PulseNews
சினிமா

இந்த வார ராசி பலன் 16-8-2026 முதல் 22-8-2026 வரை

முனைவர் முருகுபாலமுருகன் எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, அலைபேசி: 0091 72001 63001, 93837 63001. கிரக பாத சாரம்: சூரியன்: ஆயில்யம்- 4. சந்திரன்: அஸ்தம்- 1. செவ்வாய்: திருவாதிரை- 1. புதன்: ஆயில்யம்- 1. குரு: பூசம்- 4. சுக்கிரன்: அஸ்தம்- 2. சனி: ரேவதி- 2 (வ). ராகு: அவிட்டம்- 4. கேது: மகம்- 2. கிரக மாற்றம்: 17-8-2026 சிம்ம சூரியன் காலை 7.58 மணிக்கு 22-8-2026 சிம்ம புதன் இரவு 7.31 மணிக்கு சந்திரன் மாறுதல் ஆரம்பம்: கன்னி 17-8-2026 மாலை 4.19 மணிக்கு- துலாம். 20-8-2026 அதிகாலை 2.30 மணிக்கு- விருச்சிகம். 22-8-2026 பகல் 02.49 மணிக்கு- தனுசு. மேஷம் (அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்) ராசியாதிபதி செவ்வாய் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதும், 4-ல் புதன், 11-ல் ராகு சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருந்தாலும் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சனி வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் குறையும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் வளமான பலன்களை அடைய முடியும். ஒரு பெரிய மனிதரின் ஆதரவானது உங்களுக்கு கிடைக்கும். வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலங்கள் உண்டாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு சக ஊழியர்கள் சில இடையூறுகளை தந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் திறமையுடன் கையாண்டு எடுத்த பணியை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப் பாக இருக்கும். மாணவ- மாணவியர்கள் கடினமான விஷயத்தைக்கூட எளிதில் புரிந்துகொண்டு படிப்பில் சிறப்பாக செயல்பட முடியும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவதன் மூலமாக வளமான பலன்களை நீங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 18, 19. ரிஷபம் (கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்) உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், திங்கட்கிழமைமுதல் 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையோடு இருக்கவேண்டும். நீங்கள் விளையாட்டுத்தனமாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக புரிந்துகொள்வார்கள் என்பதால் சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேர மென்பதால் கவுரவம் பார்க்காமல் ஒருவருக் கொரு வர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். வேலையாட்களால் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்போதைக்கு தள்ளிவைப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு மற்றவர்களுடைய வேலையும் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலையானது உண்டாகும். மாணவ- மாணவியர் கள் தேவையற்ற நட்புகளை குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் ஆகும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை நீங்கள் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நன்மை தரும். வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 20, 21. மிதுனம் (மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்) உங்கள் ராசிக்கு 2-ல் குரு, புதன், திங்கட்கிழமைமுதல் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதை யும் அதிகரிக்கும். பண வரவுகள் சாதகமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் பிறருக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருந்து மங்களகரமான சுபகாரியங்கள் கைக்கூடும். ஒருசிலருக்கு புதிய பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு உயர்வான நிலையை எட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வாய்ப்புக்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கக்கூடிய நபர்களுக்கு நல்ல இடத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று மற்றவருடைய பாராட்டுதலை எளிதில் பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, துர்கை அம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது நன்மை தரும். வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 22. கடகம் (புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்) ஜென்ம ராசியில் குரு, 12-ல் செவ்வாய், திங்கட்கிழமைமுதல் 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையோடு இருக்க வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. சக்திக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் உங்களுடைய சேமிப்புகள் குறையும். உடன் இருப்பவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள் உண்டாகும். வேலையாட்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் அவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள் ஏற்படும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் தேவையில்லாத அவப் பெயர்களை எதிர்கொள்ளக்கூடிய நேரம் என்பதால் சூழ்நிலையை புரிந்து நடந்துகொள்வது நல்லது. உடல் ஆரோக்கியரீதியாக பாதிப்புகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் கவன சிதறல்கள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் அனுகூலமான பலன்களை நீங்கள் அடைவதற்கு துர்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நல்லது. வெற்றி