PulseNews
சினிமா

நூற்றாண்டு நாயகர் "பத்மஸ்ரீ' பாலசந்தர்! இது கே.பி.யின் கலைப்பயணம்! -புஷ்பா கந்தசுவாமி (15)

அப்பாவின் திடீர் தடுமாற்றம்! அ ப்பாவின் வாழ்க்கையில் நாடகம் மற்றும் திரைப்படத் தொழில் ஓரளவு நம்பிக்கையளித்தது. அவரின் புகழ் கூடுதல் பிரகாசம் பெறத் தொடங்கிய சமயத்தில் அவர் கண்ணுக்கு முன்னால் அக்கரை பச்சையாகத் தெரிந்தாலும், இந்த பயணம் தொடருமா? பொருளாதார நிலை உயருமா? என்ற கேள்விகள் மனதுக்குள் அணிவகுத்து நின்றன. அந்த நேரம் பார்த்து குடும்பத்தில் சலசலப்பு... சிறிய பூகம்பம் கிளம்பியிருந்தது. அதன் பின்னால் இருந்தவர் அப்பாவின் மாமனார். "மாப்பிள்ளை அரசாங்க வேலையை விட்டுவிட்டு டிராமா, சினிமா என்று நான்கு வருடமாக சம்பளம் இல்லாத விடுப்பு எடுத்துக் கொண்டு சுற்றுகிறார். அந்த வேலையையும் விட்டுவிடுவதாக கேள்விப்படுகிறேன். எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது' என்று தன்னுடைய சம்பந்தியிடம்... அதாவது அப்பாவின் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். இது அப்பாவின் காதுக்கும் எட்டியது. "மாமனார் கேட்பதில் அவர் கவலைப்படுவதில் நியாயம் இருக்கிறது. தன் மகள், மருமகன் சிறப்பாக வாழவேண்டும் என்று நினைப்பதில் தவறில்லையே. அவருக்கு அந்த உரிமை உண்டு' என்று அப்பாவும் அதை சரியெனப் புரிந்துகொண்டார். ஏனென்றால் நாடகம் போட்டோம், இரண்டு படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்கினோம். ஆனாலும் தொடர்ச்சியான முன்னேற்றம் இல்லையே, தொடர்ந்து படங்கள் வரவில்லையே என்கின்ற ஆதங்கம் மனக்குமுறல் அப்பாவுக்குள்ளும் யுத்தம் செய்து கொண்டி ருந்தது. அப்போது தனது நண்பர் நாகேஷை சந்தித்து, தன் மனக்குமுறல்களை கொட்டினார். "சரி முதலில் மேஜர் சந்திரகாந்த் நாடகத்தை படமாக்க முயற்சி செய்வோம். ஏவி.எம். செட்டியாரை சந்திக்கலாம்'' என்றார் நாகேஷ். அப்பா ஏவி.எம்., அவர்களை சந்திக்க அனுமதி பெற்றார் நாகேஷ். மறுநாள் அப்பா ஏவி.எம். அவர்களை சென்று பார்த்தார். இயல்பிலேயே கூச்ச சுபாவம் கொண்டவர், அதனால் தயக்கத்துடன் தொடங்கினார். "சார் நான் இப்போ கொஞ்சம் குழப்பத்துல இருக்கேன். நான் ஆபீசுக்கு சம்பளம் இல்லாத விடுப்பு போட்டு நாலு வருஷமாச்சு. ஏதோ ஒன்றிரண்டு படங்கள் வந்தது அவ்வளவுதான். எனக்கு இப்போ கொஞ்சம் பயமாயிருக்கு, தொடர்ந்து சினிமாவிலே இருப்பதா? அல்லது ஆபீசுக்கே போய்விடலாமா? என்ன பண்றது. முடிவெடுக்க முடியல...'' அப்பா சொன்னதை ஒரு பக்குவப்பட்ட பெரிய மனிதருக்குரிய ஸ்தானத்திலிருந்து அமைதியாக கேட்டுக்கொண்டார் ஏவி.மெய்யப்ப செட்டியார். "நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க. உங்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கு. நிச்சயமா பெரிய இயக்குனரா வருவீங்க'' என்றார் ஏவி.எம். "அது இல்லே சார்...'' "அப்போ ஒண்ணு செய்வோம். நாம ஒரு மூணு வருஷத்துக்கு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம். நாங்க தயாரிக்கிற படங்களை இயக்குங்க. ஆனால் ஒப்பந்த சமயத்தில் வெளியார் படம் பண்ணக்கூடாது... என்ன சொல்றீங்க?'' காதில் தேனாய் பாயும் வார்த்தைகள். ஏவி.எம். போன்ற மிகப்பெரிய ஸ்தாபனத் திலிருந்து தொடர் வாய்ப்பு. வாழ்க்கையில் செட்டிலாக இதைவிட வேறென்ன வேண்டும்? மாமனாரையும் சமாளித்துவிடலாம். இப்படி மூளை எண்ணினாலும், இதயம் அதை ஏற்க மறுத்தது. சுதந்திரமாக செயல்படவே விரும்பினார். மூளைக்கும் இதயத்திற்குமான போட்டியில் இதயமே வென்றது. இதைத்தான் "ஃபாலோ தி ஹார்ட்' என்கிறார்கள். அந்த நேரத்தில் அது ஒரு அரிய வாய்ப்பு தான். என்றாலும் அப்பா அவசரப்படவில்லை. "சார் கொஞ்சம் யோசித்துச் சொல்றேன்'' என்றார். "யோசிக்க என்ன இருக்கு?'' என்றார் ஏவி.