“வேறொரு உலகத்திற்கு அழைத்து செல்கிறது... உண்மையான காவியம்” - புகழ்ந்து தள்ளிய அட்லீ
பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’ படம் கடந்த மாதம் 17ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் மேட் டிமன், டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ராபர்ட் பாட்டின்சன், லுபிடா நியாங்கோ, சமந்தா மார்டன், ஜெண்டயா மற்றும் சார்லிஸ் தெரோன் ஆகியோர் நடித்துள்ளனர். ‘சின்காபி’(Syncopy) என்ற பேனரில் நோலன் மற்றும் அவரது மனைவி எம்மா தாமஸ் இப்படத்தைத் தயாரித்திருக்க யுனிவர்ஸல் பிக்சர்ஸ் வெளியிட்டது. இப்படம் கிரேக்க கவிஞர் ஹோமர் எழுதிய புகழ்பெற்ற காப்பியங்களில் ஒன்றான ‘தி ஒடிஸி’ என்ற புராணக் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்த கதை ஏறத்தாழ 3,000 ஆண்டுகளுக்கு முன்பு போருக்குப் பிந்தைய ஒரு வீரனின் நாடு திரும்புதலை மையமாகக் கொண்டது. இப்படம் முதல் முறையாக ஒட்டுமொத்த படம் முழுவதும் ஐமேக்ஸ் 70எம்எம்(70mm) கேமராவில் படமாக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியான இப்படம் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையும் பெற்றது. இந்த நிலையில் இப்படத்தை இயக்குநர் அட்லீ பாராட்டியுள்ளார். சினிமாவத் தாண்டிய அனுபவம் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், “சில படங்கள் நம்மை வெறுமனே பார்க்க மட்டும் வைக்கும். சில படங்கள் ரசித்து பார்க்க வைக்கும். ஆனால் சில படங்கள் மட்டுமே நம்மை முற்றிலும் வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். அது போன்ற அனுபவம் தந்த படம் தான் ‘தி ஒடிஸி’. நோலனின் கதை சொல்லும் விதம் வியக்க வைக்கிறது. அதன் காட்சிகள் தனித்துவமான மொழியைப் பேசுகின்றன, கேமரா வெறும் கருவியாக இல்லாமல் கதையைச் சொல்லும் மற்றொரு கதாபாத்திரமாகவே மாறுகிறது. லுட்விக்-கின் இசை வெறும் பின்னணியாக மட்டும் இல்லாமல், நம் நாடித் துடிப்போடு ஒன்றிவிடுகிறது. திரையரங்கிற்குள் அமர்ந்திருக்கும்போது மிக அரிதாகவே உணரக்கூடிய அந்த விறுவிறுப்பும், நம்மை முழுமையாக ஆட்கொள்ளும் அந்த ஈர்ப்பும் இப்படத்தில் இருக்கிறது. ஆனால், எனக்குள் ஆழமாகப் பதிந்தது மனதுக்கு நெருக்கமான ஒரு உணர்வு. நம்மில் இருக்கும் பார்வையாளன் முற்றிலுமாக ஒரு படத்திடம் சரணடைவது எதுவோ, அதுவே உண்மையான காவியம். அப்படி தான் இந்த ஒடிஸி படம் எனக்கு அமைந்தது. இதை ஐமேக்ஸில் கண்டு களியுங்கள். அந்தப் படம் உங்களைச் சூழ்ந்துகொள்ளும். உங்களை முழுமையாக ஆட்கொள்ளும். உங்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். சில படங்கள் பார்ப்பதற்காக மட்டுமே உருவாக்கப்படுகிறது. சில படங்களோ அக்கதையை வாழ்ந்து பார்ப்பதற்காக உருவாக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘தி ஒடிஸி’ திரைப்படம் கடந்த மாதம் 17-ம் தேதி வெளியானது. கிரேக்க கவிஞர் ஹோமரின் புகழ்பெற்ற காவியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தை, நோலனும் அவரது மனைவி எம்மா தாமஸும் இணைந்து 'சின்காபி' பேனரில் தயாரித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தை யுனிவர்ஸல் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேட் டிமன், டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ராபர்ட் பாட்டின்சன், லுபிடா நியாங்கோ, சமந்தா மார்டன், ஜெண்டயா மற்றும் சார்லிஸ் தெரோன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை, இது வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் உண்மையான காவியம் என இயக்குநர் அட்லீ பாராட்டியுள்ளார்.