிறார். பக்கத்திலேயே எம்.ஜி.ஆர். நிற்கின்றார். "சார் நீங்க பக்கத்துல நிக்காதீங்க... ஒண்ணும் ஓட மாட்டேங்குது'' என்று அப்பா சொல்ல, எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே நகர்ந்துசென் றாராம். பிறகு அப்பா எழுதி யதை வாங்கி பார்த்து "இதைத்தான் நான் கேட் டேன்'' என்றாராம். எம்.ஜி.ஆர். ஷூட்டிங் கில் கலந்துகொள்ளும் நாட்களில் அப்பாவும் சென்றார். ஒரு வழியாக படம் முடிந்தது, பேசியபடி பணம் கொடுத்துவிட் டார்கள். "தெய்வத்தாய்' வெளி யாகி பெரும் வெற்றிபெற்றது. படத்திற்கு வசனம் கே.பாலசந்தர் என்று டைட்டில் கார்டில் வந்தது. இந்த விஷயம் அப்பாவுக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. தன்னுடைய வசனங்கள் பலவற்றை ஆர்.எம். வீரப்பன் அவர்கள் மாற்றி அமைத்த போதிலும் தனக்கான மரியாதையை டைட்டில் கார்டில் கொடுத்திருந்ததை உணர்ந்து நெகிழ்ந்துபோனார். பிற்காலத் தில் அவரவருக்கு ஏற்ற மரியாதையை டைட்டில் கார்டில் தர வேண்டும் என்ற படிப்பினையும் அவருக்கு கிடைத்தது. இறுதிவரை இந்த கொள்கையை அப்பா பின்பற்றினார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் படத்தின் கதை வசனகர்த்தாவை "வாத்தியார்' என்று மரியாதையுடன் அழைப்பார். அப்பாவையும் அப்படித்தான் மரியாதையுடன் அழைத்துப் பழகினார். தென்னிந்திய சினிமா உலகில் எம்.ஜி.ஆர். படத்தில் ஒருவர் கதை வசனம் எழுதுகிறார்,. பணியாற்றுகிறார் என்றால் எல்லோரின் பார்வையும் அவர் மீது இருக்கும். அதேபோல அப்பா எல்லோராலும் கவனிக்கப்பட்டார். "எம்.ஜி.ஆருக்கே நீங்க வசனம் எழுதி விட்டீர்கள் அப்புறம் யாருக்கு வேண்டுமானாலும் ஈசியாக எழுதி விடலாம்' என்பது திரையுலகினர் பார்வை. அப்போது ஒரு வாரப்பத்திரிகை எழுதிய விமர்சனத்தில், "நாடகத்திற்கு வசனம் எழுதிய அவரா வசனம் எழுதினார்?' என்று கேட்டிருந்தது. அவரது சந்தேகம் நியாயமானதுதானே. இதுதான் அப்பா எம்.ஜி.ஆர். படத்திற்கு வசனம் எழுதிய கதை. சரி... எம்.ஜி.ஆர். பாராட்டி அதன் உரிமையை வாங்கிய நாடகத்தின் கதை என்ன? பிறகு ஏன் அது படமாகவில்லை? (சொல்கிறேன்...) -எழுத்தாக்கம் "கலைமாமணி' சபீதா ஜோசப் __________ தண்ணியடிக்க மாட்டேன்! "77 வயதிலும் இத்தனை சுறுசுறுப்பாக இருக்கிறீர்களே எப்படி?'' என்று ஒருமுறை பத்திரிகையாளர் ஒருவர் அப்பாவிடம் கேட்டபோது... "என்னுடைய வேலை சினிமா பார்க்கிறது, படம் எடுக்கிறது, சின்னத்திரை நாடகங்கள் பார்க்கிறது, தொடர்கள் எடுக்கிறது. இதுபோக நான் எந்த கிளப்பிலும் உறுப்பினர் இல்லை. சீட்டாடத் தெரியாது, தண்ணியடிக்க மாட்டேன்... எனக்குன்னு தனி உலகம் வச்சிருக்கேன். அந்த வட்டத்துக்குள்ளேயே இருந்துட்டேன். அதிலிருந்து வெளியே வரமுடியல. நான் புத்திசாலியா? அறிவாளியா? முட்டாளா தெரியல. ஆனா கடைசிவரைக்கும் அந்த வட்டத்துக்கு உள்ளேயே இருக்கணும்னு நினைக்கிறேன்'' என்றார் அப்பா.

சத்யா மூவிஸ் பட நிறுவனம் தொடங்கப்பட்ட போது, அந்த நிறுவனத்தின் படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதும் பொறுப்பை பாலசந்தரிடம் ஒப்படைக்க எம்.ஜி.ஆர். பரிந்துரைத்தார். இது குறித்து ஆர்.எம்.வீரப்பன், பாலசந்தரை நேரில் சந்தித்து வாய்ப்பளித்தார்.
பி.மாதவன் இயக்கத்தில் உருவாகவிருந்த அந்தத் திரைப்படத்தின் வசனங்களை எழுதியபோது, எம்.ஜி.ஆர். அதில் சில திருத்தங்களைச் செய்துள்ளார். எம்.ஜி.ஆரின் ஆலோசனையின் பேரில், நாடகங்களில் ஈடுபட்டு வந்த பாலசந்தர் திரைத்துறைக்கு அழைத்து வரப்பட்டார்.