தரும் நாட்கள்: 16, 17. சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்) உங்கள் ராசிக்கு 12-ல் குரு, புதன், திங்கட்கிழமைமுதல் ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு இருப்பது நல்லது. அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 7-ல் ராகு, 8-ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள் ஏற்படும். நெருங்கியவர்களே தேவையில்லாத பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்போதைக்கு தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் வழியில் தேவையற்ற மனக்கவலைகள் ஏற்படும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை காரணமாக மன நிம்மதி குறைவது மட்டுமில்லாமல் அதிகாரியிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். முடிந்தவரை தேவையில்லாத பயணங்களைத் தள்ளி வைப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் வீண் நட்புகளை குறைத்துவிட்டு பயனுள்ள விஷயத்திற்கு நேரத்தை செலவிடுவது நல்லது. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு துர்கையம்மனுக்கு தீபமேற்றுவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக நன்மை கிடைக்கும். வெற்றி தரும் நாட்கள்: 18, 19. கன்னி (உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்) உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், 11-ல் குரு, புதன் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் தற்போதைக்கு விலகி நிம்மதியான நிலை உண்டாகும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்குத் தற்போதைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வெளியூர் பயணங்கள் மூலமாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களால் முடிக்கமுடியாத ஒரு காரியத்தைகூட நீங்கள் குறித்த நேரத்தில் முடிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று வெற்றிபெறக்கூடிய நேரமாகும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு இருக்கிறது. இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக அனுகூலமான பலன்களை பெறமுடியும். வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 20, 21. துலாம் (சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்) உங்கள் ராசிக்கு 9-ல் செவ்வாய், 10-ல் புதன், திங்கட்கிழமை முதல் 11-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பது நல்ல அமைப்பு என்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு தற்சமயம் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். பொருளாதார நெருக்கடி இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் எதையும் எளிதில் சமாளிக்கக்கூடிய பலம் உங்களுக்கு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு கௌரவமான நிலையினை எட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப் பாக இருக்கும். சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருக்கவேண்டும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் கடினமான விஷயத்தைகூட எளிதில் புரிந்துகொண்டு பெற்றோர், ஆசிரியரிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு துர்கையம்மனுக்கு தீபம் ஏற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நன்மை தரும். வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 22. விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை) உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு, புதன், லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். வரும் திங்கட் கிழமைமுதல் சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பண வரவுகள் பிரமாதமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கடந்தகால பிரச்சினைகள் எல்லாம் தற்போது முழுமை யாக மறையும். திருமண சுப காரியங்கள் தற்போது கைக்கூடி நிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய தேவையை எளிதில் பூர்த்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு எடுத்த பணியை குறித்து நேரத்தில் முடிக்கக்கூடிய நேரமாகும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் மன நிம்மதி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பதில்களை நீங்கள் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, துர்கையம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும். வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 20, 21. தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்) உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், 8-ல் குரு, புதன் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்தோடு இருக்கவேண்டும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும். உங்கள் ராசிக்கு தற்போது 8-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் திங்கட்கிழமைமுதல் 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் உடல்ரீதியாக இருக்கக்கூடிய சின்ன சின்ன பிரச்சினைகள் சற்று குறைவதுடன் ஒருசில வளமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தவிர்க்க வேண்டும். தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் தேவையில்லாத பழிச் சொற்களை எதிர்கொள்ளக்கூடிய ஒரு சூழல் உண்டாகலாம் என்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டும். மாணவ- மாணவியர்கள் ஞாபக மறதி ஏற்படக்கூடிய நேரம் என்பதால் படிப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும். வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 18, 19. மகரம் (உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்) உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 7-ல் குரு, புதன் சஞ்சரிப்பது மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் உங்களுடைய கனவுகள் நிறைவேறக்கூடிய நேரமாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. எடுத்த பணியை குறித்த நேரத்தில் முடித்து மற்றவரிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பெண்கள் வகையில் வளமான பலன்களை பெறுவீர்கள். