PulseNews
சினிமா

“2 வருடமாக காதலிக்கிறேன்!” காதலன் யார் என்பதை இப்போது சொல்ல முடியாது... மனம் திறந்த துஷாரா விஜயன்

‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை துஷாரா விஜயன். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘ராயன்’, ‘வேட்டையன்’, ‘வீர தீர சூரன்’ உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து கவனம் பெற்றார். இந்நிலையில், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது காதல், எதிர்கால கனவுகள் மற்றும் வாழ்க்கை குறித்த தனது பார்வை குறித்து துஷாரா விஜயன் மனம் திறந்து பேசியுள்ளார். தனது காதல் குறித்து பேசிய துஷாரா விஜயன், “நான் இரண்டு வருடமாக ஒருவரை காதலித்து வருகிறேன். அவரை முதன்முதலில் துபாயில்தான் பார்த்தேன். நாங்கள் இருவரும் இளையராஜா சாருடைய இசை மூலமாகத்தான் கனெக்ட் ஆனோம். அந்த முதல் தொடர்புக்குப் பிறகு நிறைய விஷயங்கள் தொடர்ந்து நடந்தன. இன்று நான் அவரை இவ்வளவு உறுதியாக நம்புகிறேன் என்றால், அதற்குப் பின்னால் நிறைய காரணங்கள் இருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார். மேலும், “அவர் என்னுடைய எல்லா விஷயங்களையும் பொறுத்துக்கொள்கிறார். நானே இவ்வளவு விஷயங்களை அவர் பொறுத்துக்கொள்கிறாரே என்று நினைத்து அவருக்காக பாவப்பட்டதும் உண்டு. அவர் யார் என்பதை அதற்கான நேரம் வரும்போது சொல்கிறேன்” என்று தனது காதலன் குறித்த தகவலை தற்போது வெளியிட மறுத்துள்ளார். தனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா என்றும் துஷாரா தெரிவித்துள்ளார்.“பிரியங்கா சோப்ராவை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு பெண்ணாக அவர் வெளிப்படுத்தும் தன்னம்பிக்கை என்னை மிகவும் ஈர்த்திருக்கிறது. எதிர்காலத்தில் அவருடன் இணைந்து ஒரு நல்ல ஆக்‌ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை” என்று கூறியுள்ளார்.அதேபோல், சர்வதேச அளவில் அறியப்படும் நடிகையாக வேண்டும் என்பதும் தனது மிகப்பெரிய கனவுகளில் ஒன்று என தெரிவித்துள்ளார். தனது எதிர்கால பயணம் குறித்தும் நம்பிக்கையுடன் பேசிய துஷாரா, “7 வருடங்களுக்கு முன்பு நான் இப்போது இருக்கும் இடத்தில் இருப்பேன் என்று எனக்கே தெரியாது. ஆனால் இன்னும் 7 வருடங்கள் கழித்து நான் எங்கு இருப்பேன் என்பது எனக்கு தெளிவாக தெரியும். அந்த அளவிற்கு என்னுடைய கனவுகள் மீதும், நான் பயணிக்கும் பாதை மீதும் நம்பிக்கை இருக்கிறது” என்றார். மேலும், வாழ்க்கையில் எதிர்பார்க்காத பல நல்ல விஷயங்கள் தனக்கு நடந்துள்ளதாகவும், பெரிய இலக்குகளை நிர்ணயித்து அதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வாழ்க்கையை ரசித்து வாழ்வதில் தனக்கு இருக்கும் ஆர்வம் குறித்தும் துஷாரா பேசியுள்ளார்.“வாழ்க்கையில் இருக்கும் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட ரசித்து வாழவே எனக்குப் பிடிக்கும். ‘Carpe Diem’ என்ற வார்த்தையை நான் தீவிரமாக நம்புகிறேன். அதற்கு கிடைக்கும் ஒவ்வொரு தருணத்தையும் அந்த நேரத்திலேயே ரசித்து அனுபவித்து வாழ வேண்டும் என்பதுதான் அர்த்தம். அதனால் அந்த வார்த்தையை டாட்டூவாகவும் போட்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். தான் எங்கு சென்றாலும் அந்த இடத்தையும், அந்த தருணத்தையும் முழுமையாக ரசிப்பேன் என்றும், வேறு விஷயங்களை நினைத்துக் கொண்டு நிகழ்காலத்தை தவறவிடும் பழக்கம் தன்னிடம் இல்லை என்றும் துஷாரா கூறியுள்ளார். காதல் வாழ்க்கையைப் பற்றி வெளிப்படையாக பேசிய துஷாரா, தனது காதலன் யார் என்பதை மட்டும் இப்போதைக்கு சஸ்பென்ஸாக வைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Seithipunal15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“2 வருடமாக காதலிக்கிறேன்!” காதலன் யார் என்பதை இப்போது சொல்ல முடியாது... மனம் திறந்த துஷாரா விஜயன்
PulseNews சுருக்கம்

'சார்பட்டா பரம்பரை' படத்தின் மூலம் பிரபலமான நடிகை துஷாரா விஜயன், தொடர்ந்து ராயன், வேட்டையன் மற்றும் வீர தீர சூரன் போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் காதல் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் ஒருவரை காதலித்து வருவதாக அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார். இருப்பினும், அந்த நபர் யார் என்பதை இப்போதைக்கு வெளிப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema