உபியை உறையவைத்த ஹரியான்வி பாடகர் படுகொலை; கொலையில் நீடிக்கும் மர்மம்..?
உத்தரப்பிரதேச மாநிலம் சாம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அங்கித் பாலியன். ஹரியான்வி பாடகரான இவர், நடிகர், யூடியூபர் என தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். ஹரியானா மாநிலத்தில் பரவலாக பேசப்படும் வட்டார மொழியில் ஹரியான்வி பாப், நாட்டுப்புறப் பாடல்கள், இளைஞர்களை மையப்படுத்திய பாடல்கள் என ஏராளமான பிரத்யேக பாடல்களை உருவாக்கி பாடி, அனைவரது கவனத்தை ஈர்த்ததோடு, பாராட்டையும் பெற்றவர். 3.6 லட்சத்துக்கும் அதிகமான யூடியூப் சந்தாதாரர்களைக் கொண்டிருந்த இவர், ஹரியான்வி மண்ணின் பெருமை, கிராமத்து கெத்து, அரசியல், துப்பாக்கி கலாச்சாரம் என அதிரடி பாணியிலான பாடல்களால் பிரபலமானவர். அதிலும், குறிப்பாக "Bhari Court Mein Goli" என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது. அங்கித் பாலியன் கொலைக்குப் பிறகு அந்த பாடலின் பின்னணி, தற்போது பெரிதும் பேசப்பட்டு வருகிறது. கடந்த 26 ஆம் தேதி மாலை சாம்லியில் உள்ள ஜிம்முக்கு வழக்கம்போல் அங்கித் சென்றுள்ளார். அங்கு அவர் உடற்பயிற்சியை முடித்துவிட்டு இரவு 07 மணியளவில் வெளியே வந்து தனது ஸ்கார்பியோ காரை நோக்கி சென்றுள்ளார். அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 04 பேர் கொண்ட கும்பல், அங்கித்தை குறிவைத்து துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டுள்ளனர். துப்பாக்கிச் சத்தம் கேட்டு அதிர்ந்த அங்கித், தன்னை காப்பாற்றிக்கொள்ள காருக்குள் செல்ல முயன்றுள்ளார். ஆனால், அந்தக் கும்பல் காரின் கதவை திறந்து, மிக அருகில் வைத்து மீண்டும் மீண்டும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் அவர் மீது சுமார் 18 ரவுண்டுகள் சுடப்பட்டதாக கூறப்படும் நிலையில், அங்கித்தின் தலை மற்றும் வயிற்றுப் பகுதியில் 05 தோட்டாக்கள் பாய்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. காரின் முன்பக்க கண்ணாடியிலும் தோட்டாக்கள் பாய்ந்துள்ளன. துப்பாக்கிச்சூட்டில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அங்கித்தை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த சாம்லி போலீசார் விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர். ஜிம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். அத்துடன், குறித்த கும்பல் அங்கித்தை குறிவைத்து முன்கூட்டியே நோட்டமிட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த கொலைக்கு கோகி கேங் பொறுப்பேற்றதாக கூறப்படும் சமூக வலைதள பதிவு வெளியாகியுள்ளது. அதில், அங்கித் தங்களது எதிர்தரப்பினருடன் தொடர்பில் இருந்ததாகவும், தங்களது கேங் தொடர்பான சம்பவத்தை மையமாக வைத்து பாடல் ஒன்றை உருவாக்கியதாகவும் பதிவிடப்பட்டிருந்தது. மேலும், "இது ஆரம்பம்தான், ஒவ்வொருவருக்கும் முறை வரும்" என்ற தொனியில் அந்த பதிவில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த சமூக வலைதள பதிவு உண்மையானதா, உண்மையிலேயே கோகி கேங்கிற்கும் இந்த கொலைக்கும் தொடர்பு உள்ளதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அத்துடன், பழைய பகை, தனிப்பட்ட விரோதம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் படி, அங்கித் வரவிருக்கும் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தயாராகி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், தேர்தல் தொடர்பு கொலைக்கான காரணம் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இதனிடையே, கொலைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அங்கித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. அதில் "மர்டர் மார் தே சடக் கே உப்பர்" என்ற வரிகள் கொண்ட பாடலை அவர் பாடியுள்ளார். உயிரோடு இருந்தபோது பதிவிட்ட அந்த வீடியோ, அவரது மரணத்துக்குப் பிறகு ரசிகர்களை உறைய வைத்துள்ளது. கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் டெல்லி - முசாபர்நகர் சாலையில் மறியலில் ஈடுபட்டதாள் பரபரப்பும் ஏற்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் சாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த அங்கித் பாலியன், ஹரியான்வி மொழியில் பாப் மற்றும் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி புகழ்பெற்ற பாடகர் ஆவார். யூடியூபராகவும், நடிகராகவும் அறியப்பட்ட இவர், ஹரியான்வி கலாச்சாரம் சார்ந்த பாடல்கள் மூலம் 3.6 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டிருந்தார்.
இத்தகைய சிறப்புமிக்க பாடகரான அங்கித் பாலியன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான கொலை சம்பவம் குறித்து இதுவரை உறுதியான காரணங்கள் தெரியவராத நிலையில், இக்கொலைக்கான மர்மம் நீடித்து வருகிறது.