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு சிறப்பான லாபத்தை ஈட்டக்கூடிய நேரமாகும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் வரும் நாட்களில் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு சஞ்சரிப்பதால் ஒருசில நேரங்களில் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கக்கூடிய யோகம் இருக்கிறது. ஒருசிலருக்கு பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நேரம் ஆகும். மாணவ- மாணவியர்கள் பள்ளி, கல்லூரி களுக்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு எதிலும் சிறப்பாக செயல்படுவீர்கள். வரும் நாட்களில் நல்ல பலன்களை அடைவதற்கு ராகு காலத்தில் துர்கையம்மனுக்கு தீபம் ஏற்றுவது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நல்லது. வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 20, 21. கும்பம் (அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்) உங்கள் ராசிக்கு 6-ல் குரு, புதன், திங்கட்கிழமை முதல் 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும். நீங்கள் விளையாட்டுத்தனமாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக புரிந்துகொள்வார்கள் என்பதால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே வீண் பேச்சை குறைப்பதும், விட்டுக் கொடுத்து செல்வதும் நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் தற்போது கிடைக்காது. தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. ஒருசிலருக்கு தேவையற்ற சட்ட சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் தொழில் தொடர்பான கணக்குகளை சரிவர பராமரிப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற நெருக்கடிகள் இருப்பது மட்டுமில்லாமல் மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்கக் கூடிய ஒரு நெருக்கடியான சூழல் உண்டாகும். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு கவனமாக நடந்துகொண்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். மாணவ- மாணவியர்கள் நீங்கள் கவனமாக இருந்தாலும் உங்கள்மீது வீண்பழிச் சொற்கள் வரும். எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை நீங்கள் பெறுவதற்கு காலபைரவரை வழிபாடு செய்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றுவதன் மூலமாக நன்மை கிடைக்கும். வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 22. மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) ராசியாதிபதி குருபகவான் புதன் சேர்க்கைப் பெற்று 5-ல் சஞ்சரிப்பதும், திங்கட் கிழமைமுதல் 6-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் வளமான பலன்களை பெறக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பொருளாதாரரீதியாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி ஏற்றமிகுந்த பலன்களை பெறமுடியும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த கடன் பிரச்சினைகள் தற்போது குறையும். தற்போது சனி வக்ரகதியில் இருப்பதால் கடந்தகால மருத்துவச்செலவுகள் தற்போது குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல ஒரு முன்னேற்றத்தை அடையக் கூடிய நேரமாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் தற்போது கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். உங்களுக்கு இருந்த அலைச்சல், டென்ஷன் எல்லாம் குறைந்து எதிலும் நிம்மதியுடன் செயல்படக் கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமல்லாமல் கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் உண்டு. வரும் நாட்களில் நற்பலன்களை நீங்கள் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, துர்கையம்மனுக்கு தீபமேற்றுவது நல்லது. வெற்றி தரும் நாட்கள்: 16, 22.

Nakkheeran16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இந்த வார ராசி பலன் 16-8-2026 முதல் 22-8-2026 வரை
PulseNews சுருக்கம்

ஆகஸ்ட் 16, 2026 முதல் ஆகஸ்ட் 22, 2026 வரையிலான இந்த வார ராசி பலன்களை முனைவர் முருகுபாலமுருகன் வழங்கியுள்ளார். சென்னை வடபழனியைச் சேர்ந்த இவரை 044 24881038 அல்லது 72001 63001, 93837 63001 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த வார காலத்தின் கிரக நிலைகளின்படி, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களின் சார அமைப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், ஆகஸ்ட் 17 அன்று சூரிய மாற்றமும், ஆகஸ்ட் 22 அன்று புதன் மாற்றமும் நிகழ்வதுடன், 17-ஆம் தேதி முதல் சந்திரனின் பெயர்ச்சி மாற்றங்களும் தொடங்குகின்றன.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema