விக்ரமிற்கும் தொடர்பு இருக்கிறதா? - குரங்கு விவகாரத்தில் வெளிவந்த உண்மை!
நடிகர் விக்ரம் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டிருந்தார். அது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சர்ச்சையும் ஆனது. விக்ரம் விளையாடிய குரங்கு தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட அரிய வகை குரங்கான ‘லார் கிப்பான்’ என்பது தெரியவந்தது. மேலும் அக்குரங்குகள் அழியும் நிலையில் உள்ள குரங்கினம் என்பது தெரியவந்தது. இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத் திருத்தத்தின்படி, சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்ட வெளிநாட்டு விலங்கினங்களை வணிக ரீதியாக வாங்குவதும், விற்பதும், வீடுகளில் வளர்ப்பதும் சட்டவிரோதம் ஆகும். இதனால் முறைப்படி விக்ரம் விளையாடிய குரங்கு இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டதா? வனத்துறையின் அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்ற பல கேள்விகள் எழுந்தது. இந்த விவகாரம் பெரிதாக எழுந்த நிலையில் விக்ரம் அந்த வீடியோவை நீக்கி விட்டார். இருப்பினும் வைரலான வீடியோவை வைத்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த வீடியோ மறைந்த முன்னாள் முதல்வரின் மூத்த மகன் மு.க.முத்து வீட்டில் எடுத்தது தெரியவந்தது. மு.க.முத்துவின் பேரனுக்குத்தான் தனது மகளை கட்டி கொடுத்துள்ளார் விக்ரம். இதனால் மகளை பார்ப்பதற்காக சென்ற போது அங்கிருந்த குரங்கினை விளையாடி வீடியோ எடுத்துள்ளதும் அந்த குரங்கு விற்பனைக்காக வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடந்து படப்பிடிப்பில் இருந்த விக்ரமிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த குரங்கு ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த கேசவநாதன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வர விசாரணைக்காக அவருக்கு வனத்துறையினர் நோட்டிஸ் அனுப்பியிருந்தனர். அதன்படி இன்று விசாரணை நடந்தது. அதில் இந்த குரங்கு கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி மணிப்பூரிலிருந்து வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இதே போல் இன்னும் 2 குரங்குகளை அவர் வாங்கியதும் அதனை வளர்க்க அனுமதி பெற வேண்டிய காலகெடுக்குள் வனத்துறையிடம் பதிவு செய்யாததும் வெளிச்சத்திற்கு வர இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு இவர் வாங்கிய குரங்குகளில் ஒரு குரங்கு இறந்துவிட்டதால் அதையும் வனத்துறையிடம் தெரிவிக்காததால் அது தொடர்பாகவும் வழக்கு போடப்பட்டுள்ளது. இதனிடையே நடிகர் விக்ரமுக்கும், இந்த குரங்கு விற்பனைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரிய வகை குரங்கு ஒன்றுடன் விளையாடுவது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட, அழிந்து வரும் இனத்தைச் சேர்ந்த 'லார் கிப்பான்' வகை குரங்கு என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத் திருத்தத்தின்படி, சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்ட இத்தகைய வெளிநாட்டு விலங்குகளை வளர்ப்பது தொடர்பான விதிமுறைகள் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.