PulseNews
சினிமா

சென்னையில் சொகுசு பங்களா, ஆனா எனக்கு மும்பை வீடு தான் பிடிக்கும்: சிறிய வீட்டில் மகிழ்ச்சி இருப்பதாக சூர்யா விளக்கம்

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா தம்பதியினர், கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களது குழந்தைகள் தியா மற்றும் தேவ் ஆகியோருடன் சென்னையில் இருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தனர். மும்பையில் வசிக்கும் ஜோதிகாவின் பெற்றோருடன் அவர் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், அதே நேரத்தில் தனது பாலிவுட் திரைப்பயணத்தை மீண்டும் தொடர வேண்டும் என்பதற்காகவும் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக நடைபெற்ற நேர்காணலில், சென்னையில் விட்டுவந்த சொகுசு பங்களாவை விட மும்பையில் தாங்கள் வசிக்கும் 1,700 சதுர அடி கொண்ட சிறிய வீட்டில், அதிக மகிழ்ச்சியாக இருப்பதாக சூர்யா மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து தொகுப்பாளர் சுமா நடத்திய உரையாடலில் கேட்கப்பட்டபோது, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ள நடிகை ராதிகா சரத்குமார் பேசியுள்ளார். அதில், “அவருக்கு அந்த வீடு மிகவும் பிடிக்கும். ஜோதிகா என்னிடம் சூர்யாவுக்கு மும்பை மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். அவர் அங்கு செல்வதை விரும்புகிறார். அங்கு சென்றவுடன் முதலில், ‘என்னுடைய துணிகளைத் துவைப்பவர் எங்கே? அயர்ன் செய்பவர் எங்கே? என்னுடைய ஷூக்கள் எங்கே?’ என்று கேட்பார். அவரே காபி போடுவார். எல்லாவற்றையும் அவரே செய்வார். நான் அங்கு சென்றபோது அவரை அப்படித்தான் பார்த்தேன். அவர் அங்கு மிகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது” என்றார். மும்பை ஏன் பிடிக்கிறது? சூர்யா விளக்கம் மும்பையில் வசிப்பதையே தான் ஏன் விரும்புகிறேன் என்பதற்கான காரணத்தையும் சூர்யா விளக்கியுள்ளார். மும்பை எனக்கு கிட்டத்தட்ட ஒரு விடுமுறை போன்றது. நான் சென்னையில் வேலை செய்கிறேன். பின்னர் அங்கு விடுமுறைக்குச் செல்வது போல் இருக்கிறது. அங்கு எங்களுடைய வீடு சிறியதாக இருக்கிறது. 1,700 சதுர அடி கொண்ட வீட்டில்தான் நாங்கள் வசிக்கிறோம். படுக்கையறைக்குச் செல்ல இரண்டு அடிகள், அங்கிருந்து ஹாலுக்கு இரண்டு அடிகள், சமையலறைக்கு இரண்டு அடிகள், சாப்பிடும் இடத்திற்கும் இரண்டு அடிகள்தான். மிகவும் அழகான, வசதியான சிறிய வீடு அது. அந்த வீடு எங்களுக்கு மிகுந்த நிம்மதியையும் வசதியையும் தருகிறது. அங்கு நிறைய நினைவுகளும், அன்பும், அரவணைப்பும் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் அன்புதான். தியா அல்லது தேவ் இருவரில் யாரையாவது உடனடியாக அழைக்க வேண்டும் என்றால், ஒரே ஒரு அடிதான் தூரம். அங்கு நாங்கள் என்ன செய்கிறோம் என்பது பற்றி அதிகமானோருக்குத் தெரியாது. அதுவும் நன்றாக இருக்கிறது” என்று சூர்யா கூறினார். இதையடுத்து ராதிகா சரத்குமார் குறுக்கிட்டு, ஜோதிகாவுடனான தனது நெருக்கம் குறித்தும் பேசினார். ஜோதிகாவும் நானும் நிறைய பேசுவோம். அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். அந்த மகிழ்ச்சி அவரது குடும்ப வாழ்க்கையிலும் வெளிப்படுகிறது. அதனால் சூர்யாவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். சில நேரங்களில் நான் அவரிடம், ‘நீங்கள் பாம்பே சென்று உட்கார்ந்திருக்கிறீர்களே?’ என்று கேட்பேன். அதற்கு அவர், ‘நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்பார்” என்று ராதிகா தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சூர்யா, “அவர் ரஷ்யாவுக்கோ, ஜப்பானுக்கோ செல்லவில்லை. அவருடைய சொந்த அவருடைய அம்மா வீட்டிற்குத்தான் சென்றிருக்கிறார். முதன்மையான காரணம், நிச்சயமாக அவருடைய பெற்றோர்கள்தான். அதே நேரத்தில் அங்கு அவருடைய பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்றார். சூர்யாவும் ஜோதிகாவும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதிக்கு 2007ஆம் ஆண்டு முதல் குழந்தையாக மகள் தியா பிறந்தார். அதன்பின்னர் 2010ஆம் ஆண்டு மகன் தேவ் பிறந்தார். திரைப்பட பணிகளைப் பொறுத்தவரை, சூர்யா அடுத்ததாக இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மமிதா பைஜு மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சென்னையில் சொகுசு பங்களா, ஆனா எனக்கு மும்பை வீடு தான் பிடிக்கும்: சிறிய வீட்டில் மகிழ்ச்சி இருப்பதாக சூர்யா விளக்கம்
PulseNews சுருக்கம்

கொரோனா பெருந்தொற்று காலத்தின் போது, நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா தம்பதியினர் தங்கள் குழந்தைகள் தியா மற்றும் தேவ் ஆகியோருடன் சென்னையில் இருந்த மும்பைக்கு குடிபெயர்ந்தனர். மும்பையில் வசிக்கும் ஜோதிகாவின் பெற்றோருடன் நெருக்கமாக இருக்கவும், ஜோதிகா தனது பாலிவுட் திரைப் பயணத்தைத் தொடரவும் இந்த முடிவை எடுத்தனர்.

சென்னையில் தங்களுக்குச் சொகுசு பங்களா இருந்தாலும், சிறிய வீட்டில் வாழ்வதே மகிழ்ச்சி அளிப்பதாக சூர்யா தெரிவித்துள்ளார். தனக்கு மும்பையில் உள்ள வீடு மிகவும் பிடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema