தோழா பட நாகர்ஜூனா போல், கழுத்துக்கு கீழ் உடல் செயல்படாது; இறந்த அக்கா பற்றி உருக்கமாக பேசிய துஷாரா விஜயன்
2019-ஆம் ஆண்டு வெளியான ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான துஷாரா விஜயன், இதுவரை ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவர் ஏற்ற பெரும்பாலான கேரக்டர்கள் அவரது புகழை உயர்த்தியுள்ளன. மேலும், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும் அவர் உருவாக்கியுள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: திரையுலகில் 7 ஆண்டுகளை மட்டுமே கடந்துள்ள துஷாரா விஜயன், “சூப்பர் ஸ்டார்” ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். தனது திறமையின் மூலம் நம்பிக்கைக்குரிய நடிகையாகவும் அவர் கவனம் பெற்றுள்ளார். ஆனால் இதுவரை பலரும் அறிந்திராத தனது வாழ்க்கையின் ஒரு பக்கத்தைப் பற்றி துஷாரா விஜயன் சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார். தனது மறைந்த மூத்த சகோதரியை நினைவுகூர்ந்த அவர், அவரைப் பற்றி பேசும்போதே உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். தனது சகோதரி இறந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இன்றும் அவரை மிகவும் மிஸ் செய்வதாக துஷாரா தெரிவித்துள்ளார். எஸ்.எஸ். மியூசிக்-க்கு அளித்த பேட்டியில் தனது சகோதரி குறித்து பேசிய துஷாரா விஜயன், “எனக்கு 2 மூத்த சகோதரிகள் இருந்தார்கள். எனது 2-வது சகோதரி 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருக்கு ‘மயோபதி’ (Myopathy) என்ற பாதிப்பு இருந்தது. உண்மையில், நான் சிறு வயதிலேயே நடனத்தின் மீது ஆர்வம் ஏற்படுவதற்கு அவர்தான் காரணம். அவரால் நடக்கவே முடியாது. 2016-ஆம் ஆண்டு வெளியான ‘தோழா’ திரைப்படத்தில் நாகார்ஜுனா சார் நடித்த கேரக்டரின் நிலை எப்படி இருக்குமோ, அதுபோலத்தான் என் சகோதரியும் இருந்தார். அந்தப் படத்தில் விபத்துக்குப் பிறகு நாகார்ஜுனாவின் கேரக்டர் முடக்குவாதத்தால் பாதிக்கப்படும். ஆனால், என் சகோதரி பிறந்ததிலிருந்தே அந்த நிலையில் இருந்தார். அவரது கழுத்துக்கு மேல் எந்தப் பிரச்சினையும் இல்லை. கழுத்துக்குக் கீழ் உடல் முழுவதும் செயலிழந்திருந்தது. அதனால், அவருக்கு தேவையான அனைத்தையும் நாங்கள்தான் செய்து கொடுக்க வேண்டியிருந்தது. அவர் தனது நாற்காலியில் அமர்ந்துகொண்டு, ‘இப்படி நடனம் ஆடு, அப்படி நடனம் ஆடு’ என்று எனக்கு சொல்லிக் கொடுப்பார். உண்மையில், எல்லாமே அவரிடமிருந்துதான் தொடங்கியது என்று தொடர்ந்து பேசியபோது துஷாரா விஜயன் உணர்ச்சிவசப்பட்டார். அவரது கண்களில் கண்ணீர் வழிந்தது. நான் அவளை மிகவும் மிஸ் செய்கிறேன். இப்போது நான் வெளியே செல்லும்போது கடவுளிடம் பிரார்த்தனை செய்வதில்லை. எனது சகோதரியின் புகைப்படத்தைப் பார்த்துதான் பிரார்த்தனை செய்கிறேன். எனது மூத்த சகோதரி ஏரோநாட்டிக்கல் இன்ஜினியராக இருக்கிறார். தற்போது கனடாவில் வசித்து வருகிறார். நான் எனது இளைய சகோதரருடன் சென்னையில் சுமார் 7 ஆண்டுகள் வசித்தேன். கிட்டத்தட்ட ஒரு தாயைப் போலவே அவனை வளர்த்தேன். எங்களுடைய உறவு அப்படித்தான். உண்மையில், அவன் எனக்கு ஒரு குழந்தையைப் போன்றவன்” என்று துஷாரா கூறினார். இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் 2021-ஆம் ஆண்டு வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி திருப்புமுனையைப் பெற்ற துஷாரா விஜயன், அதன் பின்னர் ‘அன்புள்ள கில்லி’ (2022), ‘நட்சத்திரம் நகர்கிறது’ (2022), ‘அநீதி’ (2023), தனுஷின் ‘ராயன்’ (2024), ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ (2024), விக்ரமின் ‘வீர தீர சூரன்’ (2025) உள்ளிட்ட படங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஆர். மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ‘ஜி.டி.என்.’ திரைப்படமாகும்.

2019-ஆம் ஆண்டு ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் மூலம் அறிமுகமான துஷாரா விஜயன், குறுகிய காலத்திலேயே ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து திறமையான நடிகையாக உருவெடுத்துள்ளார். திரையுலகில் தனது இடத்தைப் பிடித்துள்ள அவர், சமீபத்தில் எஸ்.எஸ். மியூசிக் பேட்டி ஒன்றில் தனது மறைந்த மூத்த சகோதரியைப் பற்றி உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார்.
தனது சகோதரிக்கு ‘மயோபதி’ என்ற பாதிப்பு இருந்ததாகவும், ‘தோழா’ படத்தில் நாகார்ஜுனா நடித்த கதாபாத்திரத்தைப் போலவே கழுத்துக்குக் கீழே உடல் செயல்படாத நிலையில் அவர் இருந்ததாகவும் துஷாரா தெரிவித்தார். சிறு வயதில் தான் நடனம் கற்க அவரே ஊக்கமாக இருந்ததாகக் கூறிய அவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மறைந்ததை நினைத்து உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். தற்போது தனது சகோதரியின் புகைப்படத்தையே கடவுளாக வழிபடுவதாகவும், அவருடன் இருந்த பிணைப்பையும் அவர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.