PulseNews
சினிமா

கூலிப்படைகளின் இருண்ட வாழ்வு வெளிச்சத்திற்கு வந்ததா? - ‘அமரம்’ விமர்சனம்

பல்வேறு பெரிய படங்கள் இடையே அவ்வப்போது சிறிய படங்களும் எட்டிப் பார்த்து வரவேற்பை பெறும் முயற்சியில் கோதாவில் குதிப்பது வழக்கம். அந்த வகையில் அது போன்ற ஒரு திரைப்படமாக இந்த அமரம் வெளியாகி இருக்கிறது. அது ரசிகர்களை ஈர்த்ததா, இல்லையா? சிறுவயதிலேயே தன் தாய்க்கு நிகழ்ந்த மிகப்பெரிய கொடுமையை கண்முன்னே பார்த்த நாயகன் ராஜன் தேஜேஸ்வர் பாரபட்சம் பார்க்காமல் கொலை செய்யும் கூலிப்படை ஆளாக மாறுகிறார். நாயகி ஐரா அகர்வாலின் தந்தையை கொலை செய்ய அவருக்கு ஒரு பெரிய அரசியல்வாதி மூலம் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அவரும் பாரபட்சம் பார்க்காமல் இரக்கமற்ற முறையில் கொலை செய்து விடுகிறார். இந்த கொலையை பார்த்த நாயகி ஐரா அகர்வால் நாயகன் ராஜனை பழிவாங்க அவருடைய மலை கிராமத்திற்கு அரசியல்வாதி நாகினீடுடன் செல்கிறார். சென்ற இடத்தில் நாயகிக்கு அவரை சுற்றி பின்னப்பட்டிருக்கும் மிகப்பெரிய சதி வலை தெரிய வருகிறது. கூட இருந்து குழி பறிக்கும் ஆசாமிகளை கண்டுபிடிக்க இவர்களை விட தன் தந்தையை கொலை செய்த நாயகன் ராஜன் எவ்வளவோ மேல் என நினைக்க அந்த நேரத்தில் நாயகி ஐரா அகர்வால் ஒரு ஆபத்தில் சிக்குகிறார். அவரை காப்பாற்ற நாயகன் ராஜன் தேஜேஸ்வர் வந்திருக்க இருவரும் ஆபத்திலிருந்து தப்பித்தார்களா இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை. மலை கிராமத்து பின்னணியில் இருக்கும் கூலிப்படையை மையமாக வைத்து ஒரு சராசரியான படமாக இந்த திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அருள் கிருஷ்ணா. முதல் பாதி சற்று வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்ந்து பிற்பகுதியில் அவை அனைத்தும் குறைந்து அயர்ச்சியோடு நகர்ந்து முடிகிறது. முதல் பாதியில் இருந்த திரைக்கதை வேகம் இரண்டாம் பாதியிலும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பல இடங்களில் முதிர்ச்சியற்ற காட்சி அமைப்புகள் கதையுடன் ஒட்ட மறுக்கிறது. அவையே படத்துக்கு பாதகமாகவும் அமைந்திருக்கிறது. இருந்தும் சொல்ல வந்த விஷயத்தை நேர்த்தியான முறையில் ஒரு சராசரி படமாக கொடுத்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்து படத்தையும் கரை சேர்க்க முயற்சி செய்திருக்கிறது. அறிமுக நாயகன் ராஜன் தேஜஸ்வர் கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். வழக்கமான நாயகியாக வரும் ஐரா அகர்வால் வழக்கமாக வந்து செல்கிறார். வில்லனாக வரும் ஹரிஷ் பெரடி கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். நாயகனுடன் வரும் சாயி தீனா கொடுத்த வேலையை செவ்வனே செய்திருக்கிறார். இன்னொரு அரசியல்வாதியாக வரும் நாகினீடு கொடுத்த வேலையை செய்திருக்கிறார். மற்றபடி ஜார்ஜ் மரியான் கல்கி ராஜன் வாசுதேவன் முரளி உட்பட பலர் அவரவர் வேலையை முக்கிய கதாபாத்திரத்தில் நிறைவாக செய்து விட்டு சென்று இருக்கின்றனர். பரத்குமார் ஒளிப்பதிவில் மலை சம்மந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சௌந்தரராஜன் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை ஓகே. மலைவாழ் கிராமத்தில் வாழும் கூலிப்படைகளின் இருண்ட வாழ்வை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் கதை கருவுக்கு முக்கியத்துவம் அளித்ததை விட திரைக்கதைக்கும் இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இருந்தும் அதிகார வர்க்கத்தினர் கூலிப்படைகளை எவ்வாறு உபயோகிக்கின்றனர் என்பதை சஸ்பென்ஸ் நிறைந்த படமாக எடுத்த முயற்சிக்கு பாராட்டுக்கள். அமரம் - அம்பு!

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கூலிப்படைகளின் இருண்ட வாழ்வு வெளிச்சத்திற்கு வந்ததா? - ‘அமரம்’ விமர்சனம்
PulseNews சுருக்கம்

பெரிய படங்களுக்கு இடையிலும் தங்களது தனித்துவத்தைக் காட்ட சிறிய பட்ஜெட் படங்கள் அவ்வப்போது களமிறங்குவது வழக்கம். அந்த வரிசையில், கூலிப்படையைச் சேர்ந்த ஒருவனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு 'அமரம்' திரைப்படம் வெளியாகியுள்ளது.

சிறுவயதிலேயே தன் தாய்க்கு நேர்ந்த கொடுமையை நேரில் பார்த்த ராஜன் தேஜேஸ்வர், பிற்காலத்தில் கூலிப்படையாக மாறுகிறார். ஒரு அரசியல்வாதியின் தூண்டுதலால், நாயகி ஐரா அகர்வாலின் தந்தையைக் கொலை செய்யும் பொறுப்பு நாயகனுக்கு வழங்கப்படுகிறது. இந்தத் திரைக்கதை ரசிகர்களை ஈர்த்ததா என்பதே இப்படத்தின் மையமாக உள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema