“ஒவ்வொரு படத்துக்கும் அந்த டைம்ல மட்டும் ரொம்ப பதற்றமா இருக்கும்” – மனம் திறந்த ராஷ்மிகா மந்தானா!
தென்னிந்திய சினிமாவைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தானா. கன்னடத்தில் அறிமுகமான அவர், தெலுங்கு, தமிழ், இந்தி என அடுத்தடுத்து பல மொழிகளில் நடித்து, தற்போது இந்திய அளவில் அதிகம் கவனம் பெறும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். இந்நிலையில், சினிமாவில் பல வெற்றிகளை பெற்றிருந்தாலும், ஒவ்வொரு புதிய படத்தை தொடங்கும்போதும், அந்தப் படம் வெளியாகும்போதும் தனக்கு பதற்றம் ஏற்படும் என்று ராஷ்மிகா தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள ராஷ்மிகா, ஒரு திரைப்படத்தில் நடிப்பது என்பது தனது வாழ்க்கையின் ஒரு பகுதியை ரசிகர்களிடம் வெளிப்படுத்துவது போன்றது என்று கூறியுள்ளார். அதனால் ஒவ்வொரு படமும் தனக்கு மிகவும் ஸ்பெஷலானது என்றும், புதிய படத்தை தொடங்கும்போது தன்னிடம் ஒருவித பதற்றம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த பதற்றத்தை எதிர்மறையான விஷயமாக தான் பார்ப்பதில்லை என்றும் ராஷ்மிகா கூறியுள்ளார். மாறாக, அந்த உணர்வே தன்னை இன்னும் சிறப்பாக பணியாற்றத் தூண்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா, ரசிகர்களுக்காக செயற்கையான ஒரு பிம்பத்தை உருவாக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். நிஜ வாழ்க்கையில் தான் எப்படி இருக்கிறாரோ, அதேபோல் சமூக வலைதளங்களிலும் இருக்கவே விரும்புவதாக கூறியுள்ளார். நண்பர்களுடன் செலவிடும் நேரம், பயணங்கள், உடற்பயிற்சி உள்ளிட்ட தனது அன்றாட வாழ்க்கையின் பல்வேறு தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது தனக்கு பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், விமர்சனங்கள் வருவது இயல்பானது என்றும், அனைவரின் கருத்துகளையும் தன்னால் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார். ஆனால், அந்த விமர்சனங்களுக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்பதை தன்னால் முடிவு செய்ய முடியும் என்றும் ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார். ராஷ்மிகாவின் திரைப்பயணத்தில் ‘கிரிக் பார்ட்டி’ முக்கியமான தொடக்கமாக அமைந்தது. தொடர்ந்து வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் அவரை தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது. ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தில் அவர் நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் அவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு ‘அனிமல்’, ‘சாவா’ உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்தினார். தற்போது ‘மைசா’, ‘ரணபாலி’, ‘புஷ்பா 3’, ‘அனிமல் பார்க்’, ‘ராக்கா’ உள்ளிட்ட பல படங்கள் அவரது கைவசம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அளவுக்கு வெற்றிகளையும் அனுபவங்களையும் கடந்த பிறகும், ஒவ்வொரு புதிய படத்திற்கும் பதற்றம் ஏற்படுகிறது என்று ராஷ்மிகா கூறியிருப்பது, தனது நடிப்பை அவர் எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்கிறார் என்பதை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தென்னிந்திய மற்றும் இந்தித் திரைப்படங்களில் முன்னணி நடிகையாகத் திகழும் ராஷ்மிகா மந்தானா, இந்திய அளவில் கவனிக்கத்தக்க கலைஞராக உயர்ந்துள்ளார். கன்னடத்தில் அறிமுகமாகி, தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி எனப் பல மொழிகளில் வெற்றிகரமான படங்களில் நடித்துள்ளார்.
எத்தனை வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், புதிய படங்களைத் தொடங்கும்போதும், படங்கள் வெளியாகும்போதும் தனக்கு எப்போதும் பதற்றமாகவே இருக்கும் என்று அவர் மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் பகிர்ந்த கருத்துகள் தற்போது திரைத்துறையில் கவனத்தைப் பெற்றுள்ளன.