எம். ஆனால் அப்பா யோசித்துச் சொல்கிறேன் என கால அவகாசம் கேட்டு வந்துவிட்டார். இதைப்பற்றி நண்பர்களோடு கலந்தா லோசித்தபோது "ஒப்பந்தத்துக்கு ஓ.கே. சொல்லி விட வேண்டியதானே?' என்றார்கள். நாகேஷ் கூட "ஒப்பந்தம் போட்டுக்கொள்' என்றார். ஆனாலும் அப்பா யோசித்தார். தன்னுடைய சுதந்திரத்தை ஒப்பந்தம் என்ற வட்டத்துக்குள் சிக்கவைக்க விருப்பமில்லை. ஏவி.எம். அவர்களை மறுநாள் சந்தித்த போது மிக மென்மையான குரலில் பணிவாக, "மன்னிக்கணும் சார்... ஒப்பந்தம் வேண்டாம். தயவு செய்து நீங்க எனக்காக "மேஜர் சந்திரகாந்த்' படத்தை மட்டும் தயாரிக்கவேண்டும்.'' அப்பா மீது நம்பிக்கையும், நன்மதிப்பும் வைத்திருந்த ஏவி.எம்., "சரி செய்வோம், ஸ்க்ரீன் பிளே குடுங்க'' என்றார். அவரது பெரிய மனதைக் கண்டு அப்பா நெகிழ்ந்தார். "ஒரு வாரம் டைம் கொடுங்க சார். ரெடி பண்ணி கொண்டுவருகிறேன்'' என்றார் மலர்ந்த முகத்துடன். "அப்படியே செய்யுங்க, நான் ஒரு வாரம் ஓய்வெடுக்க பெங்களூரு போறேன். ரெடி யானதும் அங்கே வந்துடுங்க. அப்புறம் கதையில் ஒரு திருத்தம். நாடகத்தில் பெண் கேரக்டரே இல்லை. படத்தில் அது அவசியம். அதையும் சேர்த்து எழுதிட்டு வாங்க'' என்று ஏவி.எம். சொன்னதும், அப்பாவுக்கு மகிழ்ச்சியில் நேற்றுவரை இருந்த குழப்பங்கள் மறையத் தொடங்கின. மூன்றுநாளில் திரைக்கதை-வசனம் முழு வடிவம் பெற்றதும், அப்பா உடனே பெங்களூருக் குச் சென்றார். புத்தகத்தைத் திறந்து பார்க்காமலே ஒரே நேர்கோட்டில் கதையை வசனத்தோடு சொன்னார். "ஓ.கே., நடிகர்கள் யாரை போடலாம்?'' -ஏவி.எம். கேட்டதும், அப்பா உற்சாகத்தோடு "நாகேஷ், மேஜர் கேரக்டருக்கு சுந்தர்ராஜன் போடலாம் நல்ல செய்வாங்க.'' "அந்த லேடி கேரக்டருக்கு "வெண்ணிற ஆடை' படம் பார்த்தீர்களா? அதுல ஜெயலலிதா எப்படி?'' "நல்லா இருக்கும் சார்'' "இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி போடலாமா?'' "மன்னிக்கணும். என்னோட நாடகங்களில் வி.குமார்னு ஒரு இளைஞர் நல்லா இசையமைக்கிறார், அவரைப் போடலாம். இந்த நாடகத்துக்கும் அவர்தான் இசை. அப்பாவின் பேச்சுக்கு ஏவி.எம். மறுப்பு சொல்லவில்லை. "அவரே இசையமைக்கட்டும், பாடல்கள் தேர்வு என் பையன் குமரன் பண்ணட்டும். நீங்க சென்னைக்கு போங்க. படப்பிடிப்புக்கான வேலைகளை தொடங்குங்கள்'' என்று ஏவி.எம். சொன்னதும், அப்பா உற்சாகமாய் திரும்பினார். படப்பிடிப்பு தொடங்கியது தீபாவளிக்குப் படம் ரிலீஸ் என்று தேதியும் நிச்சயிக்கப்பட்டது. அப்பாவின் நல்ல நேரமோ ஏவி.எம்.மின் ராசியோ தெரிய வில்லை. நல்ல நேரம் கூடிவரும் என்பதுபோல, அப்போது இன்னொரு படம் இயக்கும் வாய்ப்பு அப்பாவைத் தேடிவந்தது. ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பு. ஏவி.எம். அவர்களிடம் சென்று சொன்னார் அப்பா. அதற்கு ஏவி.எம். என்ன சொன்னார்...? (சொல்கிறேன்...) -எழுத்தாக்கம் "கலைமாமணி' சபீதா ஜோசப்

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நூற்றாண்டு நாயகர் "பத்மஸ்ரீ' பாலசந்தர்! இது கே.பி.யின் கலைப்பயணம்! -புஷ்பா கந்தசுவாமி (15)
PulseNews சுருக்கம்

இயக்குநர் கே. பாலசந்தரின் கலைப்பயணத்தையும், அவரது வாழ்வின் சவால்களையும் புஷ்பா கந்தசுவாமி விவரிக்கிறார். நாடகம் மற்றும் திரைப்படத் துறையில் பாலசந்தர் முன்னேறி வந்த சூழலில், பொருளாதார நிலை மற்றும் எதிர்காலம் குறித்த கவலைகள் அவரது மனதில் எழுந்தன.

அதே சமயத்தில், அரசாங்க வேலையை விட்டுவிட்டு கலைத்துறையில் ஈடுபட்டதைக் கண்டித்து, அவரது மாமனார் குடும்பத்தில் ஒரு சிக்கலை ஏற்படுத்தினார். தொழில் மற்றும் குடும்பச் சூழலில் நிலவிய அந்த சவாலான காலக்கட்டத்தை இந்தத் தொடர் விவரிக்கிறது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema