சிவகுமார் வாசித்த நிர்வாணத் தம்புரான்! - சுரா
ந டிகர் சிவகுமார் நான் மொழிபெயர்த்த ஒரு புதினத்தை விரும்பி வாசித்திருக்கிறார். அந்த புதினத்தின் பெயர் 'நிர்வாணத் தம்புரான்'. இதற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது. அது என்ன? சில வருடங்களுக்கு முன்னால் தொலைக்காட்சித் தொடர்களை இயக்கும் சி. ஜே. பாஸ்கர் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் என் நெருங்கிய நண்பர். 1980-ஆம் வருடத்தில் அவர் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய காலத்திலேயே அவரை எனக்குத் தெரியும். அவர் இயக்கி, நடிகை ராதிகா தயாரித்த "சித்தி' தொலைக்காட்சித் தொடருக்கு நான்தான் மக்கள் தொடர்பாளர். என்னை பாஸ்கர் தொடர்பு கொண்டபோது, அவர் "அண்ணாமலை' தொடரை இயக்கிக் கொண்டிருந்தார். விஷயம் இதுதான்... நான் மொழிபெயர்த்த "நிர்வாணத் தம்புரான்' என்ற புதினத்தை சி.ஜே. பாஸ்கர் வாசித்திருக்கிறார். அவருக்கு அது மிகவும் பிடித்துவிட்டது. நான் மலையாள மொழியிலிருந்து மொழி பெயர்த்த அந்த நாவலை எழுதியவர்... தேசிய சாகித்ய அகாதெமி விருது பெற்ற எம். முகுந்தன். அந்நூலை வெளியிட்டது சந்தியா பதிப்பகம். உயர்நிலையில், அனைவரும் மதிக்கும் மனிதராக இருக்கும் பாரம்பரிய பெருமை கொண்ட ஒரு தம்புரான், ஒரு இளம்பெண்ணால் எந்த அளவிற்கு வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட மனிதராக ஆகிறார் என்பதை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை அது. நான் மொழிபெயர்த்த சிறந்த படைப்புகளில் ஒன்று அது. தான் ஈர்க்கப்பட்ட அந்த நாவலை நடிகை ராதிகாவிடம் பாஸ்கர் கூறியிருக்கிறார். ராதிகாவும் அதை வாசித்திருக்கிறார். அவருக்கும் அக்கதை மிகவும் பிடித்துவிட்டது. அப்பு தினத்தை ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகக் கூடிய டெலிஃபிலிமாக தயாரிக்கலாம் என்ற முடிவிற்கு ராதிகா வந்திருக்கிறார். தன் ராடான் நிறுவனத்தின் மூலம் அதைத் தயாரிப்பது என்றும், அதை இயக்குபவர் சி.ஜே. பாஸ்கர் என்றும் அவர் தீர்மானித்தார். ராதிகா தயாரிப்பில் சி.ஜே. பாஸ்கர் இயக்கிய சித்தி, அண்ணாமலை என்ற இரு மெகா தொடர்களிலும் நாயகனாக நடித்துக் கொண்டிருந்தவர் சிவகுமார். அவரையே "நிர்வாணத் தம்புரான்' டெலிஃபிலிமிலும் நாயகனாக நடிக்க வைப்பது என்ற முடிவிற்கு ராதிகாவும், பாஸ்கரும் வந்தார்கள். அதனால் "நிர்வாணத் தம்புரான்' புத்தகத்தை சிவகுமாரிடம் தந்து, அதை வாசிக்குமாறு கூறினார்கள். அவர் வாசித்திருக்கிறார். அவருக்கும் அது பிடித்துவிட்டது. அதன் நாயகனாக நடிப்பதற்கு அவரும் சம்மதித்து விட்டார். இந்த நிலையில்தான் சி. ஜே. பாஸ்கர் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் கேட்டுக்கொண்டபடி நான் ராடான் நிறுவனத்திற்குச் சென்றேன். ராதிகா மேடம் "நிர்வாணத் தம்புரான்' கதையைப் புகழ்ந்து பேசினார். அவரின் சகோதரர் மோகன் ராதாவை அங்கு சந்தித்துப் பேசினேன். அவர் அக்கதையால் மிகவும் ஈர்க்கப்பட்டிருப்பது அவரின் பேச்சிலேயே தெரிந்தது. அதே வாரத்தில் நான் "அண்ணாமலை' தொடரின் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் சென்றேன். சி.ஜே. பாஸ்கர்தான் என்னை அங்கு வருமாறு கூறியிருந்தார். பூந்தமல்லிக்கு அருகிலிருக்கும் நசரத்பேட்டை என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டில் படப்பிடிப்பு... அங்கு நான் நடிகர் சிவகுமார் அவர்களைச் சந்தித்தேன். அவர் எனக்கு நன்கு பழக்கம். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும். சுமார் அரை மணி நேரம் அவருடன் உரையாடினேன். "நிர்வாணத் தம்புரான்' புதினத்தை மிகுந்த ஈடுபாட்டுடன் வாசித்ததாக சிவகுமார் கூறினார். என் மொழிபெயர்ப்பை மனம் திறந்து பாராட்டினார். "மொழிபெயர்ப்பு மாதிரியே இல்லை. நேரடியாக தமிழில் எழுதப்பட்ட படைப்பைப்போல இருந்தது'' என்றார். அது டெலிஃபிலிமாக தயாரிக்கப்படும் பட்சம், அதில் பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பதில் மிகுந்த விருப்பத்துடன் அவர் இருந்தார். அதைக் கேட்கும்போது, எனக்கும் சந்தோஷமாக இருந்தது. ஆனால், அது டெலிஃபிலிமாக உருவாகவில்லை. பேச்சு அளவிலேயே நின்றுவிட்டது. அதற்குக் காரணம்...? நடிகை- தயாரிப்பாளர் ராதிகாவிற்கும், இயக்குநர் சி.ஜே. பாஸ்கருக்கும் இடையே "அண்ணாமலை' தொடரின்போது உண்டான கருத்து வேறுபாடு... அத்தொடரின் இயக்கத்திலிருந்து பாஸ்கர் விலக, சுந்தர் கே. விஜயன் அதைத் தொடர... இப்படி... எதிர்பாராத அதிரடி மாற்றங்கள்! நிலைமை இப்படி ஆக... "நிர்வாணத் தம்புரான்' எப்படி டெலிஃபிலிமாக வடிவம் எடுக்கும்? அதில் எப்படி சிவகுமார் கதாநாயகனாக நடிப்பார்? எனினும், எனக்கு ஒரு சந்தோஷம்... நடிகர் சிவகுமார் நான் மொழிபெயர்த்த "நிர்வாணத் தம்புரான்' என்ற புதினத்தை வாசித்திருக்கிறாரே! அந்த அளவில் எனக்கு மகிழ்ச்சிதான்...!

தேசிய சாகித்ய அகாதெமி விருது பெற்ற எம். முகுந்தன் எழுதிய 'நிர்வாணத் தம்புரான்' என்ற மலையாள நாவலை, சுரா தமிழில் மொழிபெயர்த்திருந்தார். இந்த நாவலைப் படித்த இயக்குநர் சி.ஜே. பாஸ்கர் மற்றும் தயாரிப்பாளர் ராதிகா, இதை ஒரு மணி நேரத் தொலைக்காட்சித் திரைப்படமாகத் தயாரிக்கத் திட்டமிட்டனர். அதில் கதாநாயகனாக நடிக்க நடிகர் சிவகுமாரைத் தேர்வு செய்து, அவரிடம் நாவலைக் கொடுத்துப் படிக்க வைத்தனர்.
நாவலை விரும்பிப் படித்த சிவகுமார், சுராவிடம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், அதில் நடிப்பதற்கும் விருப்பம் தெரிவித்தார். இருப்பினும், ராதிகாவிற்கும் இயக்குநர் சி.ஜே. பாஸ்கருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அத்தொலைக்காட்சித் திரைப்படம் உருவாகவில்லை. திட்டமிட்டபடி திரைப்படம் எடுக்கப்படாவிட்டாலும், சிவகுமார் தனது மொழிபெயர்ப்பைப் படித்துப் பாராட்டியது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக சுரா குறிப்பிட்டுள்ளார்.