ஏன் காவி நிற உடை? - சர்ச்சையான கேள்வியும் பிரியா வாரியரின் பதிலடியும்!
‘ஒரு ஆதார் லவ்’ என்ற மலையாளப் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் பிரியா வாரியர். குறிப்பாக படத்தில் இடம் பெற்ற கண்சிமிட்டும் காட்சி இணையத்தில் வைரலாகி அவரை இந்தியளவில் புகழ் பெற வைத்தது. தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், இந்தி என பயணித்து வருகிறார். தமிழில் தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்திருந்தார். இப்போது எந்த தமிழ் படத்திலும் அவர் நடிக்கவில்லை. மாறாக 2 இந்தி படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் 'கியூட்டிகுரா' டால்கம் பவுடருக்கான விளம்பர தூதராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் காவி நிற வண்ணத்தில் உடை அணிந்திருந்தார். இதனால் ஏன் காவி நிற உடை? அதற்கு ஏதேனும் சிறப்பு காரணம் இருக்கிறதா? என ஒரு நிருபர் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு கூலாக பதிலளித்த அவர், “இந்த ஆடையில் என்ன பிரச்சனை” என்றார். உடனே கேரளாவில் விடுக்கப்பட்டுள்ள ஆரஞ்ச் அலர்ட் தாக்கத்தால் அணிந்திருக்கிறீர்களா? என அந்த நிருபர் கிண்டலாக கேட்க அதற்கு பதிலளிக்க மறுத்த பிரியா வாரியர் உடனே, “இதற்கு எந்த சிறப்பு காரணமும் இல்லை. தான் விளம்பரப்படுத்தும் பிராண்டின் நிறத்துடன் அது பொருந்தியதால் அந்த நிறத்தைத் தேர்ந்தெடுத்தேன்” என்றார். இவருடைய நேர்மையான பதில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதே சமயம் அந்த நிரூபரின் கேள்வி சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஒரு நடிகரின் ஆடைக்கு ஏன் விளக்கம் தேவைப்படுகிறது, எந்த ஆடை நிறத்தையும் அரசியல் நோக்கத்தோடு பொருத்தி பார்க்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டு பதான் படத்தில் காவி நிறத்தில் தீபிகா படுகோனே பிகினி உடை அணிந்திருந்ததால் பாஜக மற்றும் இந்துத்துவா ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஒரு ஆதார் லவ்’ திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை பிரியா வாரியர், சமீபத்தில் ஒரு பவுடர் விளம்பர நிகழ்ச்சியில் காவி நிற உடை அணிந்து பங்கேற்றார். அந்த நிறத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என நிருபர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியதற்கு, தான் விளம்பரப்படுத்தும் பிராண்டின் நிறத்துடன் அது பொருந்தியதால் மட்டுமே அணிந்ததாக பிரியா வாரியர் விளக்கமளித்தார்.
கேரளாவில் நிலவும் ஆரஞ்சு அலர்ட் குறித்து நிருபர் கிண்டலாகக் கேட்ட கேள்வியை அவர் தவிர்க்க, ஆடைகளின் நிறத்தை அரசியல் நோக்கில் பார்ப்பதை விடுத்து, நடிகர்களின் உடை குறித்து தேவையில்லாத கேள்விகள் கேட்பதற்கு சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்களின் ஆடைத் தெரிவை விளக்கி அவர் அளித்த நேர்மையான பதில் தற்போது ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது.