அரிய வகை குரங்குடன் விளையாட்டு, சர்ச்சையில் சிக்கிய நடிகர் விக்ரம்: வளர்ப்பு ஆவணங்கள் குறித்து வனத்துறை விசாரணை
நடிகர் விக்ரம், அழிவின் விளிம்பில் உள்ள லார் கிப்பன் (Lar Gibbon) குரங்குடன் விளையாடும் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, சர்ச்சையில் சிக்கியுள்ளார். சுமார் ஒரு நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோ வைரலான நிலையில், வனத்துறை அதிகாரிகளின் கவனமும் இந்த விவகாரத்தின் மீது திரும்பியுள்ளது. சென்னையில் உள்ள தனியார் இல்லத்திற்கு இந்த விலங்கு எப்படி வந்தது, அதை வைத்திருக்கும் நபரிடம் அதற்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் உரிய அனுமதிகள் உள்ளனவா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். விக்ரம் வெளியிட்டுள்ள வீடியோவின் தொடக்கத்தில், ஒரு வீட்டின் வளாகத்தில் கிப்பன் அங்கும் இங்கும் ஓடுவது தெரிகிறது. பின்னர், விக்ரமின் மடியில் அமர்ந்திருக்கும் கிப்பனையும் பார்க்க முடிகிறது. தொடர்ந்து, விக்ரமின் தலைமுடியுடன் கிப்பன் விளையாடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அந்த விலங்குடன் மகிழ்ச்சியாக இருக்கும் விக்ரம், செல்ஃபி வீடியோவும் எடுத்துள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், கிப்பன் சென்னையில் உள்ள தனியார் இல்லத்திற்கு எப்படி வந்தது என்ற கேள்வியை பலரும் எழுப்பினர். அழிவின் விளிம்பில் உள்ள ஒரு விலங்கை இதுபோன்று தனியார் இடத்தில் வளர்ப்பது சட்டப்பூர்வமானதா என்ற சந்தேகமும் எழுந்தது. இதையடுத்து விக்ரம் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. கிப்பனை எப்படி பெற்றார்? வனத்துறை விசாரணை அறிவியல் ரீதியாக ஹைலோபாட்ஸ் லார் (Hylobates lar) என அழைக்கப்படும் லார் கிப்பன், சிட்டிஸ் (CITES) அமைப்பின் அப்பன்டக்ஸ் (Appendix I) பட்டியலில் இடம்பெற்றுள்ள உயிரினமாகும். இந்தியாவில், 2022-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தின் கீழ் இது பட்டிலிடப்பட்ட (Schedule IV) 4-வது விலங்காக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லார் கிப்பனை வைத்திருப்பது எப்போதுமே சட்டவிரோதம் என்று கூற முடியாது. இருப்பினும், அதற்கு தேவையான அதிகாரப்பூர்வ அனுமதிகள் மற்றும் உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும். சென்னை வனவிலங்கு வார்டன் குலால் யோகேஷ் விலாஸ், சம்பவம் தொடர்பான தகவல்களை ஆய்வு செய்வதற்காக வனத்துறை ரேஞ்சர் ஒருவரை சம்பந்தப்பட்ட இடத்திற்கு அனுப்ப உள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கிப்பனை எங்கிருந்து பெற்றனர், அதை வைத்திருப்பதற்குத் தேவையான ஆவணங்கள் உள்ளனவா என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. தகவல்களின்படி, சென்னையின் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விக்ரமின் உறவினர்களின் இல்லத்தில்தான் இந்த வீடியோ படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வீடியோவில் காணப்படும் கிப்பனுக்கு சுமார் 2 அல்லது 3 வயது இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘க்யூட்’ என நினைத்து புறக்கணிப்பது பெரிய ஆபத்து இந்த விவகாரம் தொடர்பாக வனவிலங்கு பாதுகாவலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மாநில வனவிலங்கு வாரியத்தின் உறுப்பினரும், விலங்குகள் உரிமை ஆர்வலருமான ஸ்ரவன் கிருஷ்ணன் சமூக வலைதளத்தில் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். வீடியோவில் காணப்படும் குட்டி கிப்பனை மட்டும் பார்த்து அதை ‘க்யூட்’ என ரசிக்கக் கூடாது என்றும், இதன் பின்னணியில் வனவிலங்கு கடத்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து குட்டி கிப்பன்களை கடத்தி வரும்போது, அவற்றின் தாய் மற்றும் தந்தை கிப்பன்களை வேட்டைக்காரர்கள் கொன்று விடும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற விலங்குகளுடன் இருக்கும் காட்சிகளை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பகிர்வது, சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் அமையக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். கிப்பன்கள் மழைக்காடுகளில் உள்ள உயரமான மரங்களிலும், பரந்த இயற்கையான வாழ்விடங்களிலும்தான் வாழ வேண்டும். அவற்றை வீடுகளிலோ அல்லது பண்ணை வீடுகளிலோ வளர்ப்பதற்காக வைத்திருக்கக் கூடாது என்றும் ஸ்ரவன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விக்ரம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

அபாயகரமான நிலையில் உள்ள லார் கிப்பன் வகை குரங்குடன் நடிகர் விக்ரம் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தைக் கவனத்தில் கொண்டுள்ளனர்.
சென்னையில் உள்ள தனியார் இல்லத்தில் இந்த குரங்கு எப்படி வந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த விலங்கை வளர்ப்பதற்கான உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதிகள் அவரிடம் உள